விவசாயிகளின் உயிருடன் விளையாடாதீர்கள் விஜய்''; நாகை விவசாயி உயிரிழப்பு குறித்து நயினார் நாகேந்திரன் காட்டம்..!
Nagendran tells Vijay not to play with the lives of farmers
''பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டுமென போராட்டத்தில் பங்கேற்று வீடு திரும்பிய, நாகை விவசாயி சோமசுந்தரம் நெஞ்சுவலியால் உயிரிழந்த செய்தி அதிர்ச்சியளிக்கிறது'' என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது;
''தேர்தலின் போது தவெக அளித்த வாக்குறுதியின்படி, பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டுமென சென்னையில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்று விட்டு வீடு திரும்பிய 70 வயதான நாகை மாவட்ட விவசாயி சோமசுந்தரம் நெஞ்சுவலியால் உயிரிழந்துவிட்டதாக வெளியாகியுள்ள செய்திகளைப் படித்தீர்களா முதல்வரே? இந்த மரணத்தின் கறைகள் உங்கள் கரங்களிலும் படிந்துள்ளன என்பதை உணர்ந்தீர்களா?
“5 ஏக்கருக்குள் நிலம் வைத்திருப்போரின் அனைத்து பயிர்க்கடன்களும் ரத்து செய்யப்படும்” என்று கூறிய நீங்கள், அரியணையில் அமர்ந்த பிறகு பயிர்க்கடன்களில் வெறும் ரூ.75,000-ஐ மட்டுமே தள்ளுபடி செய்வதாக மாற்றி அறிவித்தது அப்பட்டமான ஏமாற்று நாடகம். சொன்னதை சொன்னபடி செய்யாத உங்கள் துரோகத்தை ஜீரணிக்க முடியாமல்தான், தற்போது நூற்றுக்கணக்கான விவசாயிகள் மன உளைச்சலுடன் தெருவில் இறங்கிப் போராடி வருகின்றனர். ஆனால், போராடும் விவசாயிகளை நீங்கள் தொடர்ந்து அலட்சியப்படுத்துவது கடும் கண்டனத்துக்குரியது.
உலகுக்கே படியளக்கும் விவசாயிகளை இப்படி மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் வதைப்பதற்காக மக்கள் உங்களைத் தேர்ந்தெடுக்கவில்லை முதல்வரே. எனவே, போராட்டங்கள் மூலமாவது உங்கள் கவனத்தைப் பெற முடியுமா என தொடர்ந்து முயற்சித்துக் கொண்டிருக்கும் விவசாயிகளை இனியும் வஞ்சிக்காதீர்கள். இனியொரு உயிர் பலி நடக்கும் முன்னே, நீங்கள் சொன்னபடி பயிர்க்கடனை முழுமையாக ரத்து செய்யுங்கள். உண்டி கொடுத்தோரின், வாழ்வாதாரத்தைப் பேணுங்கள்'' எனத் தெரிவித்துள்ளார்.
English Summary
Nagendran tells Vijay not to play with the lives of farmers