நீங்கள் சீர்குலைக்க நினைத்தாள்., அதனை அதிமுக., தமிழக அரசை எச்சரிக்கும் ஓபிஎஸ்.! - Seithipunal
Seithipunal


அனைவருக்குமான பொது விநியோகத் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும் அதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

எண்ணற்ற கவர்ச்சிகரமான திட்டங்களை செயல்படுத்த உள்ளதாக தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்துவிட்டு ஆட்சிக்கட்டிலில் அமர்ந்த திமுக தற்போது வருமான வரி செலுத்துவோரின் விபரங்களை அவர்களின் ஆதார் எண்ணுடன் வழங்குமாறு வருமான வரித்துறையினை உணவு துறை வாயிலாக கேட்டுள்ளது 'அனைவருக்குமான பொது விநியோகத் திட்டம்' என்பதை சீர்குலைப்பதாகா அமைந்துள்ளது என்றும், இது வாக்களித்த மக்களை வஞ்சிக்கும் செயல் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் தமிழகத்தில் அனைவருக்குமான பொது விநியோகத் திட்டம் செயல்பாட்டில் உள்ளது என்றும் ஆனால் மற்ற மாநிலங்களில் இலக்கு சார்ந்த பொது விநியோகத் திட்டம் செயல்பாட்டில் உள்ளது என்றும் தெரிவித்துள்ள அவர், அதன்படி தமிழகத்தில் அனைவருக்குமான பொது விநியோகத் திட்டத்தின் மூலம் பயன் அடையும் பயனாளிகளின் எண்ணிக்கை மற்ற மாநிலங்களை விட அதிகமாக இருக்கிறது என்றும், இதனால் மத்திய அரசிடமிருந்து பெரும் அரிசி போதுமானதாக இல்லாத சூழ்நிலையில் தமிழக அரசே சொந்த நிதியில் வெளிச் சந்தையில் அரிசியை வாங்கி பொது விநியோகத் திட்டத்தின் கீழ் மக்களுக்கு இலவசமாக வழங்கி வருகிறது, ஆனால் இந்தத் திட்டத்தில் உள்ள பயனாளிகளின் எண்ணிக்கையை குறைக்கும் பொருட்டு வருமானவரி விவரங்களை தமிழ்நாடு அரசின் உளவுத்துறை கேட்கிறதோ என்ற எண்ணம் தற்போது மக்கள் மத்தியில் நிலவுகிறது என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், இது குறித்து உணவுத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, எரிவாயு உருளைக்கு வரும் மானியத்தை வசதி படைத்தவர்கள் விட்டுத்தர வேண்டும் என்று மத்திய அரசு கோரிக்கை விடுத்த போது, லட்சக்கணக்கானோர் விட்டுத் தந்தனர் என்றும், ஆனால் அதே வசதி படைத்தவர்கள் நியாயவிலை கடைகளில் பொருட்களை வாங்க வில்லை என்றாலும் அந்த உரிமையை விட்டுத் தர மறுக்கிறார்கள் என்றும் இதன் காரணமாக முறைகேடு தொடர்கிறது என்றும், இதனை தடுக்கவே வருமான வரி செலுத்துபவர்களின் விவரங்களை ஆதார் எண்ணுடன் வழங்குமாறு கேட்டிருப்பதாகவும் அது வந்த பிறகு வசதி படைத்தவர்கள் ரேஷன் பொருட்களை விட்டுத் தருமாறு வலியுறுத்த திட்டமிட்டுள்ளதாகவும் கூறுவதாக பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ளன என்றும் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

 மேலும் நியாய விலைக் கடைகளில் நடைபெற்றுவரும் முறைகேடுகள் ஒழிக்கப்பட வேண்டும் என்பதில் யாருக்கும் மாறுபட்ட கருத்து இருக்க முடியாது, அதே சமயத்தில் வருமானத்தின் அடிப்படையில் பயனாளிகளின் எண்ணிக்கையை குறைத்து அனைவருக்குமான பொது விநியோகத் திட்டம் என்ற நோக்கத்தையே சீர்குலைப்பது என்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என்றும், ஐந்து லட்ச ரூபாய்க்கு மேல் ஆண்டு வருமானம் இருப்பவர்கள் எல்லாம் வருமான வரி வரம்புக்குள் வந்துவிடுவார்கள். ஒரு குடும்பத்தின் தலைவர் வருமான வரி செலுத்துபவராக இருந்தாலும் அவரை நம்பி எத்தனை நபர்கள் இருக்கிறார்கள்? அவருடைய பின்னணி என்ன? அவரால் வெளிச்சந்தையில் இருந்து பொருட்களை வாங்கி குடும்பத்தை நடத்த இயலுமா? என்பதை எல்லாம் ஆராய வேண்டும். ஆனால் இது நடைமுறைக்கு ஒவ்வாது என்றும் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு எரிவாயு சிலிண்டருக்கான மானிய தொகையை வாடிக்கையாளரின் வங்கிக் கணக்கில் செலுத்தும் திட்டத்தை துவக்கும்போது, வசதி படைத்தவர்கள் மானியத்தை விட்டுக்கொடுக்க வேண்டும் என்று பொதுவாக வேண்டுகோள் விடுத்ததே தவிர, வருமான வரி செலுத்துவோர் விவரங்களின் அடிப்படையில் வேண்டுகோள் வைக்க வில்லை. உண்மையிலேயே, வசதி படைத்தவர்கள் நியாயவிலை கடைகளில் பொருட்களை வாங்குவதை விட்டுத் தர வேண்டும் என்றால் பொதுவான ஒரு வேண்டுகோளை அரசின் சார்பில் வெளியிடுவதுதான் பொருத்தமாக இருக்குமே தவிர வருமான வரி செலுத்துவோரின் விவரங்களைப் பெற்று அதன் அடிப்படையில் அவர்களை வலியுறுத்துவது என்பது மக்களின் விருப்பத்திற்கு எதிரான செயல். மத்திய, மாநில அரசு ஊழியர்கள், வங்கி ஊழியர்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரிபவர்களில் பெரும்பாலானோர் உதவியாளர்களாகவும் கடைநிலை ஊழியர்கள் பணியாற்றுகிறார்கள். இவர்களெல்லாம் நீண்ட நாட்களாக பணியில் இருப்பதன் காரணமாக அவர்கள் வருமான வரி செலுத்தக் கூடியவர்களாக இருப்பார்கள். உயர் பதவியில் இருப்பவர்கள் மிக மிக குறைவு. இதில் தனியார் நிறுவனங்களில் பணியாற்றுபவர்களுக்கு பணி பாதுகாப்பு என்பது இல்லாத சூழ்நிலை உள்ளது. இவர்கள் எல்லாம் வருமான வரி செலுத்துகிறார்கள் என்பதை அடிப்படையாக வைத்து அவர்களை எல்லாம் வசதி படைத்தவர்களாக கருதமுடியாது. தமிழ்நாடு அரசின் இது போன்றதொரு முயற்சி ஏழை எளிய நடுத்தர மக்களை கடுமையாக பாதிக்கும் என்றும் தன்னுடைய அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

தற்போதைய முதலமைச்சர் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது 'ஒரே நாடு ஒரே ரேஷன்' என்ற திட்டத்தை எதிர்த்தவர். அதற்கு அப்போது அவர் கூறியது காரணங்களில் முக்கியமான ஒன்று அனைவருக்குமான பொது விநியோகத் திட்டம் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படுவதுதான். 

ஆனால் தற்போது தமிழ்நாடு அரசின் உணவுத் துறை எடுக்கும் நடவடிக்கையை பார்த்தால் ஒருவேளை தமிழ்நாடு அரசு அனைவருக்குமான பொது விநியோகத் திட்டம் என்ற நோக்கத்தில் இருந்து தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள இலக்கு சார்ந்த பொது விநியோகத் திட்டத்திற்கு திசை மாறுகிறதோ என்ற எண்ணம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. பொதுவான வேண்டுகோளின் அடிப்படையில் வசதிபடைத்தவர்கள் தாமாக முன்வந்து ரேஷன் பொருட்களை விட்டுத் தர முன்வந்தால் அதில் யாருக்கும் எந்த விதமான ஆட்சேபணையும் இல்லை. அதே சமயத்தில் வருமானத்தின் அடிப்படையில் பயனாளிகளின் எண்ணிக்கையை குறைத்து அனைவருக்குமான பொது விநியோகத் திட்டத்தின் நோக்கத்தையே சீர்குலைக்கும் முயற்சியில் தமிழ்நாடு அரசு ஈடுபட்டால் அதனை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கடுமையாக எதிர்க்கும் எனவும் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

எனவே தமிழக முதல்வர் அவர்கள் இதில் தனிக்கவனம் செலுத்தி அனைவருக்குமான பொது விநியோகத் திட்டம் என்பது தொடர்ந்து செயல் படுத்தப் படுவதையும், அரசின் செலவை மிச்சப் படுத்துவதற்காக பயனாளிகளின் எண்ணிக்கையை வருமானத்தின் அடிப்படையில் குறைத்து இலக்கு சார்ந்த பொது விநியோகத் திட்டமாக மாற்றும் முயற்சி தடுத்து நிறுத்தப்படுவதையும் உறுதி செய்ய வேண்டும் என்றும் தனது அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

OPS WARN TO TN GOVT NOPV


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->