மகாராஷ்டிராவில் ரூ.36,585 கோடி பயிர்க்கடன் தள்ளுபடி... தமிழக அரசால் முடியாதது ஏன்? அன்புமணி இராமதாஸ்!
PMK Anbumani Ramadoss Condemn to tvk Govt vm vijay
பா.ம.க. தலைவர் அன்புமணி இராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்:-மகாராஷ்டிராவில் 55.72 லட்சம் உழவர்கள் வாங்கியிருந்த ரூ.36,585 கோடி மதிப்பிலான பயிர்க்கடன்களை அம்மாநில அரசு தள்ளுபடி செய்திருக்கிறது. தமிழ்நாட்டில் முதலமைச்சர் விஜய் அவர்கள் தலைமையிலான அரசு சில நாள்களுக்கு முன் தள்ளுபடி செய்த ரூ.2044 கோடி கடனுடன் ஒப்பிடும் போது இரு மாநிலங்களின் கடன் தள்ளுபடிக்கு இடையிலான வேறுபாடு மலைக்கும், மடுவுக்குமான வித்தியாசமாகத் தோன்றுகிறது.
மும்பையில் நடைபெற்ற மகாராஷ்டிரா மாநில அமைச்சரவைக் கூட்டத்தில், உழவர்களின் பயிர்க்கடன் தள்ளுபடி தொடர்பாக எடுக்கப்பட்ட முடிவு வரலாற்று சிறப்புமிக்கதாகும். மகாராஷ்டிரா பயிர்க்கடன் தள்ளுபடியால் அம்மாநில உழவர்கள் அடைந்துள்ள பயன்களின் உயரத்தை, தமிழக அரசின் பயிர்க்கடன் தள்ளுபடியால் தமிழக உழவர்களுக்கு கிடைத்த பயன்களின் உயரத்திலிருந்து ஏணி வைத்தாலும் எட்ட முடியாது என்பது தான் உண்மையாகும்.
முதலாவதாக, தமிழ்நாட்டில் 2.5 ஏக்கர் வரை நிலம் வைத்துள்ள உழவர்களுக்கு மட்டும் தான் அதிகபட்சமாக ரூ.50,000 கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது; 5 ஏக்கர் வரை நிலம் வைத்துள்ள குறு விவசாயிகளுக்கு ரூ.5,000 முதல் ரூ.25,000 வரையிலும், பெரு விவசாயிகளுக்கு ரூ.5000-மும் மட்டும் தான் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. ஆனால், மகாராஷ்டிராவில் சிறு, குறு, பெரு விவசாயிகள் என எந்த பாகுபாடும் இல்லாமல் அனைத்து விவசாயிகளின் பயிர்க்கடனிலும் ரூ. 2 லட்சம் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. அதன்படி ஒரு விவசாயி ரூ.2 லட்சம் கடன் வாங்கியிருந்தால் அது முழுமையாக தள்ளுபடி செய்யப்படும்; ரூ.3 லட்சம் கடன் வாங்கி இருந்தால் ரூ.1 லட்சம் மட்டும் செலுத்தினால் போதும். அதற்கும் போதியக் காலக்கெடு வழங்கப்படும்.
இரண்டாவதாக, தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு மே ஒன்றாம் தேதி முதல் நடப்பாண்டு பிப்ரவரி வரையிலான 10 மாதங்களில் வாங்கப்பட்ட கடனின் ஒரு பகுதி மட்டும் தான் தள்ளுபடி செய்யப்படும். ஆனால், மகாராஷ்டிரா மாநிலத்தில் 2019-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் 2025-ஆம் ஆண்டு மார்ச் வரையிலான ஆறாண்டுகளில் வாங்கப்பட்ட கடன்களில் ரூ.2 லட்சம் தள்ளுபடி செய்யப்படும். இதனால், மீளமுடியாத கடன்வலையில் சிக்கிக் கொண்ட விவசாயிகள் கூட கடன் தொல்லையிலிருந்து முழுமையாக விடுபடலாம்.
மூன்றாவதாக, தமிழக அரசு அறிவித்துள்ள கடன் தள்ளுபடி திட்டத்தால் 14.22 லட்சம் பேர் பயனடைவர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், உண்மையில் சில ஆயிரம் பேருக்குக் கூட முழுமையான கடன் தள்ளுபடி கிடைக்காது. மாறாக, மகாராஷ்டிராவில் 55.72 லட்சம் பேருக்கு முழுமையான கடன் அல்லது ரூ.2 லட்சம் தள்ளுபடி செய்யப்படும். இதன் மூலம் உழவர்கள் கடனிலிருந்து விடுதலையாகி உழவைத் தொடர முடியும்.
நான்காவதாக, கூட்டுறவு வங்கிகளில் உழவர்கள் வாங்கிய குறுகியக் காலக் கடன்களை மட்டுமே தமிழக அரசு தள்ளுபடி செய்திருக்கிறது. ஆனால், மகாராஷ்டிரா அரசோ அம்மாநிலத்தில் செயல்படும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், தனியார் வங்கிகள், ஊரக வங்கிகள், மாவட்டக் கூட்டுறவு வங்கிகள், தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகள் என அனைத்திலும் வாங்கப்பட்ட கடன்களை தள்ளுபடி செய்திருக்கிறது.
ஐந்தாவதாக, தமிழ்நாடு அரசு தள்ளுபடி செய்த பயிர்க்கடனின் மொத்த மதிப்பு ரூ.2044 கோடி. ஆனால், மகாராஷ்டிரா அரசு தள்ளுபடி செய்த கடனின் அளவு ரூ.36,585 கோடியாகும். இது தமிழக அரசு தள்ளுபடி செய்த கடனின் மதிப்பை விட 18 மடங்கு, அதாவது 1790% அதிகம் ஆகும். உண்மையில் மகாராஷ்டிரா அரசு அறிவித்திருப்பது தான் கடன் தள்ளுபடி ஆகும். தமிழ்நாடு அரசின் அறிவிப்பு போதுமானதல்ல.
2026-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையில் பயிர்க்கடன் தள்ளுபடி பற்றி வாக்குறுதி அளித்திருந்த த.வெ.க., 5 ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் உழவர்கள் வாங்கியக் கடன் முழுமையாகவும், அதற்கு மேல் நிலம் வைத்துள்ள விவசாயிகள் வாங்கிய கடனில் 50 விழுக்காடும் தள்ளுபடி செய்யப்படும் என்று கூறியிருந்தது. ஆனால், இப்போது கடும் நிபந்தனைகளை விதித்து உழவர்களின் பயிர்க்கடனில் ரூ.5000 முதல் ரூ.50 ஆயிரம் வரை மட்டுமே த.வெ.க. அரசு தள்ளுபடி செய்திருக்கிறது.
அதற்கான காரணம் கேட்டால், நபார்டு வங்கி விதித்துள்ள நிபந்தனை தான் என்று பழியை வங்கிகள் மீது சுமத்தியிருக்கிறது முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு. உண்மையில் பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய முடியாது என்று நபார்டு வங்கி விதிகளில் எந்த இடத்திலும் கூறப்படவில்லை. பயிர்க்கடனை தள்ளுபடி செய்வதற்கு முன்பாக இந்திய ரிசர்வ் வங்கியிடமிருந்து அனுமதி பெற வேண்டும்; தள்ளுபடி செய்யப்பட்ட கடன் தொகையை சம்பந்தப்பட்ட கூட்டுறவு வங்கிகளுக்கு 60 நாள்களுக்குள் மாநில அரசு செலுத்த வேண்டும் என்பது தான் நபார்டு வங்கியின் விதியாகும். தமிழ்நாடு அரசுக்கு உண்மையாகவே உழவர்கள் நலனில் அக்கறை இருந்திருந்தால் இந்த விதிகளை பின்பற்றி முழுக்கடனையும் தள்ளுபடி செய்திருக்க முடியும்.
மகாராஷ்டிரா அரசுக்கு அம்மாநில உழவர்கள் மீது அக்கறை இருப்பதால் தான் அனைத்து விதிகளையும் பின்பற்றி வேளாண் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்திருக்கிறது. அதுமட்டுமின்றி, நிபந்தனைகளை நிறைவேற்றும் வகையில், கடன்களை தள்ளுபடி செய்த வங்கிகளுக்கு வழங்க வேண்டிய தொகையை வழங்க வசதியாக குறிப்பிட்ட தொகையை நிதிநிலை அறிக்கையிலேயே மகாராஷ்டிரா அரசு ஒதுக்கியுள்ளது.
மகாராஷ்டிரா அரசின் 2026-27ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையின் மதிப்பு ரூ.7.69 லட்சம் கோடி ஆகும். அதில் 4.75%, அதாவது 36,585 கோடியை கடன் தள்ளுபடிக்காக மகாராஷ்டிரா அரசு ஒதுக்கியுள்ளது. ஆனால், 2026-27ஆம் ஆண்டுக்கான இடைக்கால நிதிநிலை அறிக்கையின் மதிப்பு ரூ. 4.52 லட்சம் கோடி எனும் நிலையில், அதில் கடன் தள்ளுபடியின் மதிப்பு வெறும் 0.45% மட்டுமே. மகாராஷ்டிரா அரசு தள்ளுபடி செய்த கடன் அளவை விட பத்தில் ஒரு பங்குக்கும் குறைவாகவே தமிழக அரசு கடன் தள்ளுபடி செய்துள்ளது.
மகாராஷ்டிரா அரசின் பயிர்க்கடன் தள்ளுபடி மீண்டும், மீண்டும் நமக்கு சொல்லும் செய்தி என்னவெனில், பயிர்க்கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய விதிகள் தடையில்லை; மனம் மட்டும் இருந்தால் எதுவும் தடையில்லை என்பது தான். எனவே, தமிழக ஆட்சியாளர்கள் நபார்டு வங்கி மீது பழி போடுவதற்கு பதிலாக விதிகளை பின்பற்றி, உழவர்களின் பயிர்க்கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும்.
English Summary
PMK Anbumani Ramadoss Condemn to tvk Govt vm vijay