சுஸூகியின் முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ‘e-அக்சஸ்’ – இந்தியாவில் வெளியானது.. விலை என்ன தெரியுமா?
Suzuki first electric scooter e Access launched in India
சுஸூகி நிறுவனம் இந்திய சந்தையில் தனது முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டராக ‘e-அக்சஸ்’ (e-Access) மாடலை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. நீண்ட காலமாக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் குறித்து தகவல்களை மட்டும் வெளியிட்டு வந்த சுஸூகி, இறுதியாக முழுமையான தயாரிப்புடன் களமிறங்கியுள்ளது. ரூ.1.88 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என்ற விலையில் வெளியிடப்பட்டுள்ள இந்த ஸ்கூட்டர், இந்தியாவில் கிடைக்கும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் மிகவும் விலை உயர்ந்த மாடல்களில் ஒன்றாக உள்ளது.
புதிய e-அக்சஸ் ஸ்கூட்டரில் 4.1 kW பவர் மற்றும் 15 Nm டார்க் வழங்கும் எலெக்ட்ரிக் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. இந்த மோட்டார் ஸ்விங் ஆர்மில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், 3 kWh LFP பேட்டரி பேக் இதில் வழங்கப்பட்டுள்ளது. இந்த பேட்டரி ஒரு முழு சார்ஜில் 95 கிலோமீட்டர் IDC ரேஞ்ச் வழங்கும் திறன் கொண்டதாக சுஸூகி தெரிவித்துள்ளது.
இந்த பேட்டரி மற்றும் மோட்டார் அமைப்புகள் கடினமான சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும், வெவ்வேறு காலநிலைகளிலும் பாதுகாப்பாக இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் நிறுவனம் கூறுகிறது. இதன் மூலம் நீண்ட கால பயன்பாட்டில் நம்பகத்தன்மை இருக்கும் என சுஸூகி வலியுறுத்துகிறது.
ரைடிங் அனுபவத்தை மேம்படுத்த எக்கோ, ரைடு A, ரைடு B என மூன்று ரைடிங் மோடுகள் வழங்கப்பட்டுள்ளன. இதுடன் ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங் மற்றும் ரிவர்ஸ் அசிஸ்ட் வசதிகளும் இடம்பெற்றுள்ளன. குறைந்த சார்ஜ் நிலையில் கூட நிலையான த்ராட்டில் ரெஸ்பான்ஸ் கிடைக்கும் வகையில் ஸ்கூட்டர் டியூன் செய்யப்பட்டுள்ளதாக சுஸூகி தெரிவித்துள்ளது.
கட்டமைப்பைப் பொறுத்தவரை, அலுமினியம் பேட்டரி கேஸ் மற்றும் எடை குறைந்த ஃபிரேம் பயன்படுத்தப்பட்டுள்ளது. பராமரிப்பு செலவை குறைக்கும் வகையில் பெல்ட் ஃபைனல் டிரைவ் அமைப்பும் இதில் வழங்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாக, 7 ஆண்டுகள் அல்லது 80,000 கிலோமீட்டர் வரை நீடிக்கும் வாரண்டி எந்த கூடுதல் கட்டணமும் இன்றி வழங்கப்படுகிறது.
மேலும், வாங்கிய 3 ஆண்டுகளுக்குப் பிறகு ஸ்கூட்டரை 60% மதிப்பில் திருப்பி வாங்கும் ‘பை-பேக்’ உறுதியையும் சுஸூகி வழங்குகிறது. முதல் எலெக்ட்ரிக் மாடல் என்பதால் வாடிக்கையாளர்களின் தயக்கத்தை போக்க இந்த சலுகைகள் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது.
இந்தியாவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் சந்தை கடந்த சில ஆண்டுகளில் வேகமாக வளர்ந்து வரும் நிலையில், சுஸூகியின் வருகை சற்றுத் தாமதமாகவே அமைந்துள்ளது. தற்போது 2ம் தலைமுறை சிம்பிள் ஒன் (ரூ.1.70 லட்சம்) மற்றும் ஏத்தர் 450 ஏபெக்ஸ் (ரூ.1.90 லட்சம்) போன்ற மாடல்களுடன் e-அக்சஸ் நேரடியாக போட்டியிட உள்ளது.
ஒரு லட்சம் ரூபாய் சுற்றிய விலையிலான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களையே பெரும்பாலான வாடிக்கையாளர்கள் விரும்பும் சூழலில், ரூ.1.88 லட்சம் என்ற உயர்ந்த விலையில் அறிமுகமாகியுள்ள e-அக்சஸ் சந்தையில் எவ்வளவு வரவேற்பைப் பெறும் என்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், பிராண்டு நம்பகத்தன்மை, நீண்ட வாரண்டி மற்றும் பை-பேக் உறுதி ஆகியவை சுஸூகிக்கு சாதகமாக அமையுமா என்பதே இனி பார்க்க வேண்டிய விஷயமாக உள்ளது.
English Summary
Suzuki first electric scooter e Access launched in India