திமுகவின் துரோகத்தை தோலுரிப்போம்... பாட்டாளிகளே, விழுப்புரத்தில் படை திரள்வீர் - அன்புமணி இராமதாஸ் அழைப்பு! - Seithipunal
Seithipunal


பாமகவினருக்கு அக்கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் எழுதியுள்ள கடிதத்தில், "என் உயிரினும் மேலான பாட்டாளி சொந்தங்களே! தமிழ்நாட்டின் உழைக்கும் வர்க்கமான வன்னிய மக்களுக்கு துரோகம் இழைக்கும் வரலாற்றில் சமூக அநீதி அரசான திமுக அரசு, இன்னும் இரு மைல்கல்களை கடந்திருக்கிறது.

முதலாவதாக, வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் ஆணையிட்டு இன்றுடன் 1200 நாள்களாகும் நிலையில், இதுவரை அதை நிறைவேற்றவில்லை. இரண்டாவதாக, வன்னியர் இட ஒதுக்கீடு குறித்து பரிந்துரைக்க தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்துக்கு வழங்கப்பட்ட 30 மாதக்கெடு நிறைவடைந்து  விட்ட நிலையில், ஆணையத்திடமிருந்து அறிக்கை பெறுவதற்கு பதிலாக காலநீட்டிப்பு வழங்கி துரோகம் செய்திருக்கிறது.

வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு என்பது அவர்களுக்கு வழங்கப்படும் சலுகை அல்ல... சமூகநீதி சார்ந்த இந்த விஷயத்தில் திமுக அரசு இந்த அளவுக்கு தயக்கம் காட்டுவதற்கு வன்னியர் இட ஒதுக்கீடு என்பது திமுகவின் குடும்பச் சொத்தும் அல்ல. அது வன்னியர்களின் உரிமை. தமிழ்நாட்டில் வாழும் அனைத்து சமூகங்களுக்கும், அவர்களின் சமூக பின்தங்கிய நிலை, மக்கள் தொகை ஆகியவற்றின் அடிப்படையில் இட ஒதுக்கீடு பெறும் உரிமையை இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ளது.

நாம் கொண்டாடும் தந்தை பெரியாரும், அண்ணல் அம்பேத்கரும் இதைத் தான் வலியுறுத்தியிருக்கிறார்கள்.  பெரியாரையும், அம்பேத்கரையும் போற்றுவதாகக் கூறிக்கொள்ளும் திமுக, அவர்களின் சமூகநீதி நோக்கங்களை சிதைக்கும் வகையில் தான் செயல்படும். அவர்களின் சொல்லிற்கும், செயலிற்கும் இடையிலான வேறுபாடு மிகவும் நீண்டது. அதனால் தான் அவர்களை போலி சமூகநீதியாளர்கள் என்று விமர்சித்து வருகிறோம்.

வன்னியர்களின் சமூகநீதி போராட்டம் என்பது மிகவும் நீண்டது. 1980 ஆம் ஆண்டில் மருத்துவர் அய்யா அவர்கள் வன்னியர் சங்கத்தை நிறுவியது முதல் மிகத் தீவிரமாகத் தொடங்கிய அந்தப் போராட்டத்தில், ஒரு வார தொடர் சாலை மறியல் போராட்டத்தின் போது மட்டும் 21 உயிர்களை பலி கொடுத்தது உள்ளிட்ட ஏராளமான உயிர்த்தியாகங்களை செய்து தான் முதல் இடஒதுக்கீட்டை வென்றெடுத்தோம். அப்போது  வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்குவதாக உறுதியளித்த அன்றைய முதலமைச்சர் கலைஞர், கடைசி நிமிடத்தில் 107 சமூகங்களுடன் வன்னியர்களையும் சேர்த்து புதிய பிரிவை உருவாக்கி 20% இட ஒதுக்கீட்டை வழங்கினார்.

வன்னியர்கள் போராடி வென்றெடுத்த இட ஒதுக்கீட்டில் அவர்களுக்கே பயன் கிடைக்காத நிலையில் தான், கடந்த ஆட்சியில் மருத்துவர் அய்யா அவர்களின் வழிகாட்டுதலில் எனது தலைமையில் களமிறங்கி போராடி 10.50% வன்னியர் உள் இட ஒதுக்கீட்டை வென்றெடுத்தோம்.  சமூக நீதிக்கு எதிரானவர்களால் அதற்கு உயர்நீதிமன்றத்தில் முட்டுக்கட்டை போடப்பட்டாலும், அதை அகற்றிய உச்சநீதிமன்றம், வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்கலாம் என 31.03.2022 இல் தீர்ப்பளித்தது.

ஆனால், அதன்பின் 1200 நாள்கள் ஆகி விட்ட நிலையில், வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க திமுக அரசுக்கு மனமில்லை. வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு  வழங்க வேண்டியது சட்டத்தின்படியும், தர்மத்தின்படியும் அரசின் கடமை. ஆனால், அந்தக் கடமையை தட்டிக் கழிக்க, இல்லை... இல்லை... வன்னியர்களின் உரிமையை தட்டிப்பறிக்க திமுக அரசு நடத்திய நாடகங்கள் அப்பப்பா... ஏராளம், ஏராளம். வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கலாம் என உச்சநீதிமன்றமே தீர்ப்பளித்து விட்ட நிலையில், பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மருத்துவர் அய்யா அவர்கள் கடிதங்கள் வாயிலாகவும், நான் நேரில் சந்தித்ததன் வாயிலாக அளித்த அழுத்தங்கள் காரணமாக வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க திமுக அரசு ஒப்புக்கொண்டது. இதை சட்டப்பேரவையிலும், சட்டப்பேரவைக்கு வெளியிலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி செய்தார்.

எனினும், திரைமறைவில் வன்னியர்களுக்கு எதிரான சதிகளைத் தான் திமுக அரசு அரங்கேற்றியது. பா.ம.க.வின் அழுத்தத்தைத் தொடர்ந்து வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும் நோக்கத்திற்காகத் தான் 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 17 ஆம் நாள் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் மாற்றி அமைக்கப் பட்டது. அதைத் தொடர்ந்து வன்னியர்கள் இட ஒதுக்கீடு குறித்து, 3 மாதங்களில் பரிந்துரை அளிக்கும்படி  12.01.2023 ஆம் நாள் ஆணையத்திற்கு அரசு ஆணையிட்டது. ஆணையம் அதன் சமூகநீதிக் கடமைகளை நிறைவேற்ற நினைத்திருந்தால் 3 மாதங்களில் அறிக்கை அளித்திருக்கலாம். ஆனாலும், அரசும், ஆணையமும் கூட்டு சதி செய்து காலம் தாழ்த்தின. 3 மாத காலக்கெடு 30 மாதங்களாக மாற்றப்பட்டு, அதுவும் கடந்த 11 ஆம் நாள் முடிவடைந்து விட்ட நிலையில், அரசுக்கு எந்த அறிக்கைடையும் ஆணையம் அளிக்கவில்லை.  அதுதொடர்பாக எந்த எதிர்க்கேள்வியும் எழுப்பாமல் தமிழக அரசும் மேலும் ஒரு காலநீட்டிப்பு வழங்கியுள்ளது.

தமிழகத்தின் சமூகநீதி வரலாற்றில் ஓர் இட ஒதுக்கீடு குறித்து பரிந்துரைப்பதற்காக ஓர் ஆணையம் அதன் அறிக்கையை தாக்கல் செய்ய அதிக காலம் எடுத்துக் கொள்வது இது தான் முதல் முறையாகும். இஸ்லாமியர் இட ஒதுக்கீடு குறித்து பரிந்துரைக்க 14.07.௨௦௦௬ ஆம் நாள் அமைக்கப்பட்ட நீதியரசர் ஜனார்த்தனம் ஆணையம் அதன் அறிக்கையை 6 மாதங்களில் தாக்கல் செய்தது. அதைத் தொடர்ந்து 15.09.2007ஆம் நாள் அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது. அதேபோல், அருந்ததியர் உள் இட ஒதுக்கீடு குறித்து பரிந்துரைக்க 25.03.2008 ஆம் நாள் அமைக்கப்பட்ட நீதியரசர் ஜனார்த்தனம் ஆணையம் 243 நாள்களில் அதே ஆண்டு நவம்பர் 22 ஆம் நாள் பரிந்துரை அறிக்கையை தாக்கல் செய்தது. அதன்பின் 2009 பிப்ரவரி 26 ஆம் நாள் சட்டம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், இதைவிட பல மடங்கு, அதாவது 915 நாள்கள் ஆகிவிட்ட நிலையிலும் ஆணையம் அதன் அறிக்கையை தாக்கல் செய்யாமல் தாமதித்து வருகிறது.

வன்னியர் இட ஒதுக்கீடு குறித்த அறிக்கையை ஆணையம் முதன்முதலில் அதற்கு வழங்கப்பட்ட 3 மாத காலக்கெடுவுக்குள் தாக்கல் செய்து, அதனடிப்படையில் சட்டம் இயற்றப்பட்டிருந்தால் கடந்த 4 ஆண்டுகளில் வன்னிய மாணவர்களுக்கு 3600 எம்.பி.பி.எஸ் இடங்களும், 700&க்கும் கூடுதலான மருத்துவ மேற்படிப்பு இடங்களும் கிடைத்திருக்கும். அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் தரவரிசையில் முதல் 25 இடங்களில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் 6000&க்கும் மேற்பட்ட இடங்களும், கலைக்கல்லூரிகளில் 80,000 க்கும் கூடுதலான இடங்களும், சட்டக்கல்லூரிகளில் 1000&க்கும் கூடுதலான இடங்களும் கிடைத்திருக்கும். மேலும் அரசுத்துறைகளில் வன்னியர்களுக்கு 5000 க்கும் மேற்பட்ட அரசு வேலைகள் கிடைத்திருக்கும். இயல்பாக கிடைக்க வேண்டிய இந்த உரிமைகளை பறித்து திமுக அரசு பெருந்துரோகம் செய்திருக்கிறது.

வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும் சட்டம் 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி 26ஆம் நாள் தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட போது அதை திமுக புறக்கணித்தது, வன்னியர் இட ஒதுக்கீட்டுக்கு எதிராக தேர்தலில் பரப்புரை மேற்கொண்டது, வன்னியர் இட ஒதுக்கீட்டு சட்டத்திற்கு எதிராக வழக்கு  தொடர்வது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் மைத்துனர் ஜெய. ராஜமூர்த்தி தலைமையில் நடைபெற்ற  இசைவேளாளர்கள் சங்க மாநாட்டில் முடிவு செய்யப்பட்டது, சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையின் போது வன்னியர் இட ஒதுக்கீட்டுச் சட்டத்தைப் பாதுகாக்கத் தவறியது, உச்சநீதிமன்றம் ஆணையிட்டு 1200 நாள்களாகியும் வன்னியர் இட ஒதுக்கீட்டுச் சட்டத்தை நிறைவேற்ற மறுப்பது ஆகியவற்றை வைத்துப் பார்க்கும் போது வன்னியர்கள் மீது மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு எந்த அளவுக்கு வன்மம் வைத்திருக்கிறது? என்பதை தெளிவாக புரிந்து கொள்ள முடிகிறது.

திமுக அரசின் சமூக அநீதியை அம்பலப்படுத்துவதன் வாயிலாகவும், மருத்துவர் அய்யா அவர்களின் வழிகாட்டுதல்களில் கடந்த காலங்களில் நடத்தப்பட்டது போன்ற தீவிரமான அறப்போராட்டங்களை முன்னெடுப்பதன் வாயிலாகவும் தான் வன்னியர்களுக்கான இட ஒதுக்கீட்டை வென்றெடுக்க முடியும் என்றும் பாட்டாளி மக்கள் கட்சி கருதுகிறது. அதன் தொடக்கமாகத் தான் வன்னியர் சங்கம் நிறுவப்பட்ட நாளான ஜூலை 20 ஆம் நாள், இட ஒதுக்கீட்டுக்காக போராளிகள் இன்னுயிர் ஈந்த மண்ணான விழுப்புரத்தில் மாபெரும் மக்கள்திரள் போராட்டத்தை நடத்த தீர்மானித்திருக்கிறோம். 

நாம் வென்றெடுத்த அனைத்து சமூகநீதிகளுக்கும் அடிப்படையாக அமைந்தது பாட்டாளிகளான உங்களின் போராட்டம் தான். அந்த வகையில் இப்போதும் நமக்கான சமூகநீதியை வென்றெடுக்கவும், அதனடிப்படையில் பிற சமூகங்களுக்கும்   உரிய இட ஒதுக்கீடு கிடைப்பதை உறுதி செய்யவும் இந்தப் போராட்டம் தான் காரணமாக அமையவிருக்கிறது.

இதை மனதில் கொண்டு பாட்டாளி மக்கள் கட்சி, வன்னியர் சங்கம் உள்ளிட்ட அதன் இணை மற்றும் சார்பு அமைப்புகளைச் சேர்ந்த அனைத்து நிலை நிர்வாகிகளும், பாட்டாளித்  தொண்டர்களும் விழுப்புரம் மண்ணில் படை திரள்வோம், திமுகவின் துரோகத்தை தோலுரித்துக் காட்டி நமக்கான சமூகநீதியை  வென்றெடுப்போம் என்று உங்களை அழைக்கிறேன். வன்னிய மக்களின் சமூகநீதிக்காக எந்த தியாகத்தையும் செய்யத் தயாராக, பாட்டாளி சொந்தங்களாகிய உங்களை எதிர்பார்த்து விழுப்புரத்தில் காத்திருப்பேன்" என்று தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

PMK Anbumani Ramadoss Vanniyar Reservation vilupuram protest


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->