சிஜேபிக்கு ஆதரவு..பாஜகவுக்கு எதிர்ப்பு! பாஜக அரசுக்கு எதிராக பேசிய அண்ணாமலை! ரூட்டை மாற்றும் அண்ணாமலை!
Support for CJP opposition to the BJP Annamalai speaks out against the BJP government is he changing his course
சிஜேபி கட்சியினர் போராட்டம் மற்றும் கைது நடவடிக்கைகள் தொடர்பாகப் பேசியுள்ள வி த லீடர்ஸ் அமைப்பின் நிறுவனர் அண்ணாமலை, மத்திய அரசின் நடவடிக்கைகளை மறைமுகமாக விமர்சிக்கும் வகையில் கருத்துகளைத் தெரிவித்துள்ளார். “ஒரு கட்சி போராடுவதற்கு உரிமை இருக்கிறது. தவறு செய்தால் நடவடிக்கை எடுங்கள்; ஆனால், அதைச் சரியான முறையில் செய்யுங்கள்” என்று அவர் கூறியிருப்பது அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.
தமிழக அரசியலில் முக்கியத் தலைவர்களில் ஒருவராக இருந்த அண்ணாமலை, தமிழக பாஜக தலைவராகப் பொறுப்பு வகித்தார். பின்னர் பாஜகவிலிருந்து விலகிய அவர், ‘வி த லீடர்ஸ்’ என்ற அமைப்பைத் தொடங்கினார். 2031-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடத் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் அறிவித்துள்ளார். இந்த நிலையில், அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசிய கருத்துகள் அரசியல் வட்டாரத்தில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.
அந்த நிகழ்ச்சியில் பேசிய அண்ணாமலை, “நம்முடைய கருத்துகளை வெளிப்படுத்த வேண்டும். நாட்டில் தவறு என்று ஒரு விஷயத்தைப் பார்த்தால் அதைப் பற்றிப் பேச வேண்டும். பிரதமர் மோடி நல்லது செய்யும்போது, அவர் அருமையான பிரதமர் என்று பாராட்டுகிறோம். அவர் நல்லது செய்யட்டும்; அவருக்குத் துணையாக இருப்போம் என்று எப்போதும் சொல்வோம்” என்றார்.
தொடர்ந்து சிஜேபி கட்சியினர் குறித்துப் பேசிய அவர், “இந்தியாவில் இளைஞர்களைத் திரட்டி பல இடங்களில் போராட்டம் நடத்தி, பல்வேறு கருத்துகளை முன்வைக்கும் சிஜேபி கட்சி உள்ளது. அந்தக் கட்சிக்கு வி த லீடர்ஸ் அமைப்பு ஆதரவு அளிக்குமா என்று கேட்டால், ஒருபோதும் ஆதரவு அளிக்க மாட்டோம். அதற்குக் காரணம், நம்முடைய இலக்கு வேறு; அவர்களுடைய இலக்கு வேறு” என்று தெரிவித்தார்.
அதே நேரத்தில், சிஜேபி கட்சியினர் போராட்டம் நடத்துவதற்கான உரிமை குறித்து அவர் முக்கியமான கருத்தை முன்வைத்தார். “சிஜேபி கட்சிக்கு இந்தியாவில் போராடுவதற்கு உரிமை இருக்கிறதா என்றால் இருக்கிறது. திமுகவுக்குப் போராடுவதற்கு உரிமை இருக்கிறதா என்றால் அதுவும் இருக்கிறது. ஒரு ஸ்பிரிங்கை அழுத்தினால் அது வேகமாக மேலே எழும். இதை ஆட்சியில் இருப்பவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். சிஜேபியில் இருப்பவர்கள் ஏதோ ஒரு காரணத்திற்காக ஏதோ ஒரு பிரச்சினையைக் கையில் எடுத்து வருகின்றனர்” என்றார்.
வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாகக் காங்கிரஸ் கட்சியையும் அவர் விமர்சித்தார். “வாக்காளர் பட்டியல் சரியாக இல்லை என்று காங்கிரஸ் கட்சி கூறுகிறது. வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் நடைபெற்றபோது வீட்டில் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்தீர்களா? வீடு வீடாகச் சென்று விசாரித்தார்கள். அனைத்து கட்சிகளின் வாக்குச்சாவடி முகவர்களும் வீடு வீடாகச் சென்று பணிகளில் ஈடுபட்டார்கள். அப்போது நீங்கள் என்ன செய்துகொண்டிருந்தீர்கள்?” என்று கேள்வி எழுப்பினார்.
மேலும், தேர்தல் முடிந்து புதிய முதலமைச்சர் பதவியேற்று, அமைச்சரவையும் அமைக்கப்பட்டு ஆறு மாதங்களுக்குப் பிறகு வாக்காளர் பட்டியல் சரியில்லை என்று புகார் தெரிவிப்பது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பினார். தனிப்பட்ட நபர் மீது குற்றச்சாட்டு இருந்தால் அதனைத் தெளிவாக முன்வைக்க வேண்டும் என்றும், ஒட்டுமொத்தமாக உச்சநீதிமன்றமும் தேர்தல் ஆணையமும் தவறு செய்கின்றன என்று கூறுவதை ஏற்க முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.
சிஜேபி கட்சியினர் கைது செய்யப்படுவது குறித்துப் பேசிய அண்ணாமலை, “மாணவர்களைக் கைது செய்ய வேண்டிய சூழல் இருந்தால் கைது செய்யுங்கள்; சிறைக்கு அனுப்ப வேண்டியிருந்தால் அனுப்புங்கள். தவறு செய்திருந்தால் நடவடிக்கை எடுங்கள். ஆனால், அந்த நடவடிக்கையைச் சரியான முறையில் மேற்கொள்ள வேண்டும் என்று சொல்வதும் நாம்தான்” என்றார். இந்தக் கருத்துகள், போராட்டங்கள் மற்றும் கைது நடவடிக்கைகள் தொடர்பாக அவரது நிலைப்பாட்டை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளன.
தொடர்ந்து வி த லீடர்ஸ் அமைப்பின் நோக்கம் குறித்துப் பேசிய அவர், “தராசின் முள் நடுவில் இருப்பதைப் போல நாம் நடுநிலையுடன் இருக்க வேண்டிய காலமும் கட்டாயமும் உள்ளது. நாம் அனைவருக்குமான இயக்கம் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். ஒரு சித்தாந்தத்திற்காகவோ, ஒரு தலைவருக்காகவோ அல்லது ஒரு குறிப்பிட்ட விஷயத்திற்காகவோ மட்டுமே இயங்கினால் நம்முடைய வளர்ச்சி சுருங்கிவிடும். நாம் சுருங்குவதற்காகத் தமிழகத்தில் இல்லை; விரிவடைவதற்காக இருக்கிறோம். ஆலமரமாக வளர வேண்டும். ஒவ்வொரு நாளும் புதிய மனிதர்களை அமைப்பில் இணைக்க வேண்டும்” என்று கூறினார்.
தமிழக பாஜகவிலிருந்து விலகிய பிறகு சில காலம் அமைதியாக இருந்த அண்ணாமலை, தற்போது தனது அரசியல் பணிகளை மீண்டும் தீவிரப்படுத்தி வருகிறார். இந்த நிலையில், போராட்ட உரிமை, கைது நடவடிக்கைகள், வாக்காளர் பட்டியல் திருத்தம் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து அவர் தெரிவித்துள்ள கருத்துகள், வி த லீடர்ஸ் அமைப்பின் அரசியல் நிலைப்பாடு குறித்த விவாதத்தை மீண்டும் முன்னிலைக்குக் கொண்டு வந்துள்ளன.
English Summary
Support for CJP opposition to the BJP Annamalai speaks out against the BJP government is he changing his course