உட்கட்சி எதிர்ப்பா? அதிகாரிகள் சதியா? தவெகவில் சி. விஜயபாஸ்கர் இணைவது தள்ளிப்போகும் பின்னணி!
Postponement of C Vijayabaskar's Induction Into TVK Sparks Speculation
அதிமுகவிலிருந்து விலகித் தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்துள்ள முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர், தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைவது தற்காலிகமாகத் தள்ளிப்போயுள்ளதாக வெளியாகி இருக்கும் தகவல்கள் தமிழக அரசியல் வட்டாரத்தில் புதிய விவாதங்களைக் கிளப்பியுள்ளன.
அதிமுக பிளவும் ராஜினாமாவும்
நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக எஸ்பி. வேலுமணி தரப்பு எம்.எல்.ஏ.க்கள் பிரிந்து, சட்டப்பேரவை நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெக அரசுக்கு ஆதரவளித்தனர். இதனால் அதிமுகவில் இபிஎஸ் அணி, எஸ்பி. வேலுமணி அணி என இரு பிரிவுகள் உருவாயின. பின்னர் இரு அணிகளும் இணைந்தாலும், இபிஎஸ்ஸுடன் ஏற்பட்ட கருத்து முரண்பாடுகளால் அதிருப்தி அணியில் இருந்த மரகதம் குமரவேல், ஜெயக்குமார், சத்யபாமா மற்றும் இசக்கி சுப்பையா ஆகியோர் ஏற்கனவே பதவிகளை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்தனர். அவர்களைத் தொடர்ந்து, புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தொகுதி எம்.எல்.ஏ.வான சி. விஜயபாஸ்கரும் இபிஎஸ் மீது கடுமையான விமரிசனங்களை முன்வைத்துத் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
தவெகவில் இணைவதில் தாமதம் ஏன்?
அதிமுகவிலிருந்து வெளியேறிய விஜயபாஸ்கர் தவெக பொதுச்செயலாளரும் அமைச்சருமான என். ஆனந்தை இருமுறை நேரில் சந்தித்துப் பேசினார். இதனைத் தொடர்ந்து, ஜூன் 29-ஆம் தேதி திங்கள்கிழமை மாலை நீலாங்கரையில் உள்ள தனியார் மண்டபத்தில் முதல்வர் விஜய் முன்னிலையில் அவர் தவெகவில் இணையப் பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டன. ஆனால், தற்பொழுது இந்த நிகழ்வு ஜூலை 2-ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தத் தள்ளிப்போகலுக்குப் பின்னணியில் இரண்டு முக்கியக் காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன. நிர்வாக ரீதியாக ஜூன் 29, 30 ஆகிய தேதிகளில் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடு நடைபெறுவதால் அதில் முதல்வர் விஜய் பங்கேற்க வேண்டியுள்ளது ஒரு காரணம் எனச் சொல்லப்படுகிறது. மற்றொரு புறம், விஜயபாஸ்கர் மீது ஏற்கனவே இருக்கும் சொத்துக்குவிப்பு வழக்கு மற்றும் சிபிஐ விசாரித்து வரும் குட்கா ஊழல் வழக்கு ஆகியவற்றைச் சுட்டிக்காட்டி, ஊழல் கறையுள்ள ஒருவரைத் தவெகவில் இணைக்கக் கூடாது எனப் புதுக்கோட்டை மாவட்ட தவெக நிர்வாகிகளும், சில மூத்த தலைவர்களும் தலைமைக்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவதாகவும் அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
English Summary
Postponement of C Vijayabaskar's Induction Into TVK Sparks Speculation