நாதக தாராபுரம் வேட்பாளர் கார்த்திகா கைது: தவெக அரசுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம்..! - Seithipunal
Seithipunal


நாம் தமிழர் கட்சி சார்பில் தாராபுரம் இடைத்தேர்தலில் போட்டியிட்ட கார்த்திகா மற்றும் அவரது கணவர் உட்பட ஆறு பேரை போலீஸார் இன்று (அக்.20) கைது செய்துள்ளனர். இதற்கு திமுக தலைவர் ஸ்டாலின், அதிமுக, பாமக தலைவர் அன்புமணி, தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா, உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியின் தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

மு.க.ஸ்டாலின் (திமுக தலைவர்) 

''நடந்து முடிந்த தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலின்போது தொடரப்பட்ட வழக்கு காரணமாக, நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் கார்த்திகாவை தவெக அரசு கைது செய்திருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது.

ஒடுக்கப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த பெண்கள் பொதுவாழ்க்கையில் ஈடுபடுவதை, கொள்கை மாறுபாடுகளுக்கு அப்பால் வரவேற்று ஊக்கமளிக்க வேண்டும். அத்தகையோரைக் கைது செய்து அச்சுறுத்துவதன் மூலமாக இந்த அரசு எதைச் சாதிக்கப் போகிறது? 

கடந்த காலங்களில் கார்த்திகா திமுகவையும், அதன் கொள்கைத் தலைவர்களையும் விமர்சனம் செய்த தருணங்களில், அதைக் கொள்கை வழிநின்று தக்க பதிலளித்து தெளிவை ஏற்படுத்துவோம் என்ற வகையில் அணுகினோமே தவிர, பெண் தலைவர்களைச் சிறையில் அடைத்து வாய்ப்பூட்டு போட நாங்கள் நினைத்தது இல்லை.

ஆனால், சகிப்புத்தன்மையும் ஜனநாயக உணர்வும் இல்லாத சர்வாதிகார அரசாக தவெக அரசு நடந்துகொள்கிறது. இடைத்தேர்தலில் தவெக அரசு அதிகார துஷ்பிரயோகம் செய்ததை நாடே பார்த்தது. அதைத் தட்டிக் கேட்டதற்காக நாதக நிர்வாகிகளைக் கைது செய்து அலைக்கழிப்பது கொடுங்கோன்மையும் குறுகிய மனப்பான்மையும் ஆகும்.

ஜாமீனில் வெளிவரத்தக்க சாதாரண வழக்குகளுக்காக, கைது நடவடிக்கையில் ஈடுபடும் காவல்துறை அதிகாரிகள் நீதிமன்றக் கண்டனத்துக்கு ஆளாவார்கள். தவெகவின் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைகளுக்குக் காவல்துறை அதிகாரிகள் துணைபோகக் கூடாது.

நாட்டையே உலுக்கியுள்ள கொடிய போதை மருந்து கடத்தல் வழக்கில் தவெக நிர்வாகியும் அவரது கூட்டாளிகளும் கைது செய்யப்பட்ட சம்பவத்தைத் திசைதிருப்பவும் தனது நிர்வாகத் தோல்விகளை மறைக்கவும் இத்தகைய கைது நடவடிக்கையில் தவெக அரசு ஈடுபடுகிறது.

மறுபுறம், செய்தியாளர்களுக்குக் கொலை மிரட்டல் விடுத்தவர்களும், கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்குத் துணைபோனவர்களும் தவெகவில் இருப்பதாலேயே வெளியில் சுற்றித் திரிகிறார்கள்.

குற்றவாளிகளைக் காப்பாற்றி, போராடுவோரைக் கைது செய்வதில் தற்போது ரெண்டே ரெண்டு பேருக்கு நடுவில்தான் போட்டியே. ஒன்று டெல்லி பாஜக., இன்னொன்று தமிழ்நாட்டில் தவெக. உங்கள் பாசிசம் பாயாசம் நாடகம் எல்லாம் நாளுக்கு நாள் பல்லிளித்துக் கொண்டே வருகிறது. கார்த்திகாவையும், அவரது கட்சியினரையும் நிபந்தனை இன்றி விடுதலை செய்ய வேண்டும்.''

உதயநிதி ஸ்டாலின் (சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர்): 

''தாராபுரம் இடைத்தேர்தலில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் சகோதரி கார்த்திகாவை இந்த சர்க்கஸ் அரசாங்கம் கைது செய்திருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். தேர்தல் நேரத்தில் பதியப்பட்ட வழக்கின் அடிப்படையில், அரசியல் பழிவாங்கலோடும், த.வெ.க.வினரின் போதைப்பொருள் கடத்தல் செய்திகளை திசைத்திருப்பவும் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அரசியலில் விமர்சனங்களும், ஜனநாயக ரீதியான போராட்டங்களும் தவிர்க்க முடியாதவை. அதற்காக எதிர் வரிசையில் உள்ள ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண்ணை கைது செய்வது என்பது கடைந்தெடுத்த பாசிசம். இந்த ரீல்ஸ் முதலமைச்சர், பாஜகவின் கார்பன் காப்பியாக செயல்படாமல், சகோதரி கார்த்திகாவை விடுவிக்கத் தேவையான நடவடிக்கையை செய்ய வேண்டும்.''

அதிமுக சமூக வலைதளப் பதிவு: 

''நாம் தமிழர் கட்சியின் சார்பில் தாராபுரம் தொகுதியில் போட்டியிட்ட வேட்பாளர் கார்த்திகாவை இன்றைய தவெக அரசு அராஜகப் போக்குடன் கைது செய்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது. தேர்தல் நேரத்தில் போடப்படும் வழக்குகளை எல்லாம் காட்டி, தங்களின் வன்மத்தை தீர்த்துக் கொள்ள இன்றைய வன்ம குடோன் ஆட்சியாளர்கள் இப்படிப்பட்ட பாசிசப் போக்கை கையாள்வது வெட்கக்கேடானது.

ஒரு அங்கீகரிக்கப்பட்ட மாநிலக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட வேட்பாளரை கைது செய்ததன் மூலம், நாங்கள் எப்போதும் இவர்களைப் பார்த்து சொல்லக் கூடிய “Narcissistic Behaviour”- அதை மீண்டும் ஒரு முறை நிரூபித்து உள்ளது விஜய் தலைமையிலான ஆச்சரியக்குறி அரசு.

“ஒருவேளை உங்கள் கான்வாய் செல்லும் போது மக்கள் யாராவது மனு கொடுக்க வந்தால், வண்டியை நிறுத்தி மனுவை வாங்குவீர்களா? அல்லது, உங்கள் கான்வாய்-க்கு குறுக்கே வந்தார்கள் என்று வழக்கு பதிந்து கைது செய்வீர்களா?” என்ற சந்தேகம் இப்படிப்பட்ட கைதுகளால் தமிழக மக்களுக்கு எழுந்துள்ளது. நாதகவை சேர்ந்த கார்த்திகா உள்ளிட்ட அக்கட்சியினர் மீதான கைது நடவடிக்கையினை கைவிட வேண்டும் என இந்த அரசை வலியுறுத்துகிறோம்.''

அன்புமணி ராமதாஸ் (பாமக தலைவர்): 

''தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிட்ட கார்த்திகா உள்ளிட்ட 7 பேரை காவல்துறையினர் இன்று கோவையில் கைது செய்திருக்கின்றனர். சட்டப்பேரவைத் தேர்தலின் போது பதிவு செய்யப்பட்ட வழக்குக்காக அதிகாலை வேளையில் வந்து நாம் தமிழர் வேட்பாளர், அவரது கணவர் உள்ளிட்ட நிர்வாகிகளை காவல்துறை கைது செய்திருப்பது கண்டிக்கத்தக்கது ஆகும்.

தேர்தல் பரப்புரையின் போது தமது பரப்புரைக்கு அரசு எந்திரம் மூலம் முட்டுக்கட்டைகள் போடப்பட்டதாகக் கூறி நாம் தமிழர் வேட்பாளரும் பிற நிர்வாகிகளும் போராட்டங்களை நடத்தினார்கள். அதற்காக அப்போது பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் இப்போது கார்த்திகா உள்ளிட்டோரை கைது செய்திருப்பது தேவையற்றது. உடனடியாக கார்த்திகாவையும், மற்ற நிர்வாகிகளையும் காவல்துறை விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்''

பிரேமலதா (தேமுதிக பொதுச் செயலாளர்):

''தாராபுரம் இடைத்தேர்தல் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் கார்த்திகாவை அதிகாலை 5.30 மணியளவில், அவர் இரவு உடையான நைட்டியில் இருந்தபோது, உடை மாற்றிக்கொள்ளக்கூட அவகாசம் வழங்காமல் காவல்துறையினர் கைது செய்து, காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருவதாகக் கூறப்படும் சம்பவம் மிகுந்த கண்டனத்திற்குரியது.

தேர்தல் நேரத்தில் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தும் வகையில் சாலையில் இறங்கி மறியலில் ஈடுபட்டதற்காக, ஒரு பெண்ணை அதிகாலை நேரத்தில் இத்தகைய முறையில் கைது செய்வதுதான் தீர்வா என்பதைத் தமிழக அரசும், ஆளுங்கட்சியினரும் சிந்தித்துப் பார்க்க வேண்டும். ஒரு பெண் என்றுகூடப் பாராமல், உடை மாற்றிக்கொள்ள அவகாசம் வழங்காமல் இரவு உடையிலேயே காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்துவது, பெண்களின் கண்ணியத்தைக் கருத்தில் கொள்ளாத செயலாகும். இத்தகைய நடவடிக்கைகள் மக்கள் மத்தியில் தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தும்.

“மாற்றம், மாற்றம்” என்று கூறி ஆட்சிக்கு வந்தவர்கள், அரசியல் எதிர்ப்புகளை எதிர்கொள்ளக் கைது நடவடிக்கைகளையே தீர்வாகக் கருதுவது எந்த வகையில் நியாயம்? பழிவாங்கும் நோக்கத்துடன் அரசு செயல்படுகிறதோ என்ற எண்ணம் மக்களிடையே ஏற்படும் வகையில் இத்தகைய சம்பவங்கள் அமைந்துள்ளன. எனவே, தமிழக அரசு இந்தக் கைது நடவடிக்கையை உடனடியாக மறுபரிசீலனை செய்து,கார்த்திகாவை விடுவிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்’

டிடிவி.தினகரன் (அமமுக பொதுச்செயலாளர்):

''நாம் தமிழர் கட்சியின் தாராபுரம் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் கார்த்திகா, அவரது கணவர் உட்பட அக்கட்சியைச் சார்ந்த 6 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டிருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

தேர்தல் பிரச்சாரத்தின்போது, முதலமைச்சர் விஜய் செல்லும் வழியில் பிரச்சாரம் மேற்கொண்டார் என்பதற்காகத் கார்த்திகா மற்றும் அக்கட்சியின் நிர்வாகிகளைக் காவல்துறையை ஏவிக் கைது செய்து சிறையில் அடைத்திருக்கும் தவெக அரசின் பழிவாங்கல் நடவடிக்கை கடும் கண்டனத்திற்குரியது.

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கும் கொலை, கொள்ளை, பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்களைத் தடுக்கவும், போதைப் பொருட்களின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தவும் பயன்படுத்த வேண்டிய காவல்துறையை, எதிர்க்கட்சியினரை பழிவாங்கும் எண்ணத்தோடு அவர்களை கைது செய்து சிறையில் அடைக்க மட்டுமே பயன்படுத்திக் கொண்டிருப்பது அப்பட்டமான அதிகார துஷ்பிரயோகம்.

எனவே, சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்ட வேண்டிய பொறுப்புமிக்க காவல்துறையைத் தனது அரசியல் விருப்பு வெறுப்புகளுக்காகப் பயன்படுத்தும் நடவடிக்கையை உடனடியாக நிறுத்திடுவதோடு, கார்த்திகா உட்பட நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் அனைவரின் மீதான கைது நடவடிக்கையையும் உடனடியாகக் கைவிட வேண்டும் எனத் தவெக அரசையும், முதல்வரையும் வலியுறுத்துகிறேன்.''


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Political party leaders strongly condemn the targeting of NTKs Dharapuram candidate Karthika


கருத்துக் கணிப்பு

இடைத்தேர்தல் முடிவுகள் யாருக்கு பெரும் பின்னடைவு...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இடைத்தேர்தல் முடிவுகள் யாருக்கு பெரும் பின்னடைவு...!




Seithipunal
--> -->