ஜனநாயகன் விவகாரத்தில் விஜய்க்கு ஆதரவாக நிற்கும் ராகுல் காந்தி.. தவெக கூட்டணிக்கு அச்சாரமா? பிரவீன் சக்ரவர்த்தி பதில்!
Rahul Gandhi stands by Vijay on Janyayan issue Is it a threat to the Thaweka alliance Praveen Chakraborty response
விஜய் நடித்துள்ள ஜனநாயகன் திரைப்படத்திற்கு ஆதரவாக ராகுல் காந்தி கருத்து பதிவு செய்ததற்கும், அரசியல் கூட்டணிக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகி பிரவீன் சக்ரவர்த்தி தெரிவித்துள்ளார். ராகுல் காந்தியின் கருத்து அரசியல் பேரம் அல்லது கூட்டணிக்கான அறிகுறி அல்ல என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
சென்சார் சான்றிதழ் வழங்கப்படாத காரணத்தால், தவெக தலைவர் விஜய் நடித்துள்ள ஜனநாயகன் திரைப்படம் திட்டமிட்டபடி வெளியாகவில்லை. தணிக்கை சான்றிதழ் கோரி படக்குழு நீதிமன்றத்தை அணுகியபோதும், தணிக்கை வாரியம் தரப்பில் பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதனால் தேர்தலுக்கு முன் படம் வெளியாகுமா என்ற சந்தேகம் ரசிகர்கள் மற்றும் அரசியல் வட்டாரங்களில் எழுந்துள்ளது.
இந்த விவகாரத்தில் மத்திய அரசு, குறிப்பாக பாஜக, சென்சார் அமைப்பை அரசியல் ஆயுதமாக பயன்படுத்துவதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. இதன் பின்னணியில், ஜனநாயகன் திரைப்படத்திற்கும் நடிகர் விஜய்க்கும் ஆதரவாக ராகுல் காந்தி தனது எக்ஸ் (X) சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில், “ஜனநாயகன் படத்தைத் தடுக்க மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் மேற்கொள்ளும் முயற்சிகள் தமிழ் பண்பாட்டின் மீதான தாக்குதல். தமிழ் மக்களின் குரலை அடக்க பிரதமர் மோடி ஒருபோதும் வெற்றி பெற மாட்டார்” என அவர் குறிப்பிட்டிருந்தார்.
இதனைத் தொடர்ந்து, காங்கிரஸ் – தவெக கூட்டணி உருவாகுமா என்ற கேள்விகள் அரசியல் வட்டாரங்களில் எழுந்தன. இந்த நிலையில், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த பிரவீன் சக்ரவர்த்தி, “ராகுல் காந்தி வெளியிட்ட கருத்து ஒரு அரசியல் நிலைப்பாடு மட்டுமே. அது எந்த கூட்டணிக்கும் அடையாளம் அல்ல” என்று விளக்கம் அளித்தார்.
மேலும் அவர் பேசுகையில், “மத்திய அரசு நாட்டின் பல அமைப்புகளை பயன்படுத்தி எதிர்க்கட்சிகளின் குரலை நசுக்க முயற்சிக்கிறது. இது தமிழ்நாட்டின் பண்பாட்டுக்கும் கருத்துச் சுதந்திரத்துக்கும் எதிரானது. சென்சார் போர்டு தற்போது பாஜகவின் அரசியல் ஆயுதமாக மாறியுள்ளது. காங்கிரஸ் கட்சி சுதந்திரத்தை பெற்றுக் கொடுத்த கட்சி என்பதால், அதன் நிர்வாகிகள் தங்கள் கருத்துகளை வெளிப்படையாக சொல்ல உரிமை உண்டு. ஆனால் அது கட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் இருக்கக் கூடாது” என்றார்.
தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணி வலுவாகவே இருப்பதாக கூறிய பிரவீன் சக்ரவர்த்தி, ராகுல் காந்தியின் நீலகிரி வருகைக்கும், எந்தவிதமான கூட்டணி மாற்றத்திற்கும் தொடர்பில்லை என்றும் உறுதிப்படுத்தினார். பிரவீன் சக்ரவர்த்தி விஜய்யை சந்தித்த பிறகே திமுக – காங்கிரஸ் கூட்டணியில் கருத்து வேறுபாடுகள் குறித்து பேச்சுகள் எழுந்தது குறிப்பிடத்தக்கது.
English Summary
Rahul Gandhi stands by Vijay on Janyayan issue Is it a threat to the Thaweka alliance Praveen Chakraborty response