மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: பிரச்சாரம் ஓய்ந்தது.. நாளை வாக்குப்பதிவு! பலத்த பாதுகாப்பு ஏற்பாடு - Seithipunal
Seithipunal


தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. இதையடுத்து, இரு தொகுதிகளிலும் நாளை செவ்வாய்க்கிழமை காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தேர்தலை முன்னிட்டு இரு தொகுதிகளிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளில் தவெக தலைவர் விஜய் போட்டியிட்டு வெற்றி பெற்றதாகவும், பின்னர் முதல்வர் பதவியை ஏற்ற நிலையில் திருச்சி கிழக்கு தொகுதி எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ததாகவும் கூறப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக அதிமுகவைச் சேர்ந்த சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர், மரகதம் குமரவேல், ஜெயக்குமார், சத்தியபாமா, இசக்கி சுப்பையா உள்ளிட்ட 6 எம்எல்ஏக்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்ததாக தெரிவிக்கப்பட்டது.

இதனால் மொத்தம் 7 சட்டப்பேரவைத் தொகுதிகள் காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதில் திருச்சி கிழக்கு, விராலிமலை, கரூர், பெருந்துறை, அம்பாசமுத்திரம் ஆகிய 5 தொகுதிகள் தொடர்பான தேர்தல் வழக்குகள் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளுக்கு மட்டும் இடைத்தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது.

மதுராந்தகம் தொகுதியில் தவெக சார்பில் மரகதம் குமரவேல், திமுக சார்பில் பரந்தாமன், அதிமுக சார்பில் கணிதா சம்பத், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சுகந்தி, நாம் தமிழர் கட்சி சார்பில் ஜானகிராமன் உள்ளிட்ட வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். சுயேச்சைகள் உள்ளிட்ட மொத்தம் 28 வேட்பாளர்கள் இந்த தொகுதியில் களத்தில் உள்ளனர்.

தாராபுரம் தொகுதியில் தவெக சார்பில் சத்தியபாமா, திமுக சார்பில் சுகன்யா, அதிமுக சார்பில் பானுமதி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் லட்சுமணன், நாம் தமிழர் கட்சி சார்பில் கார்த்திகா உள்ளிட்ட வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். குறிப்பாக, தவெக அரசுக்கு ஆதரவு அளித்து வரும் இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் இந்த இடைத்தேர்தலில் தனித்தனியாக களமிறங்கியுள்ளன. மதுராந்தகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், தாராபுரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் போட்டியிடுவதால் தேர்தல் களம் பலமுனைப் போட்டியாக மாறியுள்ளது.

இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாள் முதல் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளில் அரசியல் பரபரப்பு அதிகமாக காணப்பட்டது. வேட்பாளர்கள் மட்டுமின்றி முக்கிய அரசியல் கட்சிகளின் தலைவர்களும் இரு தொகுதிகளிலும் முகாமிட்டு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

தமிழக முதலமைச்சரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய், செப்டம்பர் 25-ம் தேதி மதுராந்தகத்திலும், செப்டம்பர் 30-ம் தேதி தாராபுரத்திலும் பிரச்சாரம் மேற்கொண்டார். அதேபோல் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் வீரபாண்டியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் சண்முகம் உள்ளிட்டோரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

திமுக மற்றும் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்களும், தவெக சார்பில் அமைச்சர்களும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில் முகாமிட்டு வாக்கு சேகரித்தனர். பிரச்சாரத்தின் கடைசி நாளான நேற்று தாராபுரம் தொகுதியில் முதல்வர் விஜய் ரோட் ஷோ நடத்தி வாக்கு சேகரித்தார். இதேபோல் திமுக தலைவர் ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோரும் கடைசி நேரத்தில் வீடியோ வாயிலாக வாக்காளர்களிடம் ஆதரவு கோரினர்.

தேர்தல் விதிமுறைகளின்படி நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் முழுமையாக நிறைவடைந்தது. இதையடுத்து மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளில் தங்கியிருந்த வெளியூர் நபர்கள் வெளியேற்றப்பட்டனர். நேற்று மாலை 6 மணி முதல் நாளை காலை 6 மணி வரை பிரச்சாரம், பொதுக்கூட்டம் உள்ளிட்ட தேர்தல் தொடர்பான நடவடிக்கைகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், நாளை காலை 7 மணிக்கு இரு தொகுதிகளிலும் வாக்குப்பதிவு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. வாக்குப்பதிவுக்கான இறுதிக்கட்ட ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ளிட்ட தேர்தல் உபகரணங்கள் இன்று காலை முதல் வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன.

தேர்தல் நாளில் எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாத வகையில் இரு தொகுதிகளிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வாக்குச்சாவடிகள் மற்றும் முக்கிய பகுதிகளில் போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ள நிலையில், மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தலின் முடிவை அரசியல் கட்சிகள் மட்டுமின்றி தமிழக அரசியல் வட்டாரங்களும் மிகுந்த எதிர்பார்ப்புடன் எதிர்நோக்கியுள்ளன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Madhuranthakam and Dharapuram byelections Campaigning ends polling tomorrow Heavy security arrangements in place


கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?


செய்திகள்



சினிமா

Seithipunal
--> -->