சென்னைக்கு புதிய உயிர் நீர்: ரூ.342 கோடியில் மாமல்லன் நீர்த்தேக்கம்...! - முதல்வர் அடிக்கல்
new lifeline Chennai Mamallan reservoir cost 342 crore Chief Minister lays foundation stone
சென்னை அடுத்த நெம்மேலியில், நீர்வளத்துறை சார்பில் ரூ.342 கோடி செலவில் புதியதாக மாமல்லன் நீர்த்தேக்கம் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. சென்னையின் 6-வது நீர்த்தேக்கம் என்ற பெருமை பெற்றுள்ள இந்த மாமல்லன் நீர்த்தேக்கத்துக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டினார்.
அந்த நிகழ்ச்சியில் அவர் பேசுகையில்,“காற்றும் நீரும் இந்த பூமியில் இருப்பதால்தான் உயிரினங்கள் உருவாகி வாழ்கின்றன. ‘நீரின்றி அமையாது உலகு’ என்று உலகப் பொதுமறை திருக்குறளில் வள்ளுவர் எடுத்துக்கூறியுள்ளார்.

இயற்கையோடு இணைந்த வாழ்க்கைதான் தமிழர்களின் பாரம்பரியம். அதே பாதையில்தான் திராவிட மாடல் அரசு பயணிக்கிறது” என்று கூறினார்.இதைத் தொடர்ந்து அவர்,“தி.மு.க. ஆட்சியில் அணைகள் கட்டப்படவில்லை என்று பொய் பிரச்சாரம் செய்கிறார்கள்.
ஆனால் 1967 முதல் 2011 வரை நடந்த தி.மு.க. ஆட்சிக் காலங்களில் 43 அணைகள் கட்டப்பட்டுள்ளன. அந்த 43 நீர்த்தேக்கங்களின் வடிவமைப்பாளராக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி விளங்குகிறார்” என தெரிவித்தார்.
மேலும்,“மேட்டூர் அணை முழுமையாக நிரம்பிய நிலையில் சரியான நேரத்தில் திறக்கப்பட்டுள்ளது. காவிரி டெல்டா பகுதிகளில் ரூ.459 கோடி செலவில் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தற்போது 121 தடுப்பணைகள், 63 அணைக்கட்டுகள் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன” என்றும் கூறினார்.
புதிய மாமல்லன் நீர்த்தேக்கம் குறித்து பேசுகையில்,“ரூ.342.60 கோடி மதிப்பீட்டில் இந்த நீர்த்தேக்கம் அமைக்கப்படுகிறது. இதன் மூலம் நாள்தோறும் 170 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்க முடியும். சுமார் 13 லட்சம் மக்களுக்கு குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் திறன் இந்த திட்டத்திற்கு உள்ளது.
மேலும் 34 கி.மீ. நீள கரையுடன் இந்த நீர்த்தேக்கம் உருவாக்கப்படும்” என முதலமைச்சர் விளக்கினார்.சென்னையைச் சுற்றியுள்ள செம்பரம்பாக்கம், புழல், பூண்டி, சோழவரம் ஏரிகளை நினைவூட்டிய அவர்,
“நிதி மேலாண்மை போலவே நீர் மேலாண்மையும் மிக முக்கியம். தலைநகர் சென்னைக்காக தி.மு.க. அரசு பல்வேறு வளர்ச்சி திட்டங்களை கொண்டு வந்துள்ளது. சென்னையின் முகமே மாறும் அளவுக்கு எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்” என்று கூறினார்.
English Summary
new lifeline Chennai Mamallan reservoir cost 342 crore Chief Minister lays foundation stone