'உருவ கேலி பேசுவது பொறுப்பற்ற செயல்'...! - முதல்வர் விஜய்யின் சட்டசபை உரைக்கு பெ.சண்முகம் கண்டனம்...!
Making fun images irresponsible P Shanmugam condemns Chief Minister Vijay assembly speech
தமிழ்நாடு சட்டமன்றத்தில் காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் முதல்-அமைச்சர் சி.ஜோசப் விஜய் வழங்கிய பதிலுரை, மக்கள் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் அமையவில்லை என்று கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் கடுமையாக விமர்சித்துள்ளார்.இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,"சட்டமன்றத்தில் நேற்று காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது.

இதில் உறுப்பினர்கள் சட்டம்-ஒழுங்கு, காவல்துறையின் செயல்பாடு உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரச்சினைகள் குறித்து கேள்விகளை எழுப்பினர்.ஆனால், அந்த கேள்விகளுக்கு உரிய விளக்கங்களை அளிப்பதற்கு பதிலாக, முதல்-அமைச்சரின் பதிலுரை பெரும்பாலும் எதிர்க்கட்சியை குறிவைத்து முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளால் நிரம்பியிருந்தது.
மக்கள் சந்திக்கும் அன்றாட பிரச்சினைகள் குறித்து தெளிவான பதில்களோ, அவற்றுக்கான தீர்வுகள் குறித்த அறிவிப்புகளோ இடம்பெறவில்லை.மத்திய அரசின் கட்டுப்பாட்டில் பல்வேறு ஜனநாயக அமைப்புகள் செயல்படும் சூழலில், அமலாக்கத்துறை முன்வைக்கும் குற்றச்சாட்டுகளை மட்டும் அடிப்படையாக வைத்து அவற்றை ஊழல் குற்றச்சாட்டுகளாக வகைப்படுத்துவது எந்த வகையிலும் ஏற்புடையதல்ல.
முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட சம்பவத்தையும், பின்னர் அந்த வழக்கில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் குறித்து நீதிமன்றம் தெரிவித்த கருத்துகளையும் நாடு அறியும்.அதேபோல், கேரள முதல்-அமைச்சர் பினராயி விஜயன் தொடர்பாக தங்கக் கடத்தல் வழக்கு உள்ளிட்ட விவகாரங்களில் அமலாக்கத்துறையின் செயல்பாடுகள் குறித்தும் பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன.
எனவே, அமலாக்கத்துறை முன்வைக்கும் குற்றச்சாட்டுகளை மட்டும் உறுதியான ஆதாரங்களாக சட்டமன்றத்தில் முன்வைப்பது சரியான அணுகுமுறை அல்ல.இந்தியாவில் அவசரநிலை அமல்படுத்தப்பட்ட காலகட்டத்தில் ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காக பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன. அவற்றைத் தொடர்ந்து அடக்குமுறைகளும், அத்துமீறல்களும் இடம்பெற்றது வரலாற்றில் பதிவாகியுள்ளது.அந்த காலகட்டத்தில் முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காவலர்களால் கடுமையாக தாக்கப்பட்டு, அவரது தாடை உடைக்கப்பட்டதாகவும் பெ.சண்முகம் குறிப்பிட்டுள்ளார்.
அரசியல் எதிரிகளை உருவ கேலிக்கு உள்ளாக்கும் வகையில் யார் பேசினாலும் அது கண்டனத்திற்குரியது. குறிப்பாக, முதல்-அமைச்சரே இதுபோன்ற கருத்துகளை தெரிவிப்பது பொறுப்பற்ற செயலாகும்.மக்களின் நலனுக்காக செயல்பட வேண்டிய சட்டமன்றத்தை தனிநபர்களை குறிவைத்து தாக்குதல் நடத்தும் களமாக மாற்றுவது முற்றிலும் தவறான அணுகுமுறையாகும்.
அதேபோல், தங்கள் கட்சித் தலைவர்களை புகழ்ந்து பேசுவதற்கான மேடையாகவும் சட்டமன்றத்தை பயன்படுத்துவது ஜனநாயக மரபுகளுக்கு ஏற்றதல்ல.அரசியல் ரீதியான கடுமையான விமர்சனங்களை முன்வைப்பதில் எந்த தவறும் இல்லை. ஆனால் அவை நாகரிகமான முறையிலும், உரிய அரசியல் தளத்திலும் வெளிப்படுத்தப்பட வேண்டும்.
ஏழை, எளிய மக்கள் உள்ளிட்ட தமிழக மக்கள் செலுத்தும் வரிப்பணத்தின் மூலமே சட்டமன்ற நடவடிக்கைகள் நடைபெறுகின்றன. எனவே, சட்டமன்றத்தின் ஒவ்வொரு நிமிடமும் மக்கள் நலனுக்காக பயன்படுத்தப்பட வேண்டியது அவசியம்.மக்களின் வாழ்வாதாரம், அடிப்படை வசதிகள், சட்டம்-ஒழுங்கு உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகள் குறித்து விவாதிக்க வேண்டிய அவை நேரத்தை தனிநபர் தாக்குதல்களுக்காக பயன்படுத்துவதை யார் செய்தாலும் ஏற்றுக்கொள்ள முடியாது.
மக்களின் குரல் ஒலிக்க வேண்டிய சட்டமன்றம், அரசியல் மோதல்களுக்கான அரங்கமாக மாறாமல், தமிழக மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் பயனுள்ள விவாதங்களுக்கான தளமாக செயல்பட வேண்டும்.இவ்வாறு பெ.சண்முகம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
English Summary
Making fun images irresponsible P Shanmugam condemns Chief Minister Vijay assembly speech