நல்லாட்சிக்குப் பாராட்டு...நீண்ட ஆயுளுக்குப் பிரார்த்தனை…! - முதல்வருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அரசியல் தலைவர்கள்!
Praise good governance Pray long life Political leaders wish Chief Minister happy birthday
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் தமிழகத்தின் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் இன்று தனது 73-வது பிறந்தநாளை உற்சாகமாகக் கொண்டாடி வருகிறார். இதையொட்டி அரசியல் தலைவர்கள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரிடமிருந்து அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

அந்த வகையில், தமிழக ஆளுநர் ஆர். என். ரவி தனது சமூக வலைத்தளப் பதிவில், முதல்வருக்கு மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்து, அவர் நல்ல ஆரோக்கியத்துடனும் நீண்ட ஆயுளுடனும் மகிழ்ச்சியாக வாழ இறைவனை பிரார்த்திப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், சமூக நீதியையும் தமிழ்நாட்டின் முன்னேற்றத்தையும் இரு கண்களாகக் கொண்டு சிறந்த நல்லாட்சியை வழங்கி வரும் தலைவர் எனப் பாராட்டி, இடையறாத உழைப்பின் அடையாளமாகத் திகழும் அவர் மேலும் பல ஆண்டுகள் வளர்ச்சிப் பாதையில் மாநிலத்தை வழிநடத்த வேண்டும் என தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
அதேபோல், பாரதிய ஜனதா கட்சியின் மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை தனது பதிவில், முதல்வருக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துகள் தெரிவித்ததுடன், நல்ல உடல் நலத்துடன் மக்களுக்கு தொடர்ந்து சேவை செய்ய இறைவன் அருள் புரியட்டும் என வாழ்த்தியுள்ளார்.
மேலும், காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர், தமிழ்நாட்டின் நலனுக்காக பாடுபடும் முதல்வருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்து, நீண்ட ஆயுளும் ஆரோக்கியமும் மகிழ்ச்சியும் எப்போதும் துணை நிற்கட்டும் என்றும், சமூக நீதி மற்றும் ஜனநாயகத்தை காக்கும் அவரது பயணம் தொடர்ந்து வெற்றி பெறட்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
English Summary
Praise good governance Pray long life Political leaders wish Chief Minister happy birthday