தொகுதி பங்கீடு குறித்து எதுவும் பேசவில்லை; திமுக அகற்றப்பட வேண்டும் என்பதே இலக்கு – பியூஷ் கோயல் சந்திப்பில் நடந்தது இதுதான் - நயினார்
Nothing was said about seat sharing the goal is to eliminate DMK this is what happened at the Piyush Goyal meeting Nayinar
என்.டி.ஏ. கூட்டணியில் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் டிடிவி தினகரனை இணைப்பதற்காக எடப்பாடி பழனிசாமி பச்சை கொடி காட்டியதாகவும், ஓ.பன்னீர் செல்வத்துக்கு 3 தொகுதிகள், டிடிவி தினகரனுக்கு 6 தொகுதிகள் ஒதுக்க சம்மதம் தெரிவித்ததாகவும் தகவல்கள் வெளியாகிய நிலையில், இந்த விவகாரத்தில் தொகுதி பங்கீடு குறித்து எடப்பாடி பழனிசாமியுடன் எந்த பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ்நாட்டின் களநிலவரம், தேர்தல் சூழல் குறித்து மட்டுமே ஆலோசிக்கப்பட்டதாகவும், தொகுதி பங்கீடு குறித்து எந்த விவாதமும் நடக்கவில்லை என்றும் தெளிவுபடுத்தினார். பாஜகவும், அதிமுக கூட்டணியும் தேர்தலுக்கு தயாராக இருப்பதாகவும், மக்கள் யாருக்கு வாக்களிப்பது என்பதை இன்னும் முடிவு செய்யாத நிலை உள்ளது என்றும் கூறினார்.
தமிழ்நாட்டில் திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என்பதே பாஜகவின் முதன்மை நோக்கம் என்றும், ஒத்த கருத்துடையவர்கள் அனைவரும் ஓரணியில் இணைய வேண்டும் என்பதே விருப்பம் என்றும் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார். டிடிவி தினகரன் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, அரசியலில் நிரந்தர நண்பர்களும் இல்லை, நிரந்தர எதிரிகளும் இல்லை என்று பதிலளித்தார்.
விஜய் குறித்து எந்த பேச்சும் நடக்கவில்லை என்றும், அவரை ஸ்பாயிலர் என்று இப்போது சொல்ல முடியாது என்றும் கூறிய அவர், தேர்தலுக்கு இன்னும் மூன்று மாதங்கள் கால அவகாசம் இருப்பதால் அரசியல் நிலவரம் மாறக்கூடும் என்றார். பொங்கலுக்குப் பிறகு நல்ல மாற்றங்கள் நடக்கலாம் என்றும், “தை பிறந்தால் வழி பிறக்கும்” என்றார்.
மேலும், தற்போது வெளியாகும் பல்வேறு கருத்துக் கணிப்புகள் ஒரே மாதிரி இல்லை என்றும், ஒரு பகுதியின் கருத்துக் கணிப்பை மற்றொரு பகுதிக்கு பொருத்த முடியாது என்றும் கூறிய நயினார் நாகேந்திரன், இறுதியில் தமிழகத்தில் விடியக்கூடிய அரசு உருவாகும் என்ற நம்பிக்கையையும் வெளிப்படுத்தினார்.
English Summary
Nothing was said about seat sharing the goal is to eliminate DMK this is what happened at the Piyush Goyal meeting Nayinar