எந்த தியாகத்தையும் செய்ய தயாராவோம் - டாக்டர் இராமதாஸ்! - Seithipunal
Seithipunal


வெள்ளையர்களுக்கு எதிரான முதல் விடுதலைப் போரை முன்னெடுத்த மருது பாண்டியர்களின் வீரத்தையும், தீரத்தையும், தியாகத்தையும் இந்த நாளில் நினைவு கூர்வோம்; மண்ணைக் காக்க எந்த தியாகத்தையும் செய்ய தயாராவோம் என்று, பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்த அவரின் செய்திக்குறிப்பில், "உலகையே வளைக்க நினைத்த வெள்ளையர்களுக்கு எதிராக வீரத்துடனும், தீரத்துடனும் போர்புரிந்த  மருதுபாண்டியர்களின் 223-ஆம் நினைவு நாள் இன்று. மண்டியிடாத மானத்திற்கும், வீழ்ந்து விடாத வீரத்திற்கும் சொந்தக் காரர்களான  மருதுபாண்டியர்களின் நினைவு நாளில் அவர்களின் வீரத்தையும், தீரத்தையும் போற்றுவோம். நாட்டைக் காப்பதில் அவர்களின் தியாகத்தை அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு கொண்டு செல்வோம்.

மருது சகோதரர்களின் வீரவரலாறு மிக நீண்டது.

மருது சகோதரர்கள் மன்னர்கள் அல்ல. ஆனால், மண்ணைக் காப்பதில் மன்னர்களை விட சிறந்தவர்கள். மன்னர்களையே காத்தவர்கள். அண்ணன், தம்பிகளான இவர்கள் மன்னர்களாக சிவகங்கை சீமையை ஆளவில்லை. ராமநாதபுரம் சமஸ்தானத்தை ஆண்ட மன்னர் சேதுபதியின் மகள் வேலுநாச்சியார் சிவகங்கை மன்னரான முத்துவடுக நாதருக்கு மணம் முடிக்கப்பட்டதும், மகளின் சாம்ராஜ்யத்திற்கு பாதுகாவலர்களாக சேதுபதி மன்னரால் அனுப்பப்பட்டவர்கள் தான் மருது சகோதரர்கள்.

1772 ஆண்டு சிவகங்கை மன்னர் முத்துவடுகநாதர் ஆங்கிலேய படைகளால் சதித்திட்டம் மூலம் கொல்லப்படுகிறார். அந்த நேரத்தில் அரசி வேலு நாச்சியாரை பாதுகாத்த மருது சகோதரர்கள், திண்டுக்கல் அருகே இருக்கும் விருப்பாட்சி என்கிற இடத்தில் மைசூர் மன்னர் ஹைதர் அலியிடம் சேர்க்கின்றனர். அதற்கு பிறகு தலைமறைவு வாழ்கை வாழ்ந்த பெரிய மருதுவும், சின்ன மருதுவும் ஆங்கிலேய ஏகாப்தியத்தை எதிர்ப்பதற்காக படை திரட்ட தொடங்குகின்றனர்.

பெரும்படையோடு 1780 ம் ஆண்டு சிவகங்கை சீமையை மீட்டு வேலுநாச்சியாரை மீண்டும் அரியணையில் அமர்த்துகிறார்கள். அதன்பின்னர் வேலுநாச்சியார், தனது காலத்திற்கு பிறகு சிவகங்கை மண்ணின் அரச பிரதிநிதியாக மருது சகோதரர்களை அறிவித்தார். வேலுநாச்சியாரின் மறைவிற்கு பிறகு சிவகங்கையை திறம்பட நிர்வகிக்கத்தொடங்கினர் மருது சகோதரர்கள்.

பெரிய மருது, சின்ன மருது எனப்படும் இவர்கள் 1785 முதல் 1801 வரை நம் மண்ணை அடிமைப்படுத்தி ஆண்டுவந்த ஆங்கிலேயர்களுக்கு எதிராக ஆயுதம் தாங்கி வீறுகொண்டு போராடினார்கள். பீரங்கி போன்ற அதிநவீன ஆயுதங்களுடன் போரிட வந்த வெள்ளையர்களை வேல்கம்பும், வீச்சரிவாளும் வைத்து ஓடஓட விரட்டிய பெருமை கொண்டவர்கள் மருது சகோதரர்கள்.

வீரபாண்டிய கட்டபொம்மனின் சகோதரர் ஊமைத்துரைக்கு அடைக்கலம் தந்ததற்காக 1801 ம் ஆண்டு சிவகங்கை மீது ஆங்கிலேயர்கள் போர் தொடுத்தனர். சதித்திட்டங்கள் மூலம் சிவகங்கையை சுற்றி வளைத்த ஆங்கிலேயர்களிடம் இருந்து அவர்கள் தப்பிவிடுகின்றனர். மருது சகோதரர்களை பிடிக்க முடியாததால் ஆத்திரத்தில் காளையார் கோவில் கோபுரம் இடித்து தள்ளப்படும் என்று ஆங்கிலேய படைகள் அறிவித்தன. ஆசை, ஆசையாக கட்டிய கோபுரம் இடிக்கப்பட்டுவிட கூடாது என்ற காரணத்தால் இறுதியாக ஆங்கிலேய படைகளிடம் மருது சகோதரர்கள் சரணடைந்தனர். அதன்பின்னர் அவர்களை திருப்பத்தூரில் ஆங்கிலேயர்கள் தூக்கிலிட்டனர். 1801-ஆம் ஆண்டில் மருது பாண்டியர்கள் நடத்தியது தான் வெள்ளையர்களுக்கு எதிரான முதல் விடுதலைப் போர் ஆகும்.

அவர்கள் தூக்கிலிடப்பட்ட இந்த நாள் தான் மண்ணுக்காக  உழைக்க நாம் உறுதியேற்றுக்கொள்ள வேண்டிய நாளாகும்.  மருது பாண்டியர்களின் வீரத்தையும், தீரத்தையும், தியாகத்தையும் இந்த நாளில் நினைவு கூர்வோம்; மண்ணைக் காக்க எந்த தியாகத்தையும் செய்ய தயாராவோம்" என்று மருத்துவர் இராமதாஸ் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

PMK Dr Ramadoss Say About Maruthu Pandiyarkal


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->