''தவெக அரசு குறித்து யாரும் 'ரன்னிங் கமென்ட்ரி' கொடுக்க தேவையில்லை''; கார்த்தி சிதம்பரம் எம்.பி கருத்து..!
MP Karti Chidambaram opines that no one needs to provide a running commentary regarding the DMK government
''கூட்டணி கட்சிக்கு தவெக மாநிலங்களவை எம்பி சீட் கொடுத்ததை வரவேற்கிறேன். தேர்தலுக்கு முன்பும், பின்புறம் கூட்டணி மாறுவது இயல்பான ஒன்றுதான். தவெக அரசு குறித்து யாரும் அவசரமாக 'ரன்னிங் கமென்ட்ரி' கொடுக்க தேவையில்லை'' என சிவகங்கை எம்.பி. கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை அருகே முத்துப்பட்டியில் எம்.பி தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்ட கலையரங்கை கார்த்தி சிதம்பரம் எம்.பி. திறந்து வைத்து விட்டு செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது;
கூட்டணி கட்சிக்கு தவெக மாநிலங்களவை எம்பி சீட் கொடுத்ததை வரவேற்கிறேன் என்றும், தேர்தலுக்கு முன்பும், பின்புறம் கூட்டணி மாறுவது இயல்பான ஒன்றுதான் என்று தெரிவித்துள்ளார்.

அத்துடன், கடந்த 2014 மக்களவைத் தேர்தலை தவிர்த்து, 2004-ஆம் ஆண்டிலிருந்து நாங்கள் திமுக கூட்டணியில் தான் இருந்தோம். இந்தத் தேர்தலில் விஜய் முதல்வராக வேண்டும் என்று மக்கள் வாக்களித்துள்ளனர். நாங்கள் திமுக கூட்டணியிலேயே நீடித்தாலும் கூட, திமுகவால் ஆட்சி அமைத்திருக்க முடியாது என குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம், தவெகவும் தனித்து ஆட்சி அமைக்க முடியாத சூழல் இருந்தது. இதனால் தமிழகத்தில் நிலையான ஆட்சி அமையவதற்காக தவெகவுக்கு காங்கிரஸ், விசிக உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு அளித்தன. இது இயல்பான முடிவுதான் என்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

மேலும், திமுக ஆட்சி அமைக்க வாய்ப்பிருந்து, காங்கிரஸ் தவெகவுக்கு ஆதரவு அளித்திருந்தால், அவர்களது குற்றச்சாட்டு சரியானது என்று கூறியதோடு, நாடாளுமன்றத்தில் காங்கிரஸ், திமுக, ஒன்றாகத்தான் அமர்ந்து வந்தோம். தற்போது கூட்டணியில் இல்லாததால் திமுக தனியாக இருக்கைகள் ஒதுக்க சபாநாயகருக்கு கடிதம் கொடுத்தது இயல்பானதுதான் என்று தெரிவித்துள்ளார்.
அத்துடன், தொழில் முதலீடுகளை ஈர்க்க அனைத்து விதமான உத்திகளையும் கையாளலாம் என்றும், 'இன்ஸ்டாகிராம்' என்ற சமூக வலைதளம் ஒரு தகவல் தொடர்பு சாதனம் தான். அதில் அமைச்சர் தொழில் முதலீடுகளுக்கு அழைப்பு விடுத்ததில் தவறில்லை என்று சுட்டிக்காட்டியதோடு, உலகிலேயே பெரிய பணக்காரரான எலான் மஸ்க் கூட, தனது அறிவிப்புகள் அனைத்தையும் 'எக்ஸ்' தளத்தில் தான் வெளியிடுகிறார் என்று கூறியுள்ளார்.

மேலும், தவெக அரசு குறித்து யாரும் அவசரமாக 'ரன்னிங் கமென்ட்ரி' கொடுக்க தேவையில்லை என்றும், அமைச்சர் செங்கோட்டையன் போன்றோரை தவிர, 100-க்கும் மேற்பட்டோர் முதன்முறை எம்எல்ஏக்கள். அவர்களுக்கு கால அவகாசம் கொடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், தவெக எம்எல்ஏவை குத்துவிளக்கு ஏற்றவிடாமல் சென்னை மேயர் அவமதித்துவிட்டார் என்பதை சர்ச்சையாக கருத தேவையில்லை என்றும், இதுபோன்றதை விட்டுவிட்டு, தெருக்களில் குப்பைகள் முறையாக அள்ளப்படுகிறதா, நாய் தொல்லை குறைந்துவிட்டதா என்பது போன்ற மக்கள் நலன் சார்ந்த பிரச்சினைகளை பேசினால் சந்தோஷம் என்று கார்த்தி சிதம்பரம் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
English Summary
MP Karti Chidambaram opines that no one needs to provide a running commentary regarding the DMK government