ரூ.30 லட்சம் கட்டிடம்! முதல்வர் ஸ்டாலின் திறந்துவைத்த 3 நாளில் மேற்கூரை பூச்சு விழுந்து சேதம்!
kumbakonam VAO office building damage
முதல்வர் ஸ்டாலின் காணொலியில் திறந்துவைத்த மூன்றே நாளில், புதிய ஊராட்சி மன்ற அலுவலகத்தின் மேற்கூரை சிதைந்த சம்பவம் தஞ்சாவூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜூன் 16ஆம் தேதி, திருவிடைமருதூர் வட்டம் சூரியனார்கோவிலில் ரூ.30 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய ஊராட்சி மன்ற அலுவலகம், முதல்வரால் காணொலி வாயிலாக திறக்கப்பட்டது. அதற்குப் பிறகு, பழைய அலுவலகத்தில் இருந்த கோப்புகள் மற்றும் உபகரணங்களை புதிய கட்டிடத்திற்கு மாற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். அந்த நேரத்தில், ஒரு அறையின் மேற்கூரையில் இருந்த சிமெண்ட் பூச்சுகள் உரிந்து கீழே விழுந்தது, ஊழியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இதுகுறித்து வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. அதிகாரிகள், சேதமடைந்த பகுதிகள் விரைவில் சீரமைக்கப்படும் என தெரிவித்தனர்.
முன்னாள் ஊராட்சித் தலைவர் முருகன் கூறும்போது, கட்டிடம் திறக்குமுன்பே சில அறைகளில் இதுபோல் சிமெண்ட் பூச்சுகள் உதிர்ந்ததாகவும், அவை வெளிச்சத்திற்கு வராமலிருப்பதற்காக அலுவலக ஊழியர்கள் கதவுகளை பூட்டிவிட்டு சீரமைப்பு செய்ததாகவும் குற்றம்சாட்டினார்.
தொடர்ந்து, “மேற்கூரையில் மின் விசிறி பொருத்தும்போது, சிமெண்ட் சிதைந்து விழுந்தது; விரைவில் சரிசெய்யப்படும்” என அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.
English Summary
kumbakonam VAO office building damage