''புதுச்சேரி இப்போது கொலைச்சேரியாக மாறிவிட்டது; திமுக வேட்பாளர் நேர்மையான பின்புலம் கொண்டவர்''; வீடியோ பதிவில் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம்..! - Seithipunal
Seithipunal


புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரம் நாளையுடன் முடிவடைகின்ற நிலையில், திமுக வேட்பாளர் சேது செல்வத்துக்கு ஆதரவாக அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் வீடியோ பதிவில் பிரச்சாரம் செய்து அதனை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது;

''தமிழகம் போல புதுச்சேரி மக்களின் வளத்துக்கும், நலத்துக்கும் பங்காற்றிய கட்சி திமுக. புதுச்சேயில் கடந்த சில ஆண்டாக ஆளுநர் மூலம் ஆபத்து வந்தபோது மாநிலத்துக்காக திமுக போராடியது.

திமுக ஆட்சி புதுச்சேரியில் நடந்தபோதெல்லாம் புதிய திட்டங்களை நிறைவேற்றியுள்ளோம். சொன்னதை செய்வோம், செய்வதை சொல்வோம் என்ற கலைஞர் வாக்குப்படி புதுச்சேரி வளர்ச்சிக்கு பாடுபட்டுள்ளோம். தாலிக்கு தங்கம் திட்டம், சத்துணவில் முட்டை, லாஸ்பேட்டை உழவர் சந்தை ஆகியவை திமுக அரசின் சாதனைகள். இதனை மனதில் வைத்து தட்டாஞ்சாவடி தொகுதி மக்கள் வாக்களிக்க வேண்டும்.

இது மக்கள் மீது திணிக்கப்பட்ட இடைத்தேர்தல். ரங்கசாமி பொது தேர்தலில் 2 தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். சட்டப்படி ஒரு தொகுதி பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்பதால் தட்டாஞ்சாவடி தொகுதியை கைவிட்டுவிட்டார். அவரை நம்பி வாக்களித்த உங்களை கைகழுவி விட்டார். இம்முறை நீங்களும் அவரை கைவிட்டு விடுங்கள்.

என்.ஆர். காங்கிஸ் - பாஜக கூட்டணி வேட்பாளராக ஒருவரை நிறுத்தியுள்ளனர். அவர் யார் என்பது என்னைவிட உங்களுக்கு நன்றாக தெரியும். கடந்த முறை அவர் போட்டியிட நீதிமன்றம் ஏன் தடை விதித்தது என உங்களுக்கு தெரியும். அவரைத்தான் ரங்கசாமி வேட்பாளராக நிறுத்தியுள்ளார். மறுபுறம் காங்கிரஸ் ஒரு வேட்பாளரை நிறுத்தியுள்ளது.

என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் ஊழல் சாம்ராஜ்ஜியத்துக்கு சொந்தக்காரர் என்றால், காங்கிரஸ் வேட்பாளர் சாராய சாம்ராஜ்ஜியத்துக்கு சொந்தக்காரர் என்பது அனைவருக்கும் தெரிந்தே உள்ளது. ஆனால், திமுக வேட்பாளர் நேர்மையான பின்புலம் கொண்டவர். வேட்பாளர் சேதுசெல்வம் தொழிலாளர்களுக்காக போராடி சிறை சென்றவர். அவரை தேர்வு செய்தால் மக்களுக்காக உண்மையாக உழைப்பார்.

ரங்கசாமி மக்களுக்கு செய்த நன்மைகள் ஏதும் இல்லை? தொகுதியில் எம்எல்ஏ அலுவலகம்கூட இல்லை. இலவச வீட்டுமனை பட்டா கிடைக்க, தொழில்பேட்டையில் புதிய தொழிற்சாலைகள் அமைய, மின்வெட்டுக்கு தீர்வு காண திமுகவுக்கு வாக்களியுங்கள்.இடைத்தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சியா மலரப்போகிறது என சிலர் கேட்கின்றனர். ஆட்சி மாற்றம் நடக்காவிட்டாலும், தொகுதியில் காட்சி மாற்றம் நடக்கும்.

என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி ஆட்சியில் புதுச்சேரி இப்போது கொலைச்சேரியாக மாறிவிட்டது. ஒரு வாரத்துக்கு சர்வசாதாரணமாக 4 கொலை நடக்கிறது. பட்டப்பகலில், நண்பகலில், மாலையில், நள்ளிரவில் என அடுக்கடுக்காக கொலை நடக்கிறது. முதல்வர் ரங்கசாமி, உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் என்ன செய்கின்றனர்? குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என சொல்லக்கூட வாய் திறக்காத ஆட்சி நடக்கிறது.

இரட்டை இன்ஜின் ஆட்சி இருந்தால், நல்லாட்சி நடக்கும் என்றனர். ஒரு இன்ஜினும் இங்கு வேலை செய்யவில்லை. சட்டம் - ஒழுங்கு, நிர்வாக சீர்குலைவு புதுச்சேரியை வாட்டி வதைக்கிறது. இதையெல்லாம் தட்டிக்கேட்க திமுக வேட்பாளர் வெற்றி பெற வேண்டும்.

பிரச்சினை வரும்போது மட்டும் மாநில அந்தஸ்து அஸ்திரத்தை ரங்கசாமி கையில் எடுப்பார். சட்டப்பேரவையில் தீர்மானம் போடும் ரங்கசாமி, அதிகாரிகள் தடுக்கின்றனர் என கூப்பாடு போடும் ரங்கசாமி, எம்எல்ஏக்களை டெல்லி அழைத்து சென்று போராடலாமே? ஏன் செய்யவில்லை? மத்தியில் உள்ளது கூட்டணி அரசுதானே உள்ளது.

கடந்த தேர்தலில் புதுச்சேரிக்கு மாநில தகுதி பெற்றுத்தருவேன் எனக்கூறித்தானே ஆட்சிக்கு வந்தீர்கள். நம்பி வாக்களித்த மக்களுக்கு என்.ஆர்.காங்கிரஸும், பாஜகவும் செய்ததெல்லாம் துரோகம் மட்டும்தான். கடந்த தேர்தலில் திமுக முதுகில் குத்திய காங்கிரஸ் இப்போது களம் காண்கிறது. கடந்த தேர்தலில் கூட்டணியில் இருந்துகொண்டே 5 தொகுதியில் வேட்பாளர்களை காங்கிரஸ் நிறுத்தியது. ஆனால் திமுக துரோகத்தை வென்றெடுத்தது.

காலாப்பட்டு, ராஜ்பவன் தொகுதியில் திமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். துரோகிகள் படுதோல்வி அடைந்தனர். அதே தோல்வியை, இன்னும் சொன்னால், தட்டாஞ்சாவடி தொகுதியில் காங்கிரஸுக்கு டெபாசிட் கூட கிடைக்கக்கூடாது.

புதுச்சேரியை பொறுத்தவரை காங்கிரஸ் கட்சி முடிந்து போன அத்தியாயம். நமக்கு எதிராக நிற்கும் 2 வேட்பாளர்களுக்கும் பாடம் புகட்ட வேண்டும். சட்டப்பேரவையில் மக்கள் குரல் ஓங்கி ஒலிக்க மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் சேது செல்வத்துக்கு வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும்.'' என்று அவர் வீடியோ பதிவில் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

MK Stalin campaigns in a video post stating that Puducherry has now turned into a place of murders


கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?


செய்திகள்



சினிமா

Seithipunal
--> -->