தபால் ஓட்டு என்றால் என்ன?
எளிதில் தொடர்பு கொள்ள முடியாத பகுதிகளில் உள்ளவர்கள், வாக்குச்சீட்டினை பெற்று, அதில் தங்கள் ஓட்டினை பதிவு செய்து, வாக்கு எண்ணிக்கைக்கு முன்பாக, தங்களது வாக்குச்சீட்டினை தபால் முறையில் தேர்தல் அதிகாரிக்கு அனுப்பிவைக்கும் முறையே, தபால் ஓட்டு ஆகும்.
யார் யார் இந்த முறையில் வாக்களிக்கலாம்?
ராணுவம், கப்பற்படை, விமானப்படை, வெளிமாநிலங்களில் பணியாற்றிவரும் போலீசார், ஆயுதப்படையினர், அரசு ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் உள்ளிட்டோர் இந்த முறையில் தங்களது வாக்குரிமையை செலுத்தலாம்.
மேற்கூறியவர்கள் யாரும் தங்களது வாக்குரிமையை நேரில் செலுத்த முடியாது. தபால் ஓட்டு முறையிலேயே அவர்கள் தங்களது வாக்குரிமையை செலுத்த முடியும்.
ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, மாநில கவர்னர்கள், மத்திய அமைச்சர்கள், நாடாளுமன்ற சபாநாயகர், தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ள அரசு அதிகாரிகள், தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் பெற்ற பத்திரிக்கையாளர்கள் உள்ளிட்டோர் இந்த முறையில் விரும்பினால் வாக்களிக்க அவர்களுக்கு அனுமதி உண்டு. ஆனால், அவர்கள் அதற்குரிய விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தருதல் வேண்டும்.
அத்தியாவசிய பணிகளில் ஈடுபட்டுள்ளவர்களால் தேர்தல் நாளன்று அவர்களது வாக்குரிமையை செலுத்த முடியாத சூழல் நிலவுகிறது. இதற்காக மத்திய சட்டத்துறை அமைச்சகம், தேர்தல் ஆணையத்துடன் இணைந்து இதற்கு தீர்வுகாண முயற்சித்தது. இந்த துறையில் உள்ள மக்கள், தற்போது தபால் மூலம் வாக்கு செலுத்த அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், 80 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோரும் தபால் மூலம் வாக்களிக்க தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது.
தபால் ஓட்டு போடும் முறை :
தபால் ஓட்டு போடுவதற்கான விண்ணப்பத்துடன் தேர்தல் பணியாளர்கள் வீடு தேடி வருவார்கள். தபால் ஓட்டு போடுவதற்கான ஒப்புதலை பெற்றுச் செல்வார்கள். தேர்தல் நடத்தும் அலுவலர், விண்ணப்பத்தை பரிசீலித்து, தபால் ஓட்டு போட அனுமதி வழங்குவார்கள்.
தபால் ஓட்டு போடலாம் என்ற தகவல், உரிய விண்ணப்பதாரருக்கு, தொலைபேசி வழியாக தெரிவிக்கப்படும்.
தேர்தல் பணியாளர்கள் தபால் ஓட்டு போடும் முறைகளை குறித்து விளக்கம் அளிப்பார்கள்.
தபால் மூலம் வாக்குச்சீட்டினை பெற்றவர்கள், அதில் குறிப்பிடப்பட்டுள்ள வேட்பாளர்கள் பட்டியலில் தாங்கள் விரும்பும் வேட்பாளருக்கு தங்களது வாக்கினை செலுத்த வேண்டும்.
பின் அதனுடன் இணைக்கப்பட்டுள்ள டிக்ளரேசன் படிவத்தை பூர்த்தி செய்து, அதனை சீலிடப்பட்ட கவரில் இணைத்து சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரிக்கு வாக்கு எண்ணிக்கை நாளுக்கு முன் அனுப்பி வைத்திடல் வேண்டும்.
தபால் ஓட்டுப் பதிவு முழுமையாக, 'வீடியோ"-வில் பதிவு செய்யப்படும்.
தேர்தல் பணியாளர்கள் வரும்போது வாக்காளர் வீட்டில் இல்லையெனில், முன்கூட்டியே தகவல் தெரிவித்தால், இரண்டாவது முறை வருகை தருவார்கள். அப்போதும் இல்லாவிட்டால், மீண்டும் வரமாட்டார்கள்.
இதனால் தபால் ஓட்டு அளிக்க அனுமதிக்கப்பட்டோர், ஓட்டுச்சாவடிக்கு சென்று வாக்களிக்க முடியாது.