பாராளுமன்றம் பட்ஜெட் முதல் கட்ட அமர்வு நிறைவு! - 3 வார இடைவெளிக்குப் பிறகு மார்ச் 9 -ல் மீண்டும் கூடும் அவை!
Parliament first budget session concludes They reconvene March 9 after 3 week break
பாராளுமன்றத்தில் நடைபெற்று வரும் பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் கட்ட அமர்வு இன்று பரபரப்புடன் நிறைவடைந்தது. இன்று காலை 11 மணிக்கு பாராளுமன்றம் மக்களவை கூடியதும், மறைந்த முன்னாள் எம்.பி. பகவன்தாஸ் ரத்தோருக்கு ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து அவை நடவடிக்கைகள் தொடங்கியவுடன் எதிர்க்கட்சியினர் பல்வேறு தேசிய பிரச்சினைகளை முன்வைத்து கோஷங்கள் எழுப்பினர்.
அதிலும் குறிப்பாக, அமெரிக்காவின் சர்ச்சைக்குரிய குற்றவாளி ஜெப்ரி எப்ஸ்டீன் தொடர்பான ஆவணங்களில் மத்திய அமைச்சர் ஹாதீப் சிங்க் பூரி பெயர் இடம்பெற்றதாக தெரிவித்து, அவர் உடனடியாக பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தினர்.
இதற்காக பதாகைகள் ஏந்தி அவையில் ஆர்ப்பாட்டம் செய்தனர். மேலும், இந்தியா–அமெரிக்க இடைக்கால வர்த்தக ஒப்பந்தத்திற்கும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
எதிர்க்கட்சிகளின் தொடர்ந்து எழுந்த அமளியால் அவையில் கடும் கூச்சல், குழப்பம் நிலவியதால் மக்களவை மதியம் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. மீண்டும் கூடினபோதும் நிலைமை சீராகாததால், நாள் முழுவதும் அவை ஒத்திவைக்கப்பட்டது.
இதன் மூலம் பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் கட்ட அமர்வு நிறைவடைந்ததாக அறிவிக்கப்பட்டது.மூன்று வார இடைவேளைக்குப் பிறகு மக்களவை வரும் மார்ச் 9ஆம் தேதி மீண்டும் கூடும் என்றும், அந்த இடைவெளியில் மத்திய பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ள நிதிகளை நிலைக்குழுக்கள் ஆய்வு செய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், இந்திய தேசிய காங்கிரஸ் எம்.பி.க்கள் பாராளுமன்ற வளாகத்திலேயே தனியாக போராட்டம் நடத்தினர். மேலும் ஹர்தீப் சிங் பூரி மற்றும் எப்ஸ்டீன் படங்களுடன் பதாகைகள் ஏந்தி கோஷமிட்டனர்.
அதேபோல் மாநிலங்களவையும் தொடர்ந்த அமளியால் ஒத்திவைக்கப்பட்டு, அதன் முதல் கட்ட அமர்வும் முடிவுக்கு வந்தது. அதுமட்டுமின்றி மாநிலங்களவையும் மார்ச் 9ஆம் தேதி மீண்டும் கூடும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Parliament first budget session concludes They reconvene March 9 after 3 week break