"ரூ. 50 கோடிக்கு விற்றுப்போனவர்கள் கிளர்ச்சியாளர்கள் அல்ல, துரோகிகள்!" - சிவசேனா எம்பி சஞ்சய் ராவத் ஆவேசம்!
Sanjay Raut Slams Rebel MPs Rebels are Like Bhagat Singh You are Just Traitors for 50 Crores
மகாராஷ்டிர அரசியலில் கட்சித் தாவல் மற்றும் எம்.பி.க்கள் ராஜினாமா விவகாரம் பெரும் புயலைக் கிளப்பியுள்ள நிலையில், உத்தவ் தாக்கரே சிவசேனா கட்சியின் மூத்த தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சஞ்சய் ராவத் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, தங்களைக் 'கிளர்ச்சியாளர்கள்' (Rebels) என்று அழைத்துக் கொள்ளும் அதிருப்தி மக்கள் பிரதிநிதிகளைத் 'துரோகிகள்' என்று மிகக் காரசாரமான வார்த்தைகளால் அவர் சாடினார்.
தியாகிகளுடன் ஒப்பிடக் கூடாது
செய்தியாளர்கள் சந்திப்பில் 'கிளர்ச்சி' என்ற வார்த்தைக்கான உண்மையான அர்த்தத்தை விளக்கிய சஞ்சய் ராவத், "நாட்டிற்காக ஒரு மிகப்பெரிய புரட்சியை முன்னெடுத்து வழிநடத்துபவரே வரலாற்றில் கிளர்ச்சியாளர் என அழைக்கப்படுகிறார். பகத் சிங் ஒரு கிளர்ச்சியாளர்; வீர சாவர்க்கர் ஒரு கிளர்ச்சியாளர்; ராஜகுரு, சுக்தேவ் மற்றும் அஷ்பகுல்லா கான் ஆகியோர் தங்களது தாய்நாட்டிற்காகப் போராடிய உண்மையான கிளர்ச்சியாளர்கள். அவர்கள் யாரும் துரோகிகள் அல்ல. ஆனால், தற்பொழுது பதவியை ராஜினாமா செய்துள்ள இந்த மக்கள் பிரதிநிதிகள் தங்களைக் கிளர்ச்சியாளர்கள் எனக் கூறிக்கொள்கிறார்கள். வெறும் 50 கோடி ரூபாய் பணத்திற்காகத் தனது கொள்கையை விற்றுவிட்டு மாறுபவர் எப்படி ஒரு கிளர்ச்சியாளராக முடியும்?" என்று அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார்.
அகராதியிலிருந்து 'துரோகி' வார்த்தையை நீக்குங்கள்
அரசியல் லாபத்திற்காகக் கட்சி மாறியவர்களை நோக்கித் தனது கடுமையான விமரிசனங்களைத் தொடர்ந்த அவர், "நாம் ஒரு 'ஹராம்கோரை' (நன்றி கெட்டவரை) அப்படி அழைக்காமல், அதற்குப் பதிலாக அவரை உத்தம 'அரிச்சந்திரன்' என்றா அழைக்க வேண்டும்? நீங்கள் கட்சிக்கும், உங்களை நம்பி வாக்களித்த மக்களுக்கும் துரோகம் இழைத்துள்ளீர்கள்; அதனால் நீங்கள் 'துரோகி' என்றுதான் அழைக்கப்படுவீர்கள். இதில் இழிவாக நினைப்பதற்கு என்ன இருக்கிறது? துரோகி என்பது அவ்வளவு இழிவான வார்த்தை என்று நீங்கள் கருதினால், முதலில் அந்த வார்த்தையையே அகராதியிலிருந்து நீக்கிவிடுங்கள்" என்று மிகக் காட்டமாகத் தெரிவித்தார். சஞ்சய் ராவத்தின் இந்த அதிரடிப் பேச்சு தற்பொழுது தேசிய அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Sanjay Raut Slams Rebel MPs Rebels are Like Bhagat Singh You are Just Traitors for 50 Crores