''மாணவர் தமிழ்ச்செல்வன் மரணத்தை கண்டித்து போராடியவர்கள் மீது கொடூர தாக்குதல் நடத்தியமை மனித உரிமை மீறல்: கம்யூ. மு.வீரபாண்டியன் கண்டனம்..! - Seithipunal
Seithipunal


''மாணவர் தமிழ்ச்செல்வன் மரணத்தை கண்டித்து மதுரை காவல் துறை ஆணையர் அலுவலகம் முன் போராடியவர்கள் மீது கொடூர தாக்குதல் நடத்திய காவல் துறையினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவரின் மரணத்தை கொலை வழக்காகப் பதிவு செய்து விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும்.'' என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது;

''மதுரை ஆனையூர் கூடல் புதூரை சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்ற மாணவர் கடந்த ஏழாம் தேதி மர்மமான முறையில் இறந்துள்ளார். 11 ஆம் வகுப்பு படித்து வந்த அந்த மாணவரின் உடல் முட்புதர்கள் நிறைந்த குட்டை பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. மாணவரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், அது கொலையாக இருக்கலாம் எனவும் உறவினர்கள் கூறி வருகின்றனர்.

மாணவர் இறந்து ஒரு வார காலம் ஆகியும், அவரது உடலை வாங்க தாயார் யோகலட்சுமி மறுத்து வருகிறார். அவரது மரணத்தை கொலை வழக்காக பதிவு செய்ய வேண்டும், மகன் மரணத்துக்குக் காரணமான குற்றவாளிகளை கண்டறிந்து, சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி வருகிறார்.

இது தொடர்பாக காவல் துறை எந்த நடவடிக்கையையும் இதுவரை எடுக்காத நிலையில், மதுரை காவல் துறை ஆணையர் அலுவலகம் முன்பாக போராட்டம் உறவினர்களால் நடத்தப்பட்டுள்ளது. போராட்டத்தில் பங்கேற்ற பெண்களை காவல் துறையினர் மிக மோசமான முறையில் தாக்கியுள்ளனர்.

சாலையில் தவறி விழுந்த பெண்ணின் கழுத்தை பெண் காவலர்கள் காலால் மிதிக்கின்ற கொடூரமான காட்சி பல்வேறு ஊடகங்களிலும் வெளிவந்துள்ளது.

காவல் துறையினரின் இத்தகைய கொடூரமான தாக்குதல் மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. அதுவும் முதல்வர் பொறுப்பில் உள்ள காவல் துறையைச் சேர்ந்த அதிகாரிகளே, மனித உரிமை மீறல் நடவடிக்கைகளில் ஈடுபடுவது மிகுந்த கவலை அளிக்கிறது. இது கடும் கண்டனத்திற்குரியது.

போராடிய மக்கள் மீது கொடூர தாக்குதல் நடத்திய காவல் துறையினர் மீது நடவடிக்கை எடுப்பதோடு, மாணவரின் மரணத்தை கொலை வழக்காகப் பதிவு செய்து விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு, தமிழ்நாடு அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது.'' எனத் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

M Veerapandian condemns the attack on those protesting against the death of student Tamilselvan terming it a human rights violation


கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?


செய்திகள்



Seithipunal
--> -->