ஓரம்கட்டப்படும் நயினார்! தமிழக பாஜக தலைவர் ரேஸில் ராம சீனிவாசன் முன்னிலை? பாஜகவில் நடப்பது என்ன?
Nainar being sidelined Rama Srinivasan leading the race for Tamil Nadu BJP President What is happening within the BJP
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக கடுமையான பின்னடைவை சந்தித்த நிலையில், மாநிலக் கட்சித் தலைமையில் விரைவில் முக்கிய மாற்றங்கள் நடைபெறலாம் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக, தமிழக பாஜக தலைவர் பதவிக்கான போட்டியில் மாநில பொதுச்செயலாளர் ராம சீனிவாசன் முன்னிலையில் இருப்பதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சமீபத்திய சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து கட்சிக்குள் மறுசீரமைப்பு குறித்த ஆலோசனைகள் தீவிரமடைந்துள்ளன. இதற்கிடையில், முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து விலகி, புதிய அரசியல் இயக்கத்தைத் தொடங்கியிருப்பது தமிழக பாஜகவுக்கு மேலும் சவாலாக அமைந்துள்ளது.
அண்ணாமலையின் விலகலைத் தொடர்ந்து, அவரது ஆதரவாளர்கள் மற்றும் பல முக்கிய நிர்வாகிகள் புதிய இயக்கத்தில் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் தமிழக பாஜக அமைப்பை மறுகட்டமைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக டெல்லி மேலிடம் கருதுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், புதிய மாநிலத் தலைவரைத் தேர்வு செய்வதற்கான பணிகளில் பாஜக தேசியத் தலைமை தீவிரமாக ஈடுபட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி, மாநில பொதுச்செயலாளர் ராம சீனிவாசன் தலைவர் பதவிக்கான போட்டியில் முதலிடத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. கட்சியின் சித்தாந்தங்களை தெளிவாக எடுத்துரைக்கும் திறனும், ஆர்.எஸ்.எஸ். பின்னணியும் அவருக்கு சாதகமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.
அதேபோல், மாநில துணைத் தலைவர்களான நாராயணன் வெங்கடேசன் மற்றும் பேராசிரியர் கனகசபாபதி ஆகியோரின் பெயர்களும் தலைவர் பதவிக்கான பரிசீலனைப் பட்டியலில் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனிடையே, தமிழக பாஜகவின் முக்கியப் பொறுப்பான மாநில அமைப்புச் செயலாளர் பதவிக்கு மூத்த நிர்வாகி கே.டி. ராகவனை நியமிக்க டெல்லி தலைமை ஆலோசித்து வருவதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கட்சியின் அடிமட்ட அமைப்பை வலுப்படுத்துவதிலும், தொண்டர்களை ஒருங்கிணைப்பதிலும் அவருக்கு உள்ள அனுபவம் தற்போதைய சூழலில் கட்சிக்கு உதவியாக இருக்கும் என கருதப்படுகிறது.
மேலும், மத்திய அமைச்சரவை மாற்றம் குறித்த பேச்சுகளும் அரசியல் வட்டாரங்களில் எழுந்துள்ளன. அதன்படி, மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தனது பதவியில் இருந்து மாற்றப்படலாம் என்றும், அந்த இடத்திற்கு தற்போதைய தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கொண்டு வரப்படலாம் என்றும் கட்சியினர் மத்தியில் பேசப்பட்டு வருகிறது.
தமிழக பாஜக தலைமை மாற்றம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
Nainar being sidelined Rama Srinivasan leading the race for Tamil Nadu BJP President What is happening within the BJP