தீபாவளி பாக்ஸ் ஆபிஸ் பேட்டில்: டியூட் vs பைசன் vs டீசல் - கோலிவுட்டில் தீபாவளி வின்னர் யார்?
Diwali Box Office Battle Dude vs Bison vs Diesel Who is the Diwali winner in Kollywood
2025-ம் ஆண்டின் தீபாவளி பண்டிகை, திரையுலக ரசிகர்களுக்கு ஒரு பெரிய விருந்தாக அமைந்துள்ளது. இந்த வருடம் பெரிய ஹீரோக்கள் இல்லை என்றாலும், இளம் தலைமுறை நடிகர்கள் மூவரும் தங்கள் படங்களுடன் களமிறங்கியுள்ளனர். பிரதீப் ரங்கநாதனின் “டியூட்”, துருவ் விக்ரமின் “பைசன் காளமாடன்”, மற்றும் ஹரிஷ் கல்யாணின் “டீசல்” — இந்த மூன்று படங்களும் ஒரே நாளில் ரிலீஸ் ஆகி, ரசிகர்களின் தீபாவளியை சினிமா பண்டிகையாக மாற்றியுள்ளன.
முதலில் “டியூட்” — பிரதீப் ரங்கநாதனின் இந்த படத்தில் சமூக பிரச்சினைகளை நகைச்சுவையுடன் சொல்ல முயற்சி செய்துள்ளார் இயக்குனர். ஆணவக் கொலைகளுக்கு எதிரான ஒரு ஜென்செட் கருத்தை படமாக்கியுள்ளார்கள். காமெடி காட்சிகள், இளைய தலைமுறை கவர்ச்சியான பாணி எல்லாம் இருந்தாலும், கதையை சொல்லும் விதம் சிலருக்கு சரியாக படவில்லை. வசனங்களில் சிறிது பலவீனம் இருந்ததால், விமர்சன ரீதியாக படம் கலவையான வரவேற்பை பெற்றுள்ளது. எனினும் குடும்பத்தோடு பார்க்க ஏற்ற ஒரு பொழுதுபோக்கு படம் என்றே சொல்லலாம்.
அடுத்து ஹரிஷ் கல்யாணின் “டீசல்”. சென்னையை மையமாகக் கொண்டு கடத்தல் ஆயில், போலீஸ் பிரச்சனை, காதல், சமூக நியாயம் — என பல கமாக்கள் கலந்த ஒரு ஆக்ஷன் டிராமா. ஹரிஷ் கல்யாண் இதில் பூரண ஆக்ஷன் ஹீரோவாக மாறியுள்ளார். நல்ல மெசேஜ் இருந்தாலும், திரைக்கதை மற்றும் கட்டமைப்பில் சிறிது குறை இருந்ததால் படம் ‘ஆவரேஜ்’ என விமர்சகர்கள் கூறுகின்றனர். இன்னும் சிறிது கவனம் செலுத்தியிருந்தால், டீசல் இந்த தீபாவளியின் ‘சர்ப்ரைஸ் ஹிட்’ ஆனிருக்க வாய்ப்பு இருந்தது.
ஆனால் எல்லோரையும் கவர்ந்தது துருவ் விக்ரம் நடித்த “பைசன் காளமாடன்”. மாரி செல்வராஜ் இயக்கிய இந்த படம் சாதிய வன்மம், வறுமை, காதல், கபடி — என பல சமூக உண்மைகளை நெகிழவைக்கும் விதத்தில் வெளிப்படுத்தியுள்ளது. துருவ் விக்ரம் கிட்டான் என்ற கதாபாத்திரத்தில் ஆழமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். இயக்குனர் மாரி செல்வராஜின் திரைக்கதை, காட்சியமைப்பு, பின்னணி இசை அனைத்தும் பாராட்டைப் பெற்றுள்ளன. விமர்சகர்கள் ஒருமித்த குரலில், “மாரி செல்வராஜின் இன்னொரு அற்புதம் இது” என கூறுகின்றனர்.
பாக்ஸ் ஆபிஸ் நிலவரப்படி, தீபாவளி ரிலீஸ்களில் பைசன் தான் தற்போது முன்னிலையில் உள்ளது. விமர்சன ரீதியாகவும், பார்வையாளர்களிடமும் சிறந்த வரவேற்பு பெற்றுள்ளதால், இந்த ஆண்டின் தீபாவளி வின்னர் — பைசன் காளமாடன் தான் எனலாம்.
English Summary
Diwali Box Office Battle Dude vs Bison vs Diesel Who is the Diwali winner in Kollywood