தவெக அரசு அதிரடி; பெண்களுக்கான மாதாந்த மகளிர் உரிமைத் தொகை ரூ.1,000 வரவு வைப்பு..!
Monthly Womens Entitlement Aid of rs1000 Credited
தமிழகத்தில் முந்தைய திமுக ஆட்சியில் புதுமைப்பெண், தமிழ்ப் புதல்வன் திட்டத்தின்கீழ் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான கல்வி உதவித் தொகை ரூ.1,000 அவர்களின் வங்கிக் கணக்கில் 14-ஆம் தேதி வரவு வைக்கப்பட்டு வந்தது.
அத்துடன், பெண்களுக்கு மாதம்தோறும் ரூ.1,000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டமும், கடந்த 2023-ஆம் ஆண்டு செப்டம்பர் 15-ஆம் தேதி அமல்படுத்தப்பட்டது.
இதைத் தொடர்ந்து, தகுதி வாய்ந்த பெண்களின் வங்கிக் கணக்குகளில் ஒவ்வொரு மாதமும் 15-ஆம் தேதி மகளிர் உரிமைத் தொகை ரூ.1,000 நேரடியாகவே செலுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் சுமார் 1.31 கோடி பெண்கள் பயனடைந்து வருகின்றனர்.

2026 தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் ஆகிய 03 மாதங்களுக்கான மகளிர் உரிமைத் தொகை ரூ.3,000 மற்றும் கோடைகால சிறப்பு தொகை ரூ.2,000 என மொத்தம் ரூ.5,000 பயனாளிகளின் வங்கிக் கணக்கில் கடந்த பிப்ரவரி 13-ஆம் தேதி வரவு வைக்கப்பட்டது. அத்துடன், ஸ்டாலின் தலைமையிலான திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மாதாந்திர உரிமைத் தொகை ரூ.2,000 ஆக உயர்த்தி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
ஆனால், இந்த தேர்தலில் விஜய் தலைமையிலான தவெக வெற்றிப்பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது. தவெக ஆட்சி அமைத்தால் மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500 வழங்கப்படும் என்று தேர்தலின்போது வாக்குறுதி அளித்திருந்தது.

இந்நிலையில், முதல்வர் விஜய் நேற்று இது குறித்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதாவது, 'மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை மறுசீரமைக்க வேண்டும். அதற்கு அவகாசம் தேவைப்படுகிறது. நடப்பு மே மாதத்துக்கான உரிமைத் தொகை, பயனாளிகளின் வங்கிக் கணக்கில் விரைவில் வரவு வைக்கப்படும்'. என்று கூறப்பட்டிருந்தது.
இதற்கு திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. மாதம் தோறும் உதவித் தொகை பெற்று வந்த பெண்களும், உதவித் தொகையை எதிர்நோக்கி இருந்த நிலையில், மகளிர் உரிமைத் தொகை ரூ.1,000 அனைத்து பயனாளிகளின் வங்கிக் கணக்கிலும் இன்று செலுத்தப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக, முதல்வர் விஜய் தனது வாக்குறுதிப்படி ரூ.2,500 எப்போது வழங்குவார் என்ற எதிர்பார்ப்பும் பெண்களிடம் எழுந்துள்ளது.
English Summary
Monthly Womens Entitlement Aid of rs1000 Credited