''சட்டப்பேரவையில் தனிமனித, தனிக்கட்சி துதிப் பாடல்தான் அதிகம்''; பிரேமலதா விஜயகாந்த் அதிருப்தி..!
Premalatha Vijayakanth expresses dissatisfaction that the Legislative Assembly is dominated by songs praising individuals
''சட்டப்பேரவையில் எதைப் பற்றி பேச வேண்டுமோ, அதைப் பற்றி பேசாமல் திசை திரும்பி, தனிமனித துதிப் பாடல் தான் அதிகமாக உள்ளது'' என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக தலைமைச் செயலக வளாகத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசும் போது கூறியதாவது;
சட்டப்பேரவையில் ஆளுநர் உரை மீது நடந்த விவாதத்தில் நன்றி தெரிவித்து உறுப்பினர்கள் பேசினார். அப்போது உறுப்பினர்களின் பேச்சு என்பது தொடர்ந்து நீடித்து கொண்டே போகிறது. அவர்கள் உரையில் தனிக் கட்சியை பற்றியும், தனித் தலைவர்களை பற்றியும் துதிப் பாடல்கள் தான் அதிகமாக இருக்கின்றன என்று விமர்சித்துள்ளார்.

இது குறித்து பேரவைத் தலைவர், ''இது ஆளுநர் உரை மீது நன்றி தெரிவிக்கும் தீர்மானம், அதைப்பற்றி மட்டும் பேசுங்கள்'' என பல முறை கூறியும், தனிமனித துதிப் பாடல்களும், தனிக்கட்சி துதிப் பாடல்களும் தான் பேசப்படுகின்றன. இது கவலை அளிக்கக் கூடிய விஷயம் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
அதாவது, எதைப் பற்றி பேச வேண்டுமோ, அதைப் பற்றி பேசாமல் திசை திரும்பி வேறு எதையோ பேசிக் கொண்டிருக்கின்றனர் என்றும், அது எப்போது முடியும் என்பதும் கூட தெரியவில்லை என்று சாடியதோடு, தலைவர்கள் துதிப் பாடல் பற்றி பேசினால், நாங்கள் கூட எவ்வளவு வேண்டுமானாலும் பேசலாம் என்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

அத்துடன், தமிழகத்தில் சாதி, மத, இனம், மொழிக்கு அப்பாற்பட்டவர் தேமுதிக தலைவர் விஜயகாந்த். இவ்வாறு ஒவ்வொரு கட்சியும், அவரவர் தலைவர்களின் பெருமைகளை பேசுவதற்காக சட்டப்பேரவையை பயன்படுத்தினால் அது ஒரு நல்ல எடுத்துக்காட்டாக இருக்காது என்றும், சட்டப்பேரவையை பொறுத்தவரை ஆரோக்கியமான விவாதங்கள் இடம்பெற வேண்டும் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
தொடர்ந்து பிரேமலதா கூறுகையில், சட்டப்பேரவை நிகழ்வுகள் நேரலை கொடுக்கப்படும் என்று கூறினர். ஆனால், பாதியிலேயே துண்டித்து விட்டதாக தெரிகிறது. பேரவையில் நடக்கும் நிகழ்வுகளை மக்கள் நேரடியாக பார்க்க வேண்டும். அப்போதுதான் மக்களுக்கு என்ன நடக்கிறது என்பது தெரியும். அதில் என்ன தவறு? என்று கூறியதோடு, சட்டப்பேரவையே மக்கள் வரிப்பணத்தில் தானே நடக்கிறது. இது தொடர்பாக பேரவைத் தலைவரின் கவனத்துக்கு கொண்டு செல்வேன் என்று செய்தியாளர்களிடம் குறிப்பிட்டுள்ளார்.
English Summary
Premalatha Vijayakanth expresses dissatisfaction that the Legislative Assembly is dominated by songs praising individuals