நள்ளிரவில் மின்கட்டணத்தை உயர்த்திய திமுக அரசு: மூடுவிழா நடத்தத் துடிப்பதா? அன்புமணி இராமதாஸ் கண்டனம்!
PMK Anbumani Ramadoss Condemn to DMK Govt MK Stalin TN EB
பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ் விடுத்துள்ள கண்டன அறிக்கையில், "தமிழ்நாட்டில் மின்கட்டணம் உயர்த்தப்படாது என்று நேற்று மாலை வரை கூறி வந்த தமிழக அரசு, நேற்று நள்ளிரவில் மின்சாரக் கட்டணத்தை 3.16% உயர்த்தியிருக்கிறது. ஏழை மற்றும் நடுத்தர மக்களையும், தொழில் வணிகத்துறையினரையும் மிகக் கடுமையாக பாதிக்கும் வகையிலான இந்த மின்கட்டண உயர்வு கடுமையாகக் கண்டிக்கத்தக்கது.
கிட்டத்தட்ட ரூ.3500 கோடி அளவுக்கு மின்சாரக் கட்டணத்தை உயர்த்தியிருக்கும் திமுக அரசு, வீடுகளுக்கான மின்கட்டண உயர்வு ரூ.374 கோடியை மட்டும் தாங்களே ஏற்றுக் கொள்வதால் யாருக்கும் பாதிப்பு ஏற்படாது என்று நாடகம் நடத்துகிறது. கடந்த ஆண்டு வீடுகளுக்கான மின் கட்டணத்தையும் 4.83% உயர்த்திய தமிழக அரசு, அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் வருவதால் தான் அதையும் விட்டு வைத்திருக்கிறது.
வீடுகளுக்கான மின் கட்டண உயர்வை அரசே ஏற்றுக் கொண்டதால் மக்களுக்கு பாதிப்பு இல்லை என்று கூறுவது அபத்தமான வாதம் ஆகும். கடைகள், வணிக நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து மின் இணைப்புகளுக்கும் கட்டணம் உயர்த்தப்பட்டிருப்பதால், அத்தியாவசியப் பொருள்களின் விலை கணிசமாக உயரும். அந்த சுமை அப்பாவி மக்களின் தலையில் தான் சுமத்தப்படும்.
கடைகள், வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகளுக்கு ஏற்கனவே 3 முறை மின்சாரக் கட்டணம் உயர்த்தப்பட்டதால் அவற்றின் செலவு மிகக் கடுமையாக அதிகரித்திருக்கிறது. ஏராளமான சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மின் கட்டணம் செலுத்த முடியாமல் மூடப்பட்டு விட்டன. கடந்த காலங்களில் உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தையே குறைக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தி வரும் நிலையில், இரக்கமே இல்லாமல் மீண்டும் ஒருமுறை மின்சாரக் கட்டணத்தை உயர்த்தியிருப்பதன் மூலம் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை மூடத் துடிக்கிறது திராவிட மாடல் அரசு.
மருந்துக்குக் கூட மனிதநேயமும், இரக்கமும் இல்லாமல் கொடுங்கோல் ஆட்சியை மு.க.ஸ்டாலின் நடத்தி வருகிறார் என்பதற்கு இந்த மின்கட்டண உயர்வு தான் சான்றாகும். மக்களைப் பாதிக்கும் இந்த மின்கட்டண உயர்வை தமிழக அரசு உடனடியாக திரும்பப்பெற வேண்டும். இல்லாவிட்டால், வரும் தேர்தலில் திமுகவுக்கு மக்கள் மறக்க முடியாத பாடத்தைப் புகட்டுவார்கள்" என்று தெரிவித்துள்ளார்.
English Summary
PMK Anbumani Ramadoss Condemn to DMK Govt MK Stalin TN EB