'ஜெம்' வீரமணி விவகாரத்தில் இரண்டரை மாதம் வாய்தா வாங்கி காப்பாற்றியது தவெக அரசு; மதுராந்தகத்தில் பழனிசாமி பிரச்சாரம்..! - Seithipunal
Seithipunal


மதுராந்தகம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் கணிதா சம்பத்துக்கு ஆதரவாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் ''பெட்டி மாறியதால்தான் இந்த இடைத்தேர்தல் நடக்கிறது. அமைச்சர் ஆவதற்காக குதிரை பேரத்தில் ஈடுபட்டுள்ளார். எவ்வளவு பெரிய துரோகம் இது?'' என்று பேசியுள்ளார்.

அவர் அங்கு பேசுகையில் ஓட்டுப்போட்ட மக்களையும் மதிக்கவில்லை. வெற்றிக்காக உழைத்த தொண்டர்களையும் மதிக்கவில்லை என்றும், அப்படிப்பட்ட துரோகியை வேட்பாளராக தவெக நிறுத்தி உள்ளதாகவும்,  வாக்களித்த மக்களை மதிக்காமல் கட்சி மாறி போட்டியிடும் வேட்பாளரை மக்கள் தோற்கடிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டதோடு, மரகதம் குமரவேலை வைத்துக்கொண்டு விஜய் தூயவாதம் பேசுகிறார் என்று விமர்சித்துள்ளார்.

பொதுத் தேர்தலின்போது விவசாயிகளை ஏமாற்றி வாக்குகளை பெற்றது தவெக. நேற்று விஜய் வீர வசனம் பேசினார். 'குழந்தைகளை சீரழித்தவர்களை நான்தான் கைது செய்தேன்' என்றார். அது பச்சைப் பொய். ஏற்கெனவே திமுக ஆட்சியில் எஃப்.ஐ.ஆர் போட்டனர். கடந்த ஜூன் மாதம் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தது. மீண்டும் ஜூலை 20 விசாரணைக்கு வந்தது. அப்போதும் தவெக அரசு வழக்கறிஞர் வாய்தா கேட்கிறார். 3-8-2026 அன்று இறுதி அறிக்கை தாக்கல் செய்ய சொன்னபோதும் வாய்தா கேட்டனர்.

நீதிபதி பொறுத்துக்கொள்ள முடியாமல் கைது செய்தாக வேண்டும் என்று தீர்ப்பு கொடுத்தார். அதன்பின்னர் தான் கைது செய்தனர். ஆக, யார் காலம் தாழ்த்தியது? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
வீரமணி விவகாரத்தில் இரண்டரை மாதம் வாய்தா வாங்கி காப்பாற்றியது தவெக அரசு. ஆனால், முதல்வர் பச்சை பொய் சொல்கிறார். மக்களிடம் அனுதாபம் பெற நிஜ வாழ்க்கையிலும் நடிக்க ஆரம்பித்துவிட்டார் என்று விமர்சித்துள்ளார்.

கலைமாமணி பிரகாஷ் முப்பெரும் விழாவில் இரண்டு தவெக அமைச்சர்கள் கலந்துகொண்டனர். போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட அவருடைய நிகழ்ச்சியில் வணிக வரித்துறை மற்றும் உணவுத் துறை அமைச்சர் கலந்துகொண்டனர் என்று சுட்டிக்காட்டினார்.

உணவுத் துறை அமைச்சர் பேசும்போது, 'ஜெம் வீரமணி எனது குடும்ப நண்பர்' என்கிறார். அப்படியெனில் உண்மை வெளிவந்து விட்டது. குற்றவாளியைப் பாதுகாக்கும் ஆட்சி இது என்றும், வேறொரு கட்சி மீது பழியை சுமத்தி இந்த ஆட்சியில்தான் பாதுகாப்பு இருப்பதுபோல அனுதாபம் தேடி பச்சை பொய் சொல்வது வரலாற்றில் இதுதான் முதல்முறை என்று தவெக அரசை விமர்சித்துள்ளார்.

அத்துடன், மக்கள் பிரச்சினைகள் குறித்து சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பினால் முதல்வரிடம் இருந்து பதில் வராது; எழுந்து சென்று விடுவார் என்று குறிப்பிட்டதோடு, சட்டப்பேரவையே சினிமா போன்று ஆகிவிட்டது என்றும்,  சட்டமன்றம் இப்போது பட்டிமன்றம் ஆக மாறிவிட்டது. அவையில் 07 மணி நேரம் வெட்டி பேச்சுதான் நடந்தது என்று தெரிவித்துள்ளார். இந்தியாவில் எங்குமே இல்லாத மோசமான அரசாங்கம் தமிழகத்தில் உள்ளது. அரசு கடன் வாங்கினால் அது மக்கள் தலையில்தான் சுமையாக வந்து விழும் என்று எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

மேலும், மதுரை சட்டக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடந்தது. அமைச்சர் இருந்த விழாவிலே கரன்ட் கட். ஆனால், அமைச்சரோ மின்வெட்டு அல்ல, மின்பற்றாக்குறை என்று ஏமாற்றுகிறார் என்று சாடியுள்ளார்.

நேற்று விஜய், 1931-இல் தான் சாதிவாரி கணக்கெடுப்பு நடந்தது, அதன்பின்னர் எடுக்கப்படவில்லை. தவெக ஆட்சியில் எடுப்போம் என்றார். அதிமுக ஆட்சியில் நான் முதல்வராக இருந்தபோது சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த நீதிபதி குலசேகரன் தலைமையில் குழு அமைத்தேன். தேர்தல் வந்து ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால் கைவிடப்பட்டது. சாதிவாரிக் கணக்கெடுப்புக்கு அதிமுக ஆட்சியில் தான் முதல்முறையாக அரசாணை வெளியிடப்பட்டது என்று சுட்டிக்காட்டி பேசினார்.

லண்டன் பயணம் எதற்குப் போனார் என்று உங்களுக்குத் தெரியும். முதலீடு ஈர்க்க போகிறார் என்று சொன்னார்கள். ஆனால், அங்கு போனதும் முதலில் ஒரு படம் வந்தது. அது என்னவென்று உங்களுக்கு தெரியும். இங்கு இந்தியாவில், தமிழகத்தில் 32 இடங்களில் இயங்கி கொண்டிருக்கும் நிறுவனங்களை அங்கு அழைத்து ஒப்பந்தம் போடுகிறார். சென்னையிலே ஒப்பந்தம் போட்டிருக்கலாம். இன்பச் சுற்றுலா போக வேண்டும் என்ற ஆசையில் போய்விட்டு வந்திருக்கிறார். அங்கு போய் கார் பந்தயத்தை துவக்கி வைத்தார், அதுவா முக்கியம்? என்று கடுமையாக  விமர்சித்துள்ளார்.

காலில் செருப்புக் கூட இல்லாமல் இருக்கிறார்கள் பலர்.  ஆனால், கார் பந்தய மைதானம் அமைக்கப் போகிறாராம், பொருளாதாரத்தில் வளர்ந்த பின்னர் அமைக்கலாம். சைக்கிள் இல்லாமல் மக்கள் இருக்கும் நாட்டில் கார் பந்தயத்துக்கு மைதானம் தேவையா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

வருடத்துக்கு 78 ஆயிரம் கோடி வட்டி கட்டுகிறார்கள். அப்படி இருக்கும்போது புதிய தலைமைச் செயலகம் எதற்கு? என்றும், சட்டமன்றத்திலே விஜய் அமர்வதில்லை அப்புறம் எதற்கு புதுசு? என்றும், அவர் வீட்டுக்கு பக்கத்தில் கட்டுவாராம். முதல்வருக்கான அறை போதவில்லையாம், கடல் காற்று நேரடியாக பட வேண்டுமாம். அதனால் நாமக்கல் கவிஞர் மாளிகையில் ஓர் அறை தயார் செய்கிறார்கள். இதுக்கு 10 கோடி செலவு. இப்படிப்பட்ட காஸ்ட்லி முதல்வர் தேவையா? அண்ணா முதல் ஸ்டாலின் வரை எல்லோரும் பணியாற்றிய அறை அது. அது போதாதாம் என்று முதல்வர் விஜய்யை சாடியுள்ளார்.

இந்த இடத்தேர்தல் திணிக்கப்பட்டது என்று கூட்டணியில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சிகளே சொல்கிறார்கள். ஆட்சியைக் காப்பாற்ற அதிமுக எம்.எல்.ஏவை ராஜினாமா செய்யவைத்து வெற்றி பெற வைக்கத் துடிக்கிறார். அவருக்கு தகுந்த பாடம் புகட்டுங்கள் என்று மிகவும் கடுமையாக முதல்வர் விஜய் தலைமையிலான அரசை எடப்பாடி பழனிச்சாமி விமர்சித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Palaniswami campaigns in Maduranthakam alleging that the TVK government shielded Gem Veeramani from arrest


கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?




Seithipunal
--> -->