பதுங்கிருந்த பாகிஸ்தான் தீவிரவாதிகளை சுற்றி வளைத்த ராணுவம்: விடிய விடிய துப்பாக்கிச் சண்டை..!
Army surrounds Pakistani terrorists in Jammu and Kashmir
உதம்பூர் வனப்பகுதியில் பதுங்கியிருந்த 04 ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தியதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீரின் உதம்பூர் மற்றும் தோடா மாவட்டங்களின் டுடு-பசந்த்கர் வனப்பகுதியில் பயங்கரவாதிகளின் நடமாட்டம் அதிகமாகக் காணப்படுகிறது. இதனையடுத்து கடந்த ஜூன் மாதம் 26-ஆம் தேதி இதே வனப்பகுதியில் பதுங்கியிருந்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் முக்கிய தளபதி ஒருவனை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றுள்ளனர்.
மேலும், கடந்த ஏப்ரல் மாதம் 25-ஆம் தேதி நடைபெற்ற மற்றொரு துப்பாக்கிச் சண்டையில் ராணுவ வீரர் ஒருவர் வீரமரணம் அடைந்துள்ளார். இந்நிலையில், உதம்பூர் மாவட்டத்தின் சியோஜ் தார் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, பாதுகாப்புப் படையினர் நேற்றிரவு 08 மணியளவில் அப்பகுதியை சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தினர்.

அப்போது, அங்கு மறைந்திருந்த பயங்கரவாதிகள் ராணுவத்தினரை நோக்கி துப்பாக்கியால் சுடத் தொடங்கிய நிலையில், பாதுகாப்புப் படையினரும் பதிலடி கொடுத்தனர். இதன் போது நடந்த கடும் துப்பாக்கிச் சண்டையில் ராணுவ வீரர் ஒருவர் காயமடைந்துள்ளார். அப்போது சுற்றி வளைக்கப்பட்ட பயங்கரவாதிகள் பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பைச் சேர்ந்தவர்கள் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த துப்பாக்கிச் சண்டை விடிய விடிய தொடர்ந்து நடைபெற்றதால் அப்பகுதிக்கு கூடுதல் படைகள் வரவழைக்கப்பட்டுள்ளன.
மேலும், பயங்கரவாதிகள் தப்பிச் செல்லாதவாறு அப்பகுதி முழுவதும் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இதேபோல், கிஷ்ட்வார் மாவட்டத்திலும் நேற்று இரவு 08 மணியளவில் மற்றொரு துப்பாக்கிச் சண்டை நடந்துள்ளது. ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத அமைப்புகளின் வலைப்பின்னலை முற்றிலுமாக சிதைக்கும் நோக்கில் ராணுவமும், காவல்துறையும் தங்களது நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
English Summary
Army surrounds Pakistani terrorists in Jammu and Kashmir