புதிய தலைமைச் செயலக இடத்தைத் தேர்வு செய்தது விஜய்யா, ஜோதிடரா? – ஆர்டிஐ பதிலை வைத்து கனிமொழி எம்பி சரமாரி கேள்வி! - Seithipunal
Seithipunal


சென்னை பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைப்பதற்கான இடத்தைத் தேர்வு செய்தது யார் என்றும், தமிழ்நாட்டில் நடப்பது மக்கள் ஆட்சியா அல்லது ஜோதிடர் ஆட்சியா என்றும் திமுக எம்பி கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார். புதிய தலைமைச் செயலகத்திற்காக பட்டினப்பாக்கம் பகுதி எந்த அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டது என்பது குறித்த தகவல்கள் தங்களிடம் இல்லை எனத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தமிழக அரசின் பொதுத்துறை அளித்த பதிலைச் சுட்டிக்காட்டி அவர் இந்த விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.

சென்னை செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் தற்போது தமிழக தலைமைச் செயலகம் செயல்பட்டு வருகிறது. அங்கு போதிய இடவசதி இல்லாததால், புதிய தலைமைச் செயலகம் அமைப்பதற்கான நடவடிக்கைகளில் தமிழக அரசு தீவிரம் காட்டி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள வீட்டு வசதி வாரிய வளாகத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க அரசு திட்டமிட்டதாகத் தகவல்கள் வெளியாகின.

ஆனால், பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கப்படுவதற்கு அப்பகுதி மீனவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அங்கு தலைமைச் செயலகம் அமைக்கப்பட்டால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இதற்கிடையே, சென்னை பல்லவன் இல்லத்தில் புதிய தலைமைச் செயலகத்தை அமைப்பது குறித்து தமிழக அரசு ஆலோசித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தச் சூழலில், பட்டினப்பாக்கம் பகுதியை புதிய தலைமைச் செயலகத்திற்கான இடமாகத் தேர்வு செய்ததற்கான ஆய்வு விவரங்கள் மற்றும் நடைமுறைகள் குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேள்விகள் எழுப்பப்பட்டன. புதிய தலைமைச் செயலகத்திற்காக பட்டினப்பாக்கம் நிலத்தைத் தேர்வு செய்வதற்கு முன்பு முறையான சாத்தியக்கூறு ஆய்வு நடத்தப்பட்டதா, அந்த இடத்தை இறுதி செய்ய என்னென்ன விதிமுறைகள் மற்றும் நடைமுறைகள் பின்பற்றப்பட்டன, பட்டினப்பாக்கத்தைத் தவிர வேறு எந்தெந்த இடங்கள் பரிசீலிக்கப்பட்டன என்பன உள்ளிட்ட கேள்விகள் முன்வைக்கப்பட்டன.

இந்த மனுவை ஆய்வு செய்த தமிழக அரசின் பொதுத்துறை (கட்டடங்கள்), புதிய தலைமைச் செயலகம் அமைப்பதற்காகப் பட்டினப்பாக்கம் பகுதி எவ்வாறு தேர்வு செய்யப்பட்டது என்பது குறித்த எந்தத் தகவலும் தங்களிடம் இல்லை என்று எழுத்துப்பூர்வமாகப் பதிலளித்துள்ளது. இந்தப் பதில் தற்போது அரசியல் வட்டாரத்தில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆர்டிஐ மூலம் பெறப்பட்ட பதிலைத் தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள திமுக எம்பி கனிமொழி, தமிழக அரசின் முடிவைக் கடுமையாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “புதிய தலைமைச் செயலகத்திற்கு பட்டினப்பாக்கத்தில் இடம் தேர்வு செய்ததற்கான ஆய்வு விவரங்கள் தங்களிடம் இல்லை என்று RTI மூலம் எழுப்பிய கேள்விக்கு தவெக அரசு பதிலளித்திருக்கிறது. அப்படியென்றால், இடத்தைத் தேர்வு செய்தது யார்? முதலமைச்சர் விஜய் அவர்களா? இல்லை ஜோதிடரா? தமிழ்நாட்டில் நடப்பது மக்கள் ஆட்சியா, ஜோதிடர் ஆட்சியா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

புதிய தலைமைச் செயலகம் அமைப்பதற்கான இடத் தேர்வில் முறையான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டனவா என்ற கேள்வியை ஆர்டிஐ பதில் எழுப்பியுள்ள நிலையில், கனிமொழியின் விமர்சனமும் தமிழக அரசியல் வட்டாரத்தில் புதிய விவாதத்தை உருவாக்கியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Was it Vijay or an astrologer who chose the site for the new Secretariat MP Kanimozhi poses a barrage of questions based on an RTI response


கருத்துக் கணிப்பு

இடைத்தேர்தல் முடிவுகள் யாருக்கு பெரும் பின்னடைவு...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இடைத்தேர்தல் முடிவுகள் யாருக்கு பெரும் பின்னடைவு...!


செய்திகள்



Seithipunal
--> -->