டி20 உலகக்கோப்பை 2026: பேட் கம்மின்ஸ் விலகல் – மிஸ்ட்ராங் டீம் களமிறக்கிய ஆஸ்திரேலியா..கேப்டன் யார்?
T20 World Cup 2026 Pat Cummins out Australia field a weak team Who will be the captain
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2026 தொடருக்கான ஆஸ்திரேலிய அணி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த அணிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. காயம் காரணமாக நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரும் முன்னாள் கேப்டனுமான பேட் கம்மின்ஸ் இந்த மெகா தொடரில் இருந்து விலகியுள்ளார். இந்தியா மற்றும் இலங்கையில் பிப்ரவரி 7 முதல் மார்ச் 8 வரை நடைபெற உள்ள இந்த உலகக்கோப்பைக்கான 15 பேர் கொண்ட அணியை ஆஸ்திரேலியா இறுதி செய்துள்ளது.
2021 டி20 உலகக்கோப்பையை வென்ற ஆஸ்திரேலிய அணியை இந்த முறை மிட்செல் மார்ஷ் வழிநடத்த உள்ளார். ஐசிசி வெளியிட்ட தகவலின்படி, பேட் கம்மின்ஸ் தனது முதுகுப் பகுதி காயத்திலிருந்து இன்னும் முழுமையாக குணமடையாததால், உலகக்கோப்பையில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதேபோல், டாப் ஆர்டர் பேட்ஸ்மேனான மேத்யூ ஷார்டும் 15 பேர் கொண்ட அணியில் இடம் பெறவில்லை.
அவர்களுக்குப் பதிலாக, இடது கை வேகப்பந்து வீச்சாளரான பென் ட்வார்ஷூயிஸ் மற்றும் அனுபவ பேட்ஸ்மேன் மேத்யூ ரென்ஷா அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த மாற்றங்கள் அணியின் சமநிலைக்கு உதவும் என தேர்வுக் குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.
ஆஸ்திரேலிய அணியின் தேர்வாளர் டோனி டோட்மெய்ட் இதுகுறித்து பேசுகையில், “பேட் கம்மின்ஸுக்கு மீள அதிக நேரம் தேவைப்படுவதால், அவருக்குப் பதிலாக பென் ட்வார்ஷூயிஸ் ஒரு சிறந்த தேர்வாக இருப்பார். அவரது இடது கை வேகப்பந்து வீச்சு, சுறுசுறுப்பான ஃபீல்டிங் மற்றும் கடைசி வரிசை பேட்டிங் திறன் அணிக்கு கூடுதல் பலம் தரும். மேலும், பந்தை ஸ்விங் செய்யும் திறனும், வேறுபாடுகளை பயன்படுத்தும் புத்திசாலித்தனமும், ஆசிய சூழலுக்கு மிகவும் பொருத்தமானவை” என்றார்.
மேலும், மேத்யூ ரென்ஷா சமீப காலமாக அனைத்து வடிவங்களிலும் சிறப்பாக விளையாடி வருவதாகவும், குயின்ஸ்லாந்து புல்ஸ் மற்றும் பிரிஸ்பேன் ஹீட் அணிகளுக்காக வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் முக்கிய பங்களிப்புகளை அளித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இலங்கையில் நடைபெறும் லீக் போட்டிகளில் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான சூழல் இருக்கும் என்பதால், மிடில் ஆர்டரில் ரென்ஷாவின் அனுபவம் முக்கிய பங்கு வகிக்கும் எனவும் தெரிவித்தார்.
ஆஸ்திரேலிய 15 பேர் கொண்ட அணி:
மிட்செல் மார்ஷ் (கேப்டன்), சேவியர் பார்ட்லெட், கூப்பர் கொனோலி, டிம் டேவிட், பென் ட்வார்ஷூயிஸ், கேமரூன் கிரீன், நாதன் எல்லிஸ், ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்லிஸ், மேத்யூ குஹ்னெமன், கிளென் மேக்ஸ்வெல், மேத்யூ ரென்ஷா, மார்கஸ் ஸ்டோய்னிஸ் மற்றும் ஆடம் ஜாம்பா.
2026 டி20 உலகக்கோப்பையின் குரூப் பி பிரிவில் ஆஸ்திரேலியா அயர்லாந்து, ஜிம்பாப்வே, இலங்கை மற்றும் ஓமன் ஆகிய அணிகளுடன் இடம்பெற்றுள்ளது. பிப்ரவரி 11-ஆம் தேதி கொழும்பில் உள்ள ஆர். பிரேமதாச மைதானத்தில் அயர்லாந்துக்கு எதிராக தனது முதல் போட்டியை ஆஸ்திரேலியா விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.
English Summary
T20 World Cup 2026 Pat Cummins out Australia field a weak team Who will be the captain