தென் மாவட்டங்களில் வன்முறைகளை தடுத்து நிறுத்த அரசு தவறியது கண்டிக்கத்தக்கது - அன்புமணி இராமதாஸ்!
pmk anbumani ramadoss condemn to tvk govt thenkasi attack
பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில், "தென்காசி, நெல்லை மாவட்டங்களில் பட்டியலின மக்கள் மீதான தாக்குதல் கண்டிக்கத்தக்கது: சமூகப் பதட்டம் ஏற்பட எந்த வகையிலும் அரசு இடம் கொடுக்கக் கூடாது!
தென்காசி மாவட்டம் நெட்டூர் கிராமத்திலும், நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தை அடுத்த மன்னார்கோவில் கிராமத்திலும் பட்டியலின மக்கள் மீது ஆயுதங்களுடன் வந்த கும்பல்கள் தனித்தனியாக நடத்திய தாக்குதல்களில் 7 பேர் படுகாயம் அடைந்ததாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றன. சமூகப் பதற்றம் நிறைந்த தென் மாவட்டங்களில் இத்தகைய வன்முறைகளை தடுத்து நிறுத்த அரசு தவறியது கண்டிக்கத்தக்கது.
தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தை அடுத்த நெட்டூர் மாதாகோவில் தெருவில் நேற்று மாலை முகமூடி அணிந்தவாறு இரு சக்கர ஊர்திகளில் வந்த 9 பேர் கொண்ட கும்பல், அங்கு நின்று கொண்டிருந்தவர்களை சரமாரியாக அரிவாளால் வெட்டியுள்ளது. இதில் நெட்டூரைச் சேர்ந்த பட்டியலின மக்கள் 6 பேர் படுகாயமடைந்தனர். அதேபோல், நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தை அடுத்த மன்னார்கோவில் கிராமத்தில் ஆயுதங்களுடன் வந்த கும்பல் மணிகண்டன் என்ற பட்டியலின இளைஞரை அரிவாள்களால் வெட்டியதில் அவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடந்த மார்ச் மாதம் 2-ஆம் தேதி நெல்லை மாவட்டம் நாங்குநேரியை அடுத்த பெரும்பத்து கிராமத்தில் கஞ்சா போதையில் 9 பேர் கொண்ட கும்பல் நடத்திய வன்முறை வெறியாட்டத்தில் இரு அப்பாவிகள் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டுள்ளனர். மேலும் 6 பேர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தென் மாவட்டங்களில் ஏற்பட்ட பதட்டம் அடங்குவதற்கு வெகுகாலம் ஆனது. அதேபோன்ற நிலை இப்போது ஏற்பட அரசு அனுமதிக்கக்கூடாது. தாக்குதல் நடந்த கிராமங்களில் இயல்பு நிலையை விரைவாகக் கொண்டு வர அரசும், மாவட்ட நிர்வாகங்களும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுவாகவே நெல்லை, தென்காசி உள்ளிட்ட தென் மாவட்டங்கள் சமூகப் பதட்டம் நிறைந்தவை. அங்கு ஏற்படும் சிறு மோதல் கூட பெரும் வன்முறையாக மாறிவிடக் கூடும். இதைக் கருத்தில் கொண்டு தென் மாவட்டங்களில் சமூக மோதல்களோ, பதட்டமோ ஏற்படாமல் இருப்பதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
English Summary
pmk anbumani ramadoss condemn to tvk govt thenkasi attack