நடிகர் மு.க.முத்து மறைவுக்கு எடப்பாடி பழனிசாமி இரங்கல்!
MK Muthu ADMK Edappadi Palaniswami
அ.தி.மு.க. பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சர் மறைந்த மு.கருணாநிதியின் மூத்த மகன் மு.க. முத்து உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தி கேட்டு வருத்தமுற்றேன்.
அன்புச் சகோதரர் மு.க. முத்துவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உற்றார், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்வதுடன், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
பா.ம.க. தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,
முத்தமிழ் அறிஞர் கலைஞரின் மூத்த புதல்வரும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் மூத்த சகோதரரும் திரைப்பட நடிகருமான மு.க. முத்து சென்னையில் இன்று காலமானார் என்ற செய்தியறிந்து வருத்தம் அடைந்தேன்.
அவரை இழந்து வாடும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட குடும்பத்தினர், நண்பர்கள், தி.மு.க.வினர் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,
தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சரும், திராவிட முன்னேற்ற கழகத்தின் முன்னாள் தலைவர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் மூத்த மகனும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சகோதரருமான மு.க. முத்து அவர்களின் மறைவுச் செய்தி அறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.
மு.க. முத்து தமிழ்நாட்டின் கலையுலகிலும் அரசியல் வரலாற்றிலும் தனக்கென தனி இடம் பதித்தவர். தந்தையின் அரசியல் பாரம்பரியத்தையும், சமூக அக்கறையையும் தொடர்ந்து அவர் எடுத்துச் சென்றதோடு, திரைப்படங்களின் மூலமாகவும், பொதுவாழ்வின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். தந்தையின் தமிழ்ப்பற்றையும், அரசியல் உணர்வையும் தனது வாழ்வின் பல கட்டங்களிலும் வெளிப்படுத்தியவர் மு.க. முத்து. பல சிறந்த படங்களில் நடித்து புகழ்பெற்றவர். தனித்துவமான குரலில் சிறந்த பாடல்களை பாடியுள்ளார்.
அவரது மறைவு அவரது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும், குடும்பத்தினர், உறவினர்கள், தி.மு.க. உடன்பிறப்புகள், திரையுலக நண்பர்கள் மற்றும் அனைவருக்கும் ஈடு செய்யமுடியாத பேரிழப்பாகும். மிகுந்த சோகமான இந்நேரத்தில் முதலமைச்சருக்கும், அவரது குடும்பத்தினர்களுக்கும், திரையுலக நண்பர்களுக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பாக ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
English Summary
MK Muthu ADMK Edappadi Palaniswami