திமுகவினரின் கொடூர தாக்குதல்... ஸ்டாலின் தனிப்பட்ட முறையில் மன்னிப்புக் கேட்க வேண்டும் - அன்புமணி இராமதாஸ்!
pmk anbumani ramadoss condemn to dmk mk stalin
பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில், "தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி சிவகங்கையில் இன்று நடைபெற்ற NewsTamilTV24x7 தொலைக்காட்சியின் தேர்தல் பயணம் என்ற தலைப்பிலான விவாத நிகழ்ச்சியில் திமுக அரசின் தோல்விகள் குறித்து வினா எழுப்பியதற்காக திமுக ரவுடிகள் நடத்தியத் தாக்குதலில் அந்த நிகழ்ச்சியை நடத்திய செய்தியாளர் இராஜேஷ், மாவட்ட செய்தியாளர் சதாம் ஆகியோர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதிமுகவைச் சேர்ந்த இலை கடை லட்சுமணன், நாம் தமிழர் கட்சியை சேர்ந்த இளங்கோவன் ஆகியோரும் படுகாயம் அடைந்துள்ளனர். திமுகவினரின் இந்த காட்டுமிராண்டித் தனமான தாக்குதல் கண்டிக்கத்தக்கது.
உலகிலேயே விமர்சனங்களை எதிர்கொள்ள அஞ்சும் கட்சி என்றால் அது திமுக தான். பாசிசத்தின் ஒட்டுமொத்த அடையாளமும் அது தான். ஊரை அடித்து உலையில் போட்டாலும் திமுக தான் ஆகச்சிறந்த கட்சி என்று அனைவரும் பாராட்ட வேண்டும் என்ற அற்ப மனம் கொண்டது தான் திமுக தலைமை ஆகும். அதற்கு கொடூரமான எடுத்துக்காட்டு தான் சிவகங்கையில் NewsTamilTV24x7 தொலைக்காட்சியின் செய்தியாளர் மீதும், பிற கட்சியினர் மீது திமுக நடத்தியிருக்கும் தாக்குதல் ஆகும்.
சிவகங்கையில் நடைபெற்ற விவாத நிகழ்ச்சியில் 2021-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் அளித்த வாக்குறுதியை திமுக நிறைவேற்றாததையும், திமுகவினர் மீது மக்கள் மத்தியில் நிலவும் கோபம் குறித்து செய்தியாளர் வினா எழுப்பியுள்ளார். திமுகவுக்கு ஜனநாயகத்தில் நம்பிக்கை இருந்திருந்தால் அந்தக் கேள்விகளுக்கு விடையளித்திருக்க வேண்டும். ஆனால், அந்தக் கேள்விகளுக்கு திமுகவிடம் விடை இல்லாததாலும், விமர்சனத்தைத் தாங்கிக் கொள்ள முடியாததாலும் திமுகவின் மாவட்ட துணைச் செயலாளர் சேங்கை மாறன் தலைமையிலான குண்டர்கள் இந்தக் கொடியத் தாக்குதலை நடத்தியுள்ளனர்.
திமுகவுக்கு எப்போதெல்லாம் தோல்வி பயம் ஏற்படுகிறதோ, அப்போதெல்லாம் இத்தகைய வன்முறையை திமுக கையிலெடுக்கும் என்பதற்கு வரலாறு நெடுகிலும் ஆதாரங்கள் நிறைந்திருக்கின்றன. எம்.ஜி.ஆரின் வளர்ச்சியைப் பொறுக்க முடியாமல் சட்டப்பேரவைக்கு உள்ளேயும், வெளியேயும் திமுக தாக்குதல்களை நடத்தியது; அடுத்து வந்த தேர்தலில் திமுக படுதோல்வி அடைந்தது.
1989-ஆம் ஆண்டில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஜெயலலிதாவுக்கு செல்வாக்கு பெருகுவதை பொறுத்துக் கொள்ள முடியாமல் சட்டப்பேரவையில் அவரைத் தாக்கினார்கள். அடுத்து வந்த தேர்தலில் 233 தொகுதிகளில் திமுக கூட்டணி தோல்வியடைந்தது. நெருக்கடி நிலையை நடைமுறைப்படுத்திய பிறகு தமிழ்நாட்டுக்கு வந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை திமுகவினர் கொடூரமாகத் தாக்கியதுடன், அவரது பெண்மையை பழித்தார். அடுத்த சில மாதங்களில் அவரது காலில் விழுந்து கூட்டணி அமைத்தனர்.
எப்போதெல்லாம் திமுகவுக்கு தோல்வி பரிசாகக் காத்திருக்கிறதோ, அப்போதெல்லாம் திமுக வன்முறையை கையில் எடுப்பது வாடிக்கையாகும். அப்படித்தான் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் தோல்வியடையப் போவதைத் தாங்கிக் கொள்ள முடியாமல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டுள்ளார். வரும் தேர்தலில் திமுக படுதோல்வி அடையப் போகிறது என்பதையே இது காட்டுகிறது.
ஊடகத்தின் விமர்சனங்களைக் கூட தாங்கிக் கொள்ள முடியாத அளவுக்கு திமுக பாசிசக் குவியலாக மாறியிருக்கிறது. நியூஸ் தமிழ் செய்தியாளரைத் தாக்கிய திமுகவினர் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்வதுடன், அவர்களை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும். தாக்குதலில் காயமடைந்தவர்களிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தனிப்பட்ட முறையில் மன்னிப்புக் கேட்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
English Summary
pmk anbumani ramadoss condemn to dmk mk stalin