லீமா ரோஸ் களமிறக்கம் – லாட்டரி லீமா ரோஸின் 'மாஸ்டர் பிளான்': எடப்பாடியிடம் போட்ட டீல்..? அதிரும் அரசியல் களம்..! - Seithipunal
Seithipunal


தமிழக அரசியலில் எப்போதும் கவனம் ஈர்க்கும் திருவாடானை சட்டமன்றத் தொகுதி, 2026 தேர்தலுக்கு முன்னதாகவே உச்சக்கட்ட பரபரப்பை எட்டியுள்ளது. நடிகரும் முன்னாள் எம்.எல்.ஏ-வுமான கருணாஸ் காரணமாக ‘விஐபி தொகுதி’ என்ற பெயர் பெற்ற திருவாடானை, தற்போது லாட்டரி அதிபர் மார்ட்டினின் மனைவி லீமா ரோஸின் அரசியல் என்ட்ரியால் மீண்டும் பேசுபொருளாக மாறியுள்ளது.

திருவாடானை தனது சொந்த ஊர் என்பதால், “சொந்த மண்ணில் தான் போட்டியிட வேண்டும்” என்ற உறுதியுடன் லீமா ரோஸ் களம் காண தயாராக இருப்பதாக அரசியல் வட்டாரங்களில் கூறப்படுகிறது. சமீபத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை அவர் சந்தித்தது, ஒரு மரியாதை சந்திப்பு அல்ல; 2026 தேர்தலை மையமாகக் கொண்ட முக்கிய அரசியல் பேச்சுவார்த்தை எனவே பார்க்கப்படுகிறது. அதிமுக கூட்டணியில் இடம்பெறும் ஒரு கட்சி மூலம் திருவாடானை தொகுதியைத் தனக்கு ஒதுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தி வருவதாக தகவல்கள் கசிகின்றன. அவரது அபரிமிதமான நிதி வலிமை, இராமநாதபுரம் மாவட்டத்தில் அதிமுக கூட்டணிக்கு பெரிய பலமாக அமையும் எனவும் கணிக்கப்படுகிறது.

லீமா ரோஸின் வருகையால், ஏற்கனவே திருவாடானையை குறிவைத்திருந்த அரசியல் புள்ளிகளிடையே பதற்றம் அதிகரித்துள்ளது. அதிமுக மாவட்டச் செயலாளர் முனியசாமி, கடந்த இரண்டு முறை முதுகுளத்தூரில் தோல்வியடைந்த நிலையில், இந்த முறை வெற்றி ஒன்றையே இலக்காகக் கொண்டு திருவாடானையில் முகாமிட்டு பணிகளை தீவிரப்படுத்தியுள்ளார். அதேபோல், ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ஜெயப்பிரதாப்பும் இந்தத் தொகுதியின் மீது கண் வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

ஆளுங்கட்சி தரப்பிலும் போட்டி குறையவில்லை. இளைஞர்களுக்கு வாய்ப்பு வழங்க விரும்பும் உதயநிதி ஸ்டாலினிடம், இளைஞர் அணி சார்பில் திருவாடானையை ஒதுக்க வேண்டும் என இன்பா ராகு கோரிக்கை வைத்துள்ளார். உதயநிதியின் ஆதரவு இவருக்கு முக்கிய பலமாக பார்க்கப்படுகிறது. மேலும், அமைச்சர் ராஜகண்ணப்பனின் மகன் திலீப், தந்தைக்கு முதுகுளத்தூரில் சீட் மறுக்கப்பட்டால் மாற்றுத் தொகுதியாக திருவாடானையை பாதுகாப்பான இடமாக கருதுகிறார். திமுக மாவட்டச் செயலாளரும் இராமநாதபுரம் எம்.எல்.ஏ-வுமான காதர் பாட்சா முத்துராமலிங்கமும், ஒருவேளை தனது தற்போதைய தொகுதி கூட்டணிக் கட்சிகளுக்குப் போனால், திருவாடானையில் போட்டியிடத் தயாராக இருப்பதாக சொல்லப்படுகிறது.

இதற்கிடையே, காங்கிரஸ் கட்சியின் சிட்டிங் எம்.எல்.ஏ கருமாணிக்கமும் மீண்டும் களம் காணத் தயாராகி வருகிறார். இத்தனை அரசியல் கனவுகளுக்கும், லீமா ரோஸின் பிடிவாதமான அரசியல் நுழைவும் சேர்ந்து, திருவாடானை தொகுதியை பணபலமும் அதிகார பலமும் நேரடியாக மோதும் ‘மெகா போர்க்களமாக’ மாற்றியுள்ளது.

2026 தேர்தலில் திருவாடானை யாருடைய வசம் செல்லும் என்பது இப்போதே அரசியல் வட்டாரங்களில் “மில்லியன் டாலர் கேள்வி”யாக மாறியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Lima Rose entry into the lottery Lima Rose master plan A deal with Edappadi The political arena is shaking


கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?



Advertisement

கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?




Seithipunal
--> -->