திமுக-வுக்கு ‘டாடா’ காட்டிய வைகோ..! திமுக கூட்டணியில் இருந்து மதிமுக விலகல்...! - தவெக-வுடன் கைகோர்க்கிறாரா...?
MDMK shows Tata DMK MDMK withdraws from DMK alliance Vaiko joining hands Tvk
தமிழக அரசியல் அரங்கில் பெரும் அதிர்வலைகளை கிளப்பும் வகையில், தி.மு.க. கூட்டணியில் இருந்து விலகுவதாக ம.தி.மு.க. அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும், த.வெ.க.வுடன் கூட்டணி அமைப்பது தொடர்பான இறுதி முடிவு தேர்தல் நேரத்தில் எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி மறைவுக்கு பின்னர், கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் தி.மு.க. அணியில் ம.தி.மு.க. இடம்பிடித்தது. அதன் பின்னர் 2019 மக்களவைத் தேர்தல் முதல் சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் வரை தொடர்ந்து தி.மு.க. கூட்டணியில் ம.தி.மு.க. பயணித்தது.

ஆனால் சமீபத்திய சட்டமன்றத் தேர்தலில், ம.தி.மு.க. எதிர்பார்த்த அளவுக்கு தொகுதிகள் ஒதுக்கப்படாதது கட்சிக்குள் கடும் அதிருப்தியை உருவாக்கியது. மொடக்குறிச்சி, மதுரை தெற்கு, கடையநல்லூர், சீர்காழி ஆகிய 4 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்பட்டதுடன், உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிட வேண்டிய நிலையும் உருவானது.
இது கட்சித் தொண்டர்களிடையே ஆழமான மனக்கசப்பை ஏற்படுத்தியது.அந்த தேர்தலில் தி.மு.க. கூட்டணி தோல்வியை சந்தித்தபோதிலும், ம.தி.மு.க. போட்டியிட்ட 4 தொகுதிகளில் கடையநல்லூர் மற்றும் சீர்காழி ஆகிய 2 தொகுதிகளில் வெற்றி பெற்றது.இதற்கிடையே, சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியமைத்த த.வெ.க. தலைவர் விஜய், முழுமையான பெரும்பான்மை இல்லாத சூழலில் கூட்டணி ஆதரவுடன் ஆட்சியை அமைத்தார்.
தி.மு.க. அணியில் இருந்த காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் த.வெ.க. அரசுக்கு ஆதரவு தெரிவித்தன.இதில் சில கட்சிகள் அமைச்சரவையிலும் இடம்பிடித்தன. அதே நேரத்தில், ம.தி.மு.க.வும் த.வெ.க.வுடன் அரசியல் ரீதியாக நெருக்கம் காட்டத் தொடங்கியது.
எனினும், உதயசூரியன் சின்னத்தில் வெற்றி பெற்ற 2 எம்.எல்.ஏ.க்கள் காரணமாக நேரடி ஆதரவு வழங்கும் நிலை உருவாகவில்லை.இதற்கிடையே, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ சமீபத்தில் முதலமைச்சர் விஜய்யை நேரில் சந்தித்து பேசியது அரசியல் வட்டாரத்தில் பல்வேறு ஊகங்களை கிளப்பியது.இதனால், வைகோ தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியேறுகிறாரா என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தில் தீவிரமாக பேசப்பட்டது.
இந்த நிலையில், சென்னை எழும்பூரில் உள்ள ம.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற உயர்நிலைக் குழு கூட்டத்தில் கூட்டணியின் எதிர்காலம் குறித்து தீவிர ஆலோசனை நடத்தப்பட்டது.இந்த கூட்டத்தில் சீர்காழி எம்.எல்.ஏ. செந்தில் செல்வன் பங்கேற்காதது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தி.மு.க. கூட்டணியில் இருந்து விலகுவதற்கு அவர் விருப்பம் இல்லை என்றும், இதன் காரணமாகவே கூட்டத்தை புறக்கணித்ததாகவும் தகவல்கள் வெளியாகின.மேலும் அவர் தி.மு.க.வில் இணையக்கூடும் என்ற தகவல்களும் அரசியல் வட்டாரத்தில் பரவியதால் பரபரப்பு அதிகரித்தது.
இந்நிலையில், சென்னை அண்ணாநகரில் நடைபெற்ற ம.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.அதில், தி.மு.க. கூட்டணியில் இருந்து அதிகாரப்பூர்வமாக விலகுவது என முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் த.வெ.க.வுடன் கூட்டணி அமைப்பது தொடர்பான இறுதி முடிவு தேர்தல் நேரத்தில் எடுக்கப்படும் என்றும், த.வெ.க. அரசுக்கு வாழ்த்து தெரிவிக்கும் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
MDMK shows Tata DMK MDMK withdraws from DMK alliance Vaiko joining hands Tvk