சிவி சண்முகம் வீட்டிற்கு வந்த நயினார் நாகேந்திரன்.. ஒரு மணி நேரம் நடந்த ஆலோசனை! காரணம் என்ன?
Nainar Nagendran came to CV Shanmugam house The consultation lasted for an hour What was the reason
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், திண்டிவனத்தில் அதிமுக மாநிலச் செயலாளர் மற்றும் எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கமானவர் எனக் கூறப்படும் எம்பி சிவி சண்முகத்தை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து பேசினார். மரியாதை நிமித்தம் நடந்ததாகக் கூறப்பட்ட இந்தச் சந்திப்பு, சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நீண்டது. இதனால் இந்தச் சந்திப்பின் பின்னணி குறித்து அரசியல் வட்டாரங்களில் பல்வேறு ஊகங்கள் எழுந்துள்ளன.
சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 7 மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில், அதிமுக – பாஜக கூட்டணி உறுதியாகி தேர்தல் முன்னேற்பாடுகள் வேகமெடுத்து வருகின்றன. சமீபத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தார். அடுத்த நாளே பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனையும் டெல்லி தலைமையகம் அழைத்து ஆலோசனைகள் நடத்தியது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து டிடிவி தினகரன் விலகியதைத் தொடர்ந்து அண்ணாமலை அவரை சந்தித்தார். ஆனால் தினகரன், கூட்டணிக்கு திரும்பும் வாய்ப்பைத் திட்டவட்டமாக மறுத்தார். அதேபோல், அதிமுக ஒருங்கிணைவு குறித்து பேசிய செங்கோட்டையனை, சிவி சண்முகம் கடுமையாக விமர்சித்தது அண்மையில் அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் நயினார் நாகேந்திரன், திண்டிவனத்தில் உள்ள சிவி சண்முகத்தின் இல்லத்திற்கு நேரில் சென்று, நீண்ட நேரம் ஆலோசனை நடத்தினார். எஸ்பி வேலுமணி, தங்கமணி ஆகியோருக்குப் பின் எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கமானவராக கருதப்படும் சிவி சண்முகம், டெல்லியில் பாஜக தலைவர்களுடன் எடப்பாடி பழனிசாமியின் தொடர்பை உறுதிப்படுத்தும் பாலமாகக் கருதப்படுகிறார்.
சந்திப்புக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய நயினார் நாகேந்திரன்,“திருச்சிக்கு செல்லும் வழியில் தம்பியான சிவி சண்முகத்தை மரியாதைக்காக சந்தித்தேன். எங்கள் நட்பு நீண்டது. எந்தக் கட்சியிலும் இருந்தாலும் நான் அவரைச் சந்திப்பேன். இதில் அரசியல் நோக்கம் இல்லை”எனத் தெரிவித்தார்.
ஆனாலும், அரசியல் வட்டாரங்களில் இது ஒரு நட்புச் சந்திப்பை விட தேர்தல் கூட்டணி மற்றும் தொகுதி பேச்சுவார்த்தைகள் தொடர்பான ஆலோசனையாகவே பார்க்கப்படுகிறது.
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் விரைவில் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். இதற்காக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து அழைப்பு விடுத்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவும் பங்கேற்கவுள்ளார்.
வடமாவட்டங்களில் பாஜக அதிக தொகுதிகளில் போட்டியிட விரும்புகிறது. அதற்காக சிவி சண்முகத்தின் ஆதரவு முக்கிய பங்காற்றலாம் என்பதால், தேர்தல் முன்னேற்பாடுகளை வலுப்படுத்தும் நோக்கில் நயினார் நாகேந்திரன் இந்தச் சந்திப்பை நடத்தியிருக்கலாம் என்று அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.
English Summary
Nainar Nagendran came to CV Shanmugam house The consultation lasted for an hour What was the reason