36 லட்சம் வேலைவாய்ப்பு… வளர்ச்சி பாதையில் தமிழகம்...! - வைகோ இடைக்கால பட்ஜெட்டுக்கு பாராட்டு
36 lakh jobs Tamil Nadu path development Vaiko praises interim budget
தஞ்சை மாவட்டம் திருபுவனம் பகுதியில் நடைபெற்ற நிதி உதவி வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க, சென்னை இருந்து விமானம் மூலம் திருச்சி வந்த வைகோ செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு அரசியல் மற்றும் பொருளாதார கருத்துகளை பகிர்ந்தார்.அப்போது அவர் தெரிவித்ததாவது,"இடைக்கால பட்ஜெட்டில் தங்கம் தென்னரசு 36 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என அறிவித்திருப்பது மக்களை ஆச்சரியப்படுத்தும் அறிவிப்பாகும்.

இந்த இடைக்கால நிதிநிலை அறிக்கை அனைத்து தரப்பினரையும் ஈர்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும், தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியை முன்னணி நிலைக்கு கொண்டு செல்லும் நோக்கத்துடன் இதுவரை செயல்படுத்தப்பட்ட திட்டங்களையும், இனி அமல்படுத்தப்பட உள்ள புதிய திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடுகளையும் தெளிவாக எடுத்துரைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், ஸ்டெர்லைட் ஆலையை தமிழகத்தில் இருந்து அகற்ற தொடர்ந்து போராட்டம் நடத்தியதன் விளைவாக அது மூடப்பட்டது. இந்நிலையில், வேதாந்தா லிமிடெட் ‘பசுமை தாமிரம்’ என்ற பெயரில் மீண்டும் தொழிற்சாலை தொடங்க முயற்சி செய்வது ஏற்றுக்கொள்ள முடியாதது.
மூடப்பட்ட ஆலையின் இயந்திரங்களே இன்னும் அகற்றப்படாத நிலையில், பொதுமக்களிடம் ஆதரவு பெற முயற்சிப்பது தவறு என்றும், தூத்துக்குடி மக்கள் ஸ்டெர்லைட் மீண்டும் வருவதை உறுதியாக எதிர்க்கிறார்கள் என்றும் தெரிவித்தார்.
அதேபோல், இந்திய தேசிய காங்கிரஸ் கூட்டணியில் நீடிக்குமா என்ற கேள்விகள் எழுந்தாலும், சிலரின் கருத்துகள் கட்சியின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடு அல்ல; இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் தொடர்ந்து இருக்கும் என்ற நம்பிக்கை எனக்குள்ளது என்றார்.திராவிட முன்னேற்ற கழகம் தலைமையிலான கூட்டணி தேர்தலில் வெற்றி பெறும்; திமுக தனிப்பெரும் கட்சியாக மீண்டும் ஆட்சியமைக்கும்; கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
இடைக்கால பட்ஜெட்டை ‘காதுகுத்து வேலை’ என விமர்சித்த எடப்பாடி கே. பழனிசாமி கருத்துக்கு பதிலளித்த அவர், “அது காதுகுத்து அல்ல, மக்களின் காதில் பொன் ஆபரணம் சூட்டும் நலத்திட்ட பட்ஜெட்” என மறுத்தார்.
மாநிலத்தின் கடன் சுமை பெரிதாக பார்க்க வேண்டிய விஷயம் அல்ல; நாடு முழுவதும் கடன் நிலை இருப்பதே இயல்பு. மு.க. ஸ்டாலின் திட்டமிட்ட வளர்ச்சி நடவடிக்கைகள் மூலம் தமிழ்நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்வார்; மீண்டும் முதல்வராக பதவியேற்பார் என்ற நம்பிக்கையையும் வைகோ வெளிப்படுத்தினார்.
English Summary
36 lakh jobs Tamil Nadu path development Vaiko praises interim budget