கொடநாடு வழக்கு || ஈபிஎஸ் குறித்து பரபரப்பு கிளப்பிய தனபாலுக்கு செக்! சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
MadrasHC allows EPS to file case against Dhanapal
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கொடநாடு பங்களாவில் அரங்கேற்றப்பட்ட கொலை கொள்ளை சம்பவத்தில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு தொடர்பு இருப்பதாக அந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கார் ஓட்டுநர் கனகராஜன் சகோதரர் தனபால் குற்றம் சாட்டி இருந்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் எடப்பாடி பழனிச்சாமி சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தனபாலுக்கு எதிராக ஒரு கோடியே 10 லட்சம் ரூபாய் மான நஷ்ட ஈடு கேட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவில் "அதிமுக பொதுச் செயலாளராக பொறுப்பேற்ற நிலையில் தனது நற்பெயருக்கு களங்கம் கற்பிக்கும் வகையில் தனபால் பொய்யான தகவலை பேசி வருகிறார். அடுத்த ஆண்டு நாடாளுமன்ற பொது தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதிமுகவுக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கை குலைக்கும் நோக்கத்தோடு தனது அரசியல் எதிரிகளின் தூண்டுதலால் தனபால் இதுபோன்ற பேசி வருகிறார்.
எனவே கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் தன்னை பற்றி தனபால் பேசுவதற்கு தடை விதிக்க வேண்டும். நஷ்ட ஈடாக ஒரு கோடியே 10 லட்சம் ரூபாய் வழங்க உத்தரவிட வேண்டும்" என அந்த மனுவில் தெரிவித்திருந்தார்.

மேலும் கொடநாடு வழக்கில் சாட்சிகளை கலைத்ததாக கைது செய்யப்பட்ட தனபால் தான் மனநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி ஜாமீன் பெற்றுள்ளதாகவும் அந்த மனுவில் சுட்டிக் காட்டியுள்ளார். இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி மஞ்சுளா முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த மனுவின் மீது விசாரணை நடத்திய நீதிபதி மஞ்சுளா தனபால் மீது அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வழக்கு தொடர்வதற்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டார். இதனால் தனபாலுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே அவர் இந்த விவகாரம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் முன்பாக ஆஜராகி சாட்சியமளித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
MadrasHC allows EPS to file case against Dhanapal