உதயநிதியின் எம்எல்ஏ பதவிக்கு ஆப்பு! வெற்றி பெற்றதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல்! - Seithipunal
Seithipunal


கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற பொது தேர்தலில் சென்னை சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மகனும் திமுகவின் இளைஞர் அணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் போட்டியிட்டார். அவரை எதிர்த்து அதிமுக கூட்டணியில் அங்கம் வகித்த பாமக சார்பில் கஸாலி என்பவர் நிறுத்தப்பட்டார். அமமுக சார்பில் ராஜேந்திரனும், தேசிய மக்கள் சக்தி கட்சி வேட்பாளர் எம்.எல் ரவியும் போட்டியிட்டனர்.

இந்த தேர்தலில் உதயநிதி ஸ்டாலின் வெற்றி பெற்றார். அவர் வெற்றி பெற்றதை எதிர்த்து எம்.எல் ரவி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதேபோல் பிரேமலதா என்பவரும் உதயநிதி ஸ்டாலின் வெற்றி பெற்றதை எதிர்த்து வழக்கு தொடர்ந்தார். இந்த இரு வழக்குகளையும் சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இந்த நிலையில் உதயநிதி ஸ்டாலின் பெற்ற வெற்றியை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் எம்.எல் ரவி மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் "கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற பொது தேர்தலில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட உதயநிதி ஸ்டாலின் வெற்றி பெற்றார். ஆனால் தேர்தல் வேட்பு மனுவில் தவறான மற்றும் பொய்யான தகவல்களை அவர் அளித்துள்ளார்.

குறிப்பாக உதயநிதி ஸ்டாலின் தனது வேட்பு மனுவுடன் இணைத்த படிவம் 26ல் தன் மீது எந்த குற்ற வழக்கும் இல்லை என குறிப்பிட்டுள்ளார். அந்த தகவல் தவறானது. உதயநிதி ஸ்டாலின் மீது 22 வழக்குகள் நிலுவையில் உள்ளது. இது தொடர்பாக தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் வேட்பு மனுக்கள் பரிசீநிலையின் போது உதயநிதி ஸ்டாலின் வேட்பு மனுவை நிராகரிக்க வேண்டும் என வலியுறுத்தினேன். 

ஆனால் எனது புகாரை ஏற்காமல் உதயநிதி ஸ்டாலினின் வேட்பு மனுவை தேர்தல் நடத்தும் அதிகாரி ஏற்றுக்கொண்டார். இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் உதயநிதி ஸ்டாலினின் வேட்பு மனு ஏற்றது தவறான செயல். இதன் மூலம் அவர் தேர்தலில் பெற்ற வெற்றியும் முறைகேடானது. எனவே உதயநிதி ஸ்டாலின் வெற்றியை செல்லாது என அறிவிக்க வேண்டும்" என அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார். உதயநிதி ஸ்டாலின் மீதான இந்த குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர் வகித்து வரும் சட்டமன்ற உறுப்பினர் பதவி பறிக்கப்பட வாய்ப்புள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Petition filed in Supreme Court against Udhayanidhi victory


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->