“தேர்தலுக்கு முன் நிராகரிப்பு.. தேர்தலுக்கு பின் ஆதரவு” – ஒரே மாசத்தில், விஜய்க்கு எத்தனை கட்சி ஆதரவு பாருங்க! மையமாக மாறிய தவெக! - Seithipunal
Seithipunal


தமிழக அரசியலில் மிகக் குறுகிய காலத்தில் பெரிய மாற்றத்தை உருவாக்கியுள்ளார் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் மற்றும் தற்போதைய முதலமைச்சர் ஜோசப் விஜய். தேர்தலுக்கு முன்பு கூட்டணி அமைக்க முன்வந்தபோதும் பெரும்பாலான கட்சிகள் தவெகவை பெரிதாக எடுத்துக்கொள்ளாத நிலையில், தேர்தலுக்கு பிறகு அதே கட்சிகள் விஜய் தலைமையிலான அரசுக்கு ஆதரவு தெரிவித்து வருவது தற்போது அரசியல் வட்டாரத்தில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.

தவெக கட்சியை தொடங்கிய இரண்டரை ஆண்டுகளிலேயே ஆட்சியைப் பிடித்துள்ள விஜய், தனது முதல் மாநாட்டிலேயே “ஆட்சியில் பங்கு” என்ற அரசியல் கோஷத்தை முன்வைத்திருந்தார். ஆரம்பத்தில் இந்த அழைப்பை பல கட்சிகள் ஏற்காத நிலையில், தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அரசியல் சூழல் முற்றிலும் மாறியுள்ளது.

2026 சட்டமன்றத் தேர்தலில் தவெக 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்ததும், முதலில் காங்கிரஸ் கட்சி விஜய்க்கு ஆதரவு தெரிவித்தது. திமுக கூட்டணியில் இருந்து விலகிய காங்கிரஸ், தனது 5 எம்.எல்.ஏக்களுடன் தவெக அரசுக்கு ஆதரவு அளிப்பதாக அறிவித்தது.

அதனைத் தொடர்ந்து விசிக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளும் தவெக அரசுக்கு வெளிப்புற ஆதரவு வழங்கின. “குடியரசுத் தலைவர் ஆட்சி வரக்கூடாது” என்பதையே காரணமாகக் கூறி இக்கட்சிகள் ஆதரவு தெரிவித்ததாக அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டது.

இதற்கிடையில், அமமுகவின் ஒரே எம்.எல்.ஏ காமராஜும் கட்சித் தலைவர் டிடிவி தினகரனின் எதிர்ப்பை மீறி தவெகவுக்கு ஆதரவு அளித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆனால், தமிழக அரசியலை அதிகமாக அதிரவைத்தது அதிமுகவில் ஏற்பட்ட பிளவுதான். எடப்பாடி பழனிசாமியின் உத்தரவை மீறி எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம் உள்ளிட்ட 25 அதிமுக எம்.எல்.ஏக்கள் சட்டசபையில் விஜய் அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர். இந்த சம்பவம் அதிமுகவின் உள்கட்டமைப்பையே கேள்விக்குறியாக மாற்றியுள்ளது.

தற்போதைய அரசியல் நிலவரத்தை பார்க்கும்போது, தமிழகத்தில் நீண்ட காலமாக நிலவி வந்த திமுக - அதிமுக இருமுனைப் போட்டி மெல்ல மாறி, “திமுக - தவெக” என்ற புதிய அரசியல் சமநிலை உருவாகி வருவதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

ஒருகாலத்தில் மாற்று அரசியல் சக்தியாக இருந்த அதிமுகவின் இடத்தை, தற்போது தவெக வேகமாக நிரப்பி வருவதாகவும் கூறப்படுகிறது. குறிப்பாக இளைஞர்கள் மற்றும் நகர்ப்புற வாக்காளர்களிடையே விஜய்க்கு கிடைத்துள்ள ஆதரவு, எதிர்கால அரசியலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என அரசியல் ஆய்வாளர்கள் மதிப்பிடுகின்றனர்.

தேர்தலுக்கு முன்பு கூட்டணி தேடிய தவெக, தேர்தலுக்கு பிறகு பல கட்சிகளின் ஆதரவைப் பெறும் அரசியல் மையமாக மாறியிருப்பது, தமிழக அரசியலில் புதிய அத்தியாயம் தொடங்கியிருப்பதற்கான அறிகுறியாக பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Rejection before the election support after the election Look how many parties supported Vijay in just one month tvk has become the center


கருத்துக் கணிப்பு

முதல்வர் பதவி ஏற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது..



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் பதவி ஏற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது..




Seithipunal
--> -->