கொலைகார திமுக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும்! கொந்தளிப்பில் அன்புமணி இராமதாஸ்!
PMK Anbumani Ramadoss Condemn to DMK MK Stalin Sanitary worker death
பா.ம.க. தலைவர் அன்புமணி இராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சென்னை கண்ணகி நகர் பகுதியில் தேங்கிக் கிடந்த மழை நீரில் அறுந்து விழுந்து கிடந்த மின்சாரக் கம்பியை மிதித்ததால் வரலட்சுமி என்ற தூய்மைப் பணியாளர் துடிதுடித்து உயிரிழந்திருக்கிறார். வரலட்சுமியை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
சென்னை வளர்ச்சியடைந்த நகரங்களில் ஒன்றாக வளர்ந்து விட்டதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நேற்று தான் கூறியிருந்தார். அதற்கு அடுத்த நாளே சென்னையில் பெய்த லேசான மழைக்கு தண்ணீர் பெருமளவில் தேங்கி, மின்சாரக் கம்பி துண்டிக்கப்பட்டு தூய்மைப் பணியாளர் ஒருவர் உயிரிழந்திருக்கிறார் என்றால், சென்னை மாநகரத்தின் அடிப்படைக் கட்டமைப்புகள் எந்த அளவுக்கு மோசமாகவும், பலவீனமாகவும் உள்ளன என்பதை அறிந்து கொள்ளலாம்.
திமுக ஆட்சிக்கு வந்த நாள் முதல் மழை நீர் வடிகால் திட்டம் என்ற பெயரில் கோடிக்கணக்கான ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டு வருகிறது. ஆனால், எங்கும் மழை நீர் வடியவில்லை. அதேபோல், விபத்து நடந்து தூய்மைப் பணியாளர் வரலட்சுமி உயிரிழந்த கண்ணகி நகர் 11வது குறுக்கு தெருவில் மின்சார கேபிள்கள் சாலைக்கு மேல் செல்வதாகவும் அபாயகரமாக உள்ளதாகவும் அங்கு இருக்கும் மக்கள் பலமுறை மின்சார வாரியத்திற்கு புகார் அளித்துள்ளனர். ஆனால், மின்சாரத்துறையின் சார்பில் எந்த நடவடிக்கையும் எடுக்காதது தான் அப்பாவி பெண் தொழிலாளி உயிரிழக்கக் காரணமாக அமைந்திருக்கிறது. வரலட்சுமியின் மறைவுக்கு கொலைகார திமுக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும்.
தூய்மைப் பணியாளர் வரலட்சுமியின் உயிரிழப்பால் மக்கள் மத்தியிலும், தூய்மைப் பணியாளர்கள் மத்தியிலும் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. வரலட்சுமியின் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்குவதன் மூலம் அதை அடக்க திமுக அரசு முயல்கிறது. தமிழக அரசு அறிவித்துள்ள இழப்பீடு போதுமானதல்ல. அவரது குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். மேலும் வரலட்சுமி மின்சாரம் தாக்கி உயிரிழந்ததற்கு சென்னை மாநகராட்சி மேயர், நகராட்சி நிர்வாகத்துறை, மின்துறை ஆகியவற்றின் அமைச்சர்கள், முதலமைச்சர் ஆகியோரின் அலட்சியமும், செயல்பாடின்மையும் தான் காரணம் என்பதால் இந்த இழப்பீட்டுத் தொகையை அவர்களிடமிருந்து வசூலித்து வழங்க வேண்டும்'' என்று வலியுறுத்தியுள்ளார்.
English Summary
PMK Anbumani Ramadoss Condemn to DMK MK Stalin Sanitary worker death