மு.க.ஸ்டாலின் சென்னை வருகை திடீர் மாற்றம்! ஏமாற்றத்துடன் கலைந்து சென்ற முக்கிய நிர்வாகிகள்... தாமதத்திற்கான பின்னணி என்ன...?
MK Stalin visit Chennai changed dramatically Key executives left disappointed What reason delay
வெளிநாட்டு பயணத்தை நிறைவு செய்து மு.க.ஸ்டாலின் இன்று காலை சென்னை திரும்புவார் என்ற அறிவிப்பைத் தொடர்ந்து, விமான நிலையத்தில் தி.மு.க.வினர் பிரமாண்ட வரவேற்புக்கு சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்தனர். ஆனால் விமானத்தின் வருகை நேரம் திடீரென மாற்றப்பட்டதால், உற்சாகத்துடன் காத்திருந்த தொண்டர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்லும் நிலை ஏற்பட்டது.முதலில் வெளியிடப்பட்ட தகவலின்படி, காலை 8 மணியளவில் மு.க.ஸ்டாலின் சென்னை வந்து சேருவார் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து அதிகாலை முதலே விமான நிலைய வளாகத்தில் தி.மு.க. தொண்டர்கள், நிர்வாகிகள் மற்றும் முக்கிய நிர்வாகப் பொறுப்பாளர்கள் திரளத் தொடங்கினர். வரவேற்பை சிறப்பிக்கும் வகையில் சிறிய மேடை அமைத்து, அதில் நின்று முதல்-அமைச்சர் தொண்டர்களின் வாழ்த்துகளை ஏற்றுக்கொள்ளும் ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

இதற்காக மேடை அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்ட நிலையில், பாதுகாப்பு மற்றும் நிர்வாக காரணங்களை சுட்டிக்காட்டி காவலர்கள் அதற்கு அனுமதி வழங்கவில்லை. இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.அதேபோல், தாரை, தப்பட்டை உள்ளிட்ட பாரம்பரிய இசைக் கருவிகளுடன் வந்திருந்த கலைக்குழுவினர் இசை நிகழ்ச்சியை தொடங்கியபோது, முதல்-அமைச்சர் விமான நிலையம் வந்த பிறகே இசைக்க வேண்டும் என்று காவலர்கள் அறிவுறுத்தியதால், இசை நிகழ்ச்சியும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
இந்த பரபரப்பான சூழலுக்கு மத்தியில், லண்டனில் இருந்து சென்னை நோக்கி புறப்பட இருந்த மு.க.ஸ்டாலின் பயணித்த விமானம் தாமதமானதாக தகவல் வெளியானது. இதன் காரணமாக அவர் காலை அல்லாமல் இன்று இரவு 8 மணியளவில்தான் சென்னை வந்தடைவார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இந்த தகவல் வெளியாகியதும், பல மணி நேரமாக விமான நிலையத்தில் காத்திருந்த தி.மு.க.வினர் ஏமாற்றமடைந்தனர். அங்கு திரண்டிருந்த கட்சியின் மூத்த நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள், அனைவரிடமும் நிலைமையை விளக்கி, இரவு மீண்டும் வருகை தருமாறு கேட்டுக்கொண்டனர்.
இதையடுத்து, அங்கு கூடியிருந்த தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் அமைதியான முறையில் கலைந்து சென்றனர். மு.க.ஸ்டாலினுக்கு இரவு நேரத்தில் மீண்டும் உற்சாகமான வரவேற்பு அளிக்க கட்சியினர் தயாராகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
English Summary
MK Stalin visit Chennai changed dramatically Key executives left disappointed What reason delay