நம் ஒவ்வொருவரின் தலையிலும் ரூ.1.27 லட்சம் கடன் - திமுக அரசுக்கு அன்புமணி இராமதாஸ் கண்டனம்!
PMK Anbumani Ramadoss Condemn to DMK Govt MK Stalin
பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டை கடந்த ஐந்தாண்டுகளாக ஆட்சி செய்து வரும் திமுக அரசு, தமிழ்நாட்டை எந்த அளவுக்கு கடன்கார மாநிலமாக மாற்றி வைத்திருக்கிறது என்பதற்கு சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால நிதிநிலை அறிக்கை தான் சான்று ஆகும்.
சொந்த வரி வருவாயாக ரூ.2.06 லட்சம் கோடியை மட்டுமே ஈட்டியிருக்கும் திமுக அரசு, அதில் 90 விழுக்காட்டை, அதாவது 1.84 லட்சம் கோடியை கடனாக வாங்கிக் குவித்துள்ளது. இதன் மூலம் ஒவ்வொருவரின் தலையிலும் ரூ. 1.27 லட்சம் கடன் சுமை சுமத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2026-27ஆம் ஆண்டுக்கான இடைக்கால நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று தாக்கல் செய்தார். இடைக்கால நிதிநிலை அறிக்கை என்பதால் இதில் புதிய திட்டங்கள் எதுவும் இடம்பெறவில்லை. ஆனால், 2025-26ஆம் ஆண்டிற்கான திமுக அரசின் நிதிச் செயல்பாடுகள் தமிழ்நாட்டை சீரழித்து, கடன் வலையில் வீழ்த்துவதாக அமைந்திருக்கின்றன. திமுக அரசின் மிக மோசமான செயல்பாடுகள் காரணமாக நடப்பாண்டில் மட்டும் கணிக்கப்பட்டதை விட 21% அதிகமாக ரூ.1 லட்சத்து 84,551 கோடியை கடனாக மு.க.ஸ்டாலின் அரசு வாங்கிக் குவித்திருக்கிறது.
ஒரு மாநில அரசு மூலதனச் செலவுகளுக்காக மட்டும் தான் கடன் வாங்க வேண்டும். அதன்படி பார்த்தால், 2025-26ஆம் ஆண்டில் மூலதனச் செலவாக ரூ.51,443 கோடியை மட்டுமே செலவழித்திருக்கிறது. இது 2025&26ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் இலக்காக நிர்ணயிக்கப்பட்டிருந்த ரூ.57,231 கோடியை விட ரூ.6788 கோடி குறைவாகும். ரூ.51,443 கோடிக்கு மூலதனச் செலவுகளை செய்துள்ள திமுக அரசு, அந்த அளவுக்கு மட்டும் தான் கடன் வாங்கியிருக்க வேண்டும். ஆனால், அதை விட மூன்றரை மடங்கு அதிகமாக ரூ.1.84 லட்சம் கோடியை கடனாக வாங்கியுள்ளது. இதை விட மோசமான நிதி மேலாண்மை இருக்க முடியாது.
வாங்கிய கடனில் மூலதன செலவுகளை செய்தது போக மீதமுள்ள சுமார் ரூ.1.33 லட்சம் கோடியை திமுக அரசு என்ன செய்தது? கடந்த காலங்களில் வாங்கிய கடன்களில் ரூ.55,844 கோடி கடன் நடப்பாண்டில் திருப்பி செலுத்தப்பட்டு உள்ளது. இந்தத் தொகையை நடப்பாண்டில் கடனாக வாங்கிய ரூ.1.84 லட்சம் கோடியிலிருந்து தான் திமுக அரசு செலுத்தியுள்ளது. புதிய கடனை வாங்கி, பழைய கடனை அடைக்கும் அற்புதமான நிதி நிர்வாகத்தைத் தான் திமுக செய்திருக்கிறது. கடனை அடைக்க செலுத்தப்பட்ட தொகையும் போக, கடனாக வாங்கிய ரூ.1.84 லட்சம் கோடியில் ரூ.77,223 கோடி மீதமிருக்க வேண்டும். ஆனால், அந்தத் தொகை எங்கு போனது என்பது தெரியவில்லை.
வருவாய்ப் பற்றாக்குறையை முற்றிலுமாக ஒழித்து, வருவாய் உபரியை ஏற்படுத்துவதாகக் கூறித் தான் திமுக ஆட்சிக்கு வந்தது. அடுத்த ஆண்டு முதல் வருவாய்ப் பற்றாக்குறை ஒழிக்கப்படும் என்று ஒவ்வொரு ஆண்டும் கூறி வந்தது. ஆனால், இன்று வரை திமுக அரசு வருவாய்ப் பற்றாக்குறையை ஒழிக்கவில்லை; மாறாக உயர்த்தி வைத்திருக்கிறது.
2025-26ஆம் ஆண்டில் வருவாய்ப் பற்றாக்குறை ரூ.41,635 கோடியாக இருக்கும் என்று கடந்த நிதிநிலை அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. திமுக அரசுக்கு நிதி மேலாண்மைத் திறன் இருந்திருந்தால் இதை இயன்றவரை குறைத்திருக்க வேண்டும். ஆனால், இலக்கை விட 66%, அதாவது ரூ.27,584 கோடி அதிகமாக ரூ.69,219 கோடியாக வருவாய்ப் பற்றாக்குறை அதிகரித்திருக்கிறது.
அரசு ஊழியர்கள் ஊதியம், சமூகநலத் திட்டங்கள் உள்ளிட்ட வருவாய்ச் செலவுகளைக் கூட திமுக அரசால் சமாளிக்க முடியவில்லை; அதைக் கூட கடன் வாங்கித் தான் அரசு செலவு செய்திருக்கிறது என்பதை இது காட்டுகிறது. வருவாய்ப் பற்றாக்குறை குறைக்கப்பட்டிருந்தால் தமிழக அரசு தேவையின்றி கடன் வாங்கியிருக்க வேண்டியிருந்திருக்காது. மூலதன செலவுகளுக்காக மட்டும் கடன் வாங்கி, மொத்தக் கடன் சுமையை குறைத்திருக்க முடியும். ஆனால், அதற்கான திறனும், அறிவும் திமுக அரசுக்கு இல்லை.
வருவாயைப் பெருக்குவதும், அதற்குள் செலவு செய்வதும் தான் சிறந்த நிதி நிர்வாகம் ஆகும். ஆனால், இந்த இரண்டிலுமே திமுக அரசு படுதோல்வி அடைந்துள்ளது. 2025-26ஆம் ஆண்டில் ரூ.2.20 லட்சம் கோடி சொந்த வரி வருவாய் ரூ.2.06 லட்சம் கோடியாக குறைந்திருக்கிறது. இது இலக்கை விட ரூ.14,355 கோடி, அதாவது 6.50% குறைவு ஆகும். அதேபோல், வரி அல்லாத வருவாய் இலக்கை விட 7.82%, அதாவது ரூ.2554 கோடி குறைந்து விட்டது. மொத்த வருவாயும் ரூ.3.31 லட்சம் கோடி என்ற இலக்கில் இருந்து ரூ.21,871 கோடி (6.6%) குறைந்து ரூ.3.09 லட்சம் கோடியாக சுருங்கி விட்டது. அதே நேரத்தில் அரசின் வருவாய் செலவுகள் ரூ.5113 கோடி அதிகரித்து ரூ.3 லட்சத்து 78,917 கோடியாக உயர்ந்துள்ளது.
ஐந்தாண்டு கால திமுக ஆட்சியில் கடன் வாங்கிக் குவித்ததைத் தவிர வேறு எந்த சாதனையும் செய்யப் படவில்லை. இந்திய விடுதலைக்குப் பிறகு, தமிழகத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு ஏற்படுத்தப்பட்ட 1952-ஆம் ஆண்டிலிருந்து திமுக அரசு பொறுப்பேற்பதற்கு முந்தைய 2020-21ஆம் நிதியாண்டின் இறுதி வரையிலான 70 ஆண்டுகளில் தமிழகத்தின் நேரடிக் கடன் ரூ.4.56 லட்சம் கோடி மட்டும் தான்.
ஆனால், அதன்பின் பொறுப்பேற்ற திமுக அரசு ஐந்தாண்டுகளில் வாங்கிக் குவித்துள்ள கடன் மட்டும் ரூ.4.96 லட்சம் கோடி ஆகும். 70 ஆண்டுகளில் வாங்கப்பட்ட கடனை விட 109% கடனை திமுக ஐந்தாண்டுகளில் வாங்கிக் குவித்திருக்கிறது. தமிழ்நாட்டிலிலுள்ள ஒவ்வொருவர் பெயரிலும் ரூ.1.27 லட்சமும், 4 பேர் கொண்ட ஒரு குடும்பத்தின் பெயரில் ரூ.5.08 லட்சமும் கடன் சுமையை மு.க.ஸ்டாலின் அரசு சுமத்தியிருக்கிறது.
தமிழ்நாட்டில் திமுக அரசு தொடர்ந்தால் ஒட்டுமொத்த தமிழ்நாடும் வங்கிகளிடம் அடகு வைக்கப்பட்டு விடும். தமிழ்நாடு திவாலாவதை தடுக்க வேண்டும் என்றால், திமுக அரசு உடனடியாக அகற்றப்பட வேண்டும். அதை அடுத்த சில வாரங்களில் நடைபெறவுள்ள தேர்தலில் தமிழக மக்கள் செய்து முடிப்பார்கள்” என்று தெரிவித்துள்ளார்.
English Summary
PMK Anbumani Ramadoss Condemn to DMK Govt MK Stalin