உதவி பேராசிரியர் பணியிடங்கள்: 'இட ஒதுக்கீடு தகுதி விதியில் தளர்வுகள் ஏற்படுத்தப்பட வேண்டும்': பெ.சண்முகம் வலியுறுத்தல்..!
P Shanmugam insists that relaxations should be made in the eligibility rules for reservation of assistant professor posts
உதவிப் பேராசிரியர் நியமனங்களுக்கு நிபந்தனைகளின் படி, தமிழ் வழி படித்தவர்களுக்கான இட ஒதுக்கீட்டு தகுதியில், முதுகலை படிப்பு வரையில் தமிழை பயிற்று மொழியாக கொண்டிருக்க வேண்டும் என்ற விதியிலும் படிப்பு சார்ந்த தளர்வுகளும் ஏற்படுத்தப்பட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: ''தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் 2,708 உதவி பேராசிரியர் பணியிடங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக கவுரவ விரிவுரையாளர்களின் மூலம் கல்லூரிகள் நடந்துவரும் நிலையில், இப்படியான அறிவிப்பு நம்பிக்கையளிப்பதாகும். ஆனால், புதிய அறிவிப்பில் இடம்பெற்றுள்ள புதிய நடைமுறைகள், விண்ணப்பம் செய்வதையே சிக்கலாக்குகின்றன.

விண்ணப்பதாரர்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு வலியுறுத்தப்பட்டுள்ளன. பல்கலைக்கழக மானியக் குழுவின் அறிவிப்புபடி உதவிப் பேராசிரியர் பணிக்கு தேசிய தகுதித் தேர்வு அல்லது முனைவர் பட்ட தேர்ச்சி இருந்தால் போதும். எனவே, ஆசிரியர் தேர்வு வாரியம், புதிதாக எழுத்துத் தேர்வை புகுத்துவது தேவையற்றது. விண்ணப்பத்தின் அடிப்படையில் தரவரிசை தயார் செய்யப்பட்டு, சான்றிதழ் சரிப்பார்ப்பு பணிகளின் பின்னர் நேர்முகத் தேர்வு நடத்துவதே சரியானது.
அதேபோல விண்ணப்பிக்கும்போது பெறப்படும் கட்டாய ஆவணங்களில் கடைசியாக படித்த கல்வி நிறுவனத்தில் இருந்து நடத்தைச் சான்றிதழ் மற்றும் அரசிதழ் பதிவு பெற்ற அதிகாரியிடமிருந்து நற்பண்பு சான்றிதழ் கேட்கப்படுகிறது. இது நடைமுறைக்கு சாத்தியமற்றது. எனவே, அனுபவச் சான்றுடன் விண்ணப்பிக்கும்படி விதியை தளர்த்த வேண்டும். மேலும், தமிழ் வழி படித்தவர்களுக்கான இட ஒதுக்கீட்டு தகுதியில், முதுகலை படிப்பு வரையில் தமிழை பயிற்று மொழியாக கொண்டிருக்க வேண்டும் என்ற விதியிலும் படிப்பு சார்ந்த தளர்வுகளும் ஏற்படுத்தப்பட வேண்டும்'' என்று அறிக்கை வெளியிட்டு வலியுறுத்தியுள்ளார்.
English Summary
P Shanmugam insists that relaxations should be made in the eligibility rules for reservation of assistant professor posts