'இரட்டை எண்ணிக்கையில் பாஜக எம்.எல்.ஏ.க்கள் சட்டப்பேரவைக்கு செல்வார்கள்'; நயினார் நாகேந்திரன் நம்பிக்கை..! - Seithipunal
Seithipunal


பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், பாஜக மேலிட பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. மற்றும் மாநகர் மாவட்ட தலைவர் ரமேஷ்குமார் உள்ளிட்டோர் கோவை கோட்டைமேட்டில் உள்ள சங்கமேஸ்வரர் கோயிலில் இன்று (ஜனவரி 10) சுவாமி தரிசனம் செய்தனர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய நயினார் நாகேந்திரன் கூறியதாவது; இந்தியா பல ஆண்டுகளுக்கு முன்னர் முகலாய மன்னர்களால் ஆட்சி செய்யப்பட்ட போது, பல்வேறு கொடுமைகள் நிகழ்த்தப்பட்டன. மத மாற்றங்கள் செய்யப்பட்டதோடு, இந்து ஆலயங்கள் அழிக்கப்பட்டன என்றும், மதுரை மீனாட்சி அம்மன் கோயில் வரை படையெடுப்பு நடந்தது என்று கூறியுள்ளார்.

மேலும், சோமநாதபுரம் ஆலயத்தில் கஜினி முகமது 17 முறை படை எடுத்து, செல்வங்களை எல்லாம் எடுத்துச் சென்றதோடு, ஆலயங்களும் சேதப்படுத்தப்பட்டன என்று நயினார் தெரிவித்துள்ளார்.

அத்துடன், ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு அந்த கோயில் புனரமைக்கப்பட்டு இன்று 75 ஆண்டுகள் ஆகிறது. இந்த 75-வது ஆண்டு விழாவில் தமிழகம் முழுவதும் 150 சிவாலயங்களில் சாந்தி பூஜை நடைபெறுகிறது. இந்தியா முழுவதும் எல்லா சிவாலயங்களிலும் சாந்தி பூஜை நடைபெறுகிறது என்று தெரிவித்துள்ளார். இதனடிப்படையில் சிவாலயத்தில் இன்று நாங்கள் வழிபாடு செய்திருக்கிறோம் என்றும், இந்த வழிபாட்டின் போது, என்டிஏ ஆட்சி அமைய வேண்டும் என வேண்டியுள்ளோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

பின்னர் செய்தியாளர்கள் அவரிடம்;  'கூட்டணி ஆட்சி அமையுமா?' 'பாஜகவில் இருந்து வெற்றி பெற்றால் அமைச்சர்கள் ஆவார்களா?'. என கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்துள்ள நயினார் நாகேந்திரன் கூறியதாவது:

தேசிய ஜனநாயக ஆட்சி, கூட்டணிக் கட்சியின் ஆட்சி அமையும் என்றும், எங்கள் கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் பழனிசாமி. ஆகையால் அமைச்சர்கள் யார் என்பது தேர்தல் முடிந்து முடிவு செய்யலாம் என்று தெரிவித்துள்ளார்.

அத்துடன், பாஜகவில் இருந்து வெற்றி பெற்றால் அமைச்சர்கள் ஆவார்களா என்பதை அப்புறம் பார்க்கலாம். அமைச்சரவையில் பங்கு வேண்டும் என்ற எந்த அழுத்தமும் இதுவரை கொடுக்கவில்லை. எத்தனை இடங்கள் என்பதை முடிவு செய்தவுடன் சொல்கின்றோம் என்று கூறியுள்ளார்.

மேலும், இரட்டை எண்ணிக்கையில் பாஜக எம்.எல்.ஏ.க்கள் சட்டப்பேரவைக்கு செல்வார்கள் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். தேமுதிக இப்பொழுது கூட்டணி முடிவை சொல்லவில்லை என்பதால், அவர்களுடன் கூட்டணி தொடர்பாகவும் பேசவில்லை என்று கூறியதோடு, ஒவ்வொருவராக என்டிஏ கூட்டணிக்கு வர ஆரம்பித்துள்ளனர். அதன்படி, பாமக அன்புமணி ராமதாஸ் வந்திருக்கிறார். தை பிறந்தால் வழி பிறக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து செய்தியாளர்கள் ''பாமகவில் இருந்து அன்புமணி ராமதாஸ் வந்திருப்பதால், ஐம்பது சதவீதம் மட்டும் தானே கூட்டணிக்கு வந்திருக்கிறது'' என்று கேள்வி எழுப்பினர். அதற்கு  ''அன்புமணி ராமதாஸ் வந்திருக்கிறார். அது 50 சதவீதம் மட்டும்தான் என சொல்ல முடியாது என்று கூறியுள்ளார்.

மேலும், ஐடி, ஈடி வரிசையில் சென்சார் போர்டையும் பாஜக பயன்படுத்துகிறது என முதல்வர் விமர்சித்துள்ளார் என்ற கேள்விக்கு;  'பராசக்தி' படம் ரிலீஸ் ஆனது முதல்வருக்கு தெரியாதா..? இந்த படத்தை எப்படி சென்சார் போர்டு ரிலீஸ் செய்தது.? சென்சார் போர்டு அவர்கள் விதிப்படி செயல்படுகின்றனர். அண்ணாவை பார்த்து யாரும் பயப்படவில்லை'' என்று பதிலளித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Nainar Nagendran expressed confidence that BJP MLAs would go to the assembly in double digit numbers


கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?



Advertisement

கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?




Seithipunal
--> -->