தேர்தலில் போட்டியிடாத மமக, கொமதேக, மூமுக அங்கீகாரம் ரத்து: மேல்முறையீடு செய்யவுள்ளதாக அறிவிப்பு..!
Recognition of parties including MMA and KMDK that did not contest the election has been revoked
தமிழ்நாட்டில் கடந்த 06 ஆண்டுகளாக தேர்தலில் போட்டியிடாத 42 கட்சிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதில் மமக, கொமதேக, மூமுக ஆகிய முக்கிய கட்சிகளின் பதிவு ரத்து செய்யப்பட்டதற்கு அக்கட்சியின் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், இது தொடர்பாக விரைவில் மேல்முறையீடு செய்ய போவதாக அவர்கள் அறிவித்துள்ளனர். இந்தியாவில் பாஜக காங்கிரஸ் உள்ளிட்ட 06 தேசிய கட்சிகளும், 67 மாநில கட்சிகளும் தேர்தல் கமிஷனால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளாக உள்ளன. இவை தவிர சுமார் 03 ஆயிரம் சிறிய கட்சிகள் தேர்தல் கமிஷனில் பதிவு செய்யப்பட்டிருந்த கட்சிகள் அனைத்தும் அங்கீகரிக்கப்படாத கட்சிகளாக இயங்கி வருகின்றன.
இந்நிலையில், இந்த கட்சிகளுக்காக தேர்தல் ஆணையம் பல்வேறு விதிமுறைகளை வகுத்துள்ளது. அவற்றை மீறும் கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்தும் வருகிறது.

அந்த வகையில் கடந்த மாதம் 09-ஆம் தேதி நாடு முழுவதும் 334 கட்சிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டது. அதில் தமிழகத்தைச் சேர்ந்த 22 கட்சிகள் இடம்பெற்றிருந்தன. இந்நிலையில் 02-வது கட்டமாக நாடு முழுவதும் தேர்தல் கமிஷனின் விதிமுறைகளை மீறியுள்ள 474 பதிவு செய்யப்பட்டு, அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளின் பதிவை தேர்தல் ஆணையம் ரத்து செய்துள்ளது.
இதில் தமிழகத்தில் சுமார் 42 கட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதுவரை தமிழகத்தைச் சேர்ந்த 64 கட்சிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளன. அடுத்ததாக, 03-வது கட்டமாக கடந்த 2021-ஆம் நிதியாண்டு முதல் கணக்குகளை தாக்கல் செய்யாத 359 கட்சிகள் அடையாளம் காணப்பட்ட நிலையில், அந்த கட்சிகளும் விரைவில் நீக்கப்படவுள்ளன. குறித்த பட்டியலில் தமிழகத்தில் 39 கட்சிகள் இடம்பெற்றுள்ளன. ஏனெனலில் கடந்த 02 மாதங்களில் மட்டும் நாடு முழுவதும் 808 கட்சிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்திய தேர்தல் ஆணையத்தால் நடத்தப்பட்ட தேர்தல்களில் தொடர்ந்து 06 ஆண்டுகளாக போட்டியிடாதது உள்ளிட்ட விதிமீறலால் இந்த கட்சிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக அறிக்கையில் கூறியுள்ளது. இந்நிலையில் ஜவாஹிருல்லா தலைவராக உள்ள மனிதநேய மக்கள் கட்சியின் பதிவை தேர்தல் ஆணையம் ரத்து செய்துள்ளது.
மேலும், கடந்த 03 தேர்தல்களில் திமுக கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட மமக தனி சின்னத்தில் போட்டியிடாததால் பதிவை இழந்துள்ளது. மேலும், ஜான் பாண்டியன் தலைவராக உள்ள தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் பதிவு, தமிமுன் அன்சாரியின் மக்கள் ஜனநாயக கட்சியின் பதிவு, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் பதிவு, எர்ணாவூர் நாராயணனின் சமத்துவ மக்கள் கழகத்தின் பதிவு, என்.ஆர்.தனபாலனின் பெருந்தலைவர் மக்கள் கட்சி, மூவேந்தர் முன்னேற்றக்கழகம் ஆகிய கட்சிகளின் பதிவை தேர்தல் ஆணையம் ரத்து செய்துள்ளது.
இதே நேரத்தில், கொமதேக கட்சி திமுக சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ள நிலையில், அவரது கட்சியின் பதிவும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதற்கு குறித்த கட்சிகளின் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா கூறியுள்ளதாவது:
'தேர்தல் ஆணையத்துக்கு எங்களுடைய விளக்கங்களை எல்லாம் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி வழியாக அனுப்பி வைத்தோம். 29ஏ அடிப்படையில் கட்சிகளின் பதிவை ரத்து செய்வதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த 29ஏவில் கட்சிகளின் பதிவை ரத்து செய்வது தொடர்பாக எதுவும் கூறவில்லை. தேர்தல் ஆணையத்தில் மோசடியான வகையில், தவறான வழியில் பதிவு செய்தால் தான் ஒரு கட்சியை பதிவு பெற்ற கட்சி என்ற நிலையில் இருந்து நீக்க முடியும்.
ஒரு அரசு சட்டவிரோதமான கட்சி என்று அறிவித்தால் தான் அந்த கட்சியின் பதிவை நீக்க முடியும். எங்கேயும் தேர்தலில் பங்கு பெறாத காரணத்தை காட்டி பதிவு பட்டியலில் இருந்து நீக்க தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் கிடையாது. தேர்தல் ஆணையத்திற்கு தேர்தல் நடத்துவதற்கான அதிகாரம் மட்டும் உள்ளது. எங்கள் கட்சியின் பதிவு ரத்து தொடர்பாக நாங்கள் விரைவில் மேல்முறையீட்டை மேற்கொள்வோம். என்று கூறியுள்ளார்.
English Summary
Recognition of parties including MMA and KMDK that did not contest the election has been revoked