கோவளம் நன்னீர்த் தேக்கம் : 16 மீனவ கிராமங்களின் வாழ்வாதாரத்தை விழுங்கும் திட்டமா? - சீமான் கடும் எதிர்ப்பு
Kovalam Freshwater Reservoir Is this project that swallow livelihoods 16 fishing villages Seeman expresses strong opposition
கோவளம் நன்னீர்த் தேக்கத் திட்டம் குறித்து தமிழ்நாடு அரசு உடனடியாக மறுபரிசீலனை செய்ய வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையாக வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் (X) சமூக வலைதளப் பதிவில், இந்தத் திட்டம் தொலைநோக்குப் பார்வையற்றதாகவும், சூழலியல் சமநிலையையும், மீனவ மக்களின் வாழ்வாதாரத்தையும் கேள்விக்குள்ளாக்கும் ஆபத்தான முயற்சியாகவும் இருப்பதாக சாடியுள்ளார்.

சென்னை மாநகரின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்காகவும், வெள்ள பாதிப்புகளை குறைப்பதற்காகவும் என்ற பெயரில், செங்கல்பட்டு மாவட்டத்தின் திருப்போரூர் மற்றும் திருக்கழுக்குன்றம் தாலுகாக்களில், கிழக்கு கடற்கரை சாலை (ECR) மற்றும் பழைய மகாபலிபுரம் சாலை (OMR) இடையே அமைந்துள்ள கோவளம் துணை வடிநிலப் பகுதியில் புதிய நன்னீர்த் தேக்கம் அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
471 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படவுள்ள இந்தத் திட்டம், 4,375 ஏக்கர் பரப்பளவில் உள்ள உப்பங்கழி மற்றும் தாழ்வுநிலப் பகுதிகளைச் சுற்றி, 30.6 கிலோமீட்டர் நீளத்தில் மண் கரைகள் அமைப்பதன் மூலம் உருவாக்கப்பட உள்ளது. இத்திட்டத்திற்கு கடந்த டிசம்பர் 3-ம் தேதி கடற்கரை மண்டல மேலாண்மை அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் சீமான் குறிப்பிட்டுள்ளார்.
நன்னீர்த் தேக்கத் திட்டங்கள் அவசியமானவையே என்றாலும், குறிப்பிட்ட இந்த இடத்தில் முன்மொழியப்பட்டுள்ள திட்டத்தின் பின்விளைவுகளை அரசு ஆழமாக ஆராய வேண்டியது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார். இந்தத் திட்டம் அந்தப் பகுதியின் இயற்கை சூழலியல் கட்டமைப்பை முற்றிலும் சீர்குலைப்பதோடு, 16-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களின் வாழ்வாதாரத்தை வேரறுக்கும் அபாயம் கொண்டது என அவர் எச்சரித்தார்.
கடற்கரை ஒழுங்குமுறை மண்டல அறிவிக்கை (CRZ Notification 2019, Annexure-IV) விதிகளின்படி, பாரம்பரிய மீன்பிடி இடங்கள் (பாடு) தெளிவாக வரைபடத்தில் குறிக்கப்பட வேண்டும். ஆனால், இத்திட்டத்திற்கான அனுமதியில், மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி பகுதிகள் “வெற்று நிலம்” (Vacant Land) என தவறாகக் காட்டப்பட்டுள்ளதாக சீமான் குற்றம்சாட்டினார்.
இதன் மூலம், உப்பங்கழிகளில் தலைமுறைகளாக மீன்பிடித்து வரும் மீனவர்கள் மற்றும் பழங்குடி இருளர் சமூகத்தின் வாழ்வாதார உரிமைகள் பறிக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.மேலும், நூற்றாண்டு பழமையான பக்கிங்காம் கால்வாயின் இயற்கை நீரோட்டத்தை மாற்றுவது, மழைக்காலங்களில் நீர் வடிகாலைக் கெடுத்து, பெரும் வெள்ள அபாயத்தை உருவாக்கும் என்றும், கடலுக்கும் கால்வாயுக்கும் இடையிலான இயற்கை தொடர்பு துண்டிக்கப்படுவதால் கடல்சார் சூழலியல் சமநிலை சீர்குலையும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.
உப்பங்கழிகள் என்பது கடல் நீர் புகுந்து செல்லும் உவர்நீர் சூழல்கள். அங்கு நன்னீரைத் தேக்குவது, இயற்கையான உப்புத்தன்மையை மாற்றி, இறால் மற்றும் மீன்களின் இனப்பெருக்கச் சுழற்சியை அழிக்கும் அபாயத்தை ஏற்படுத்தும். மேலும், இந்தப் பகுதி புலம்பெயர் பறவைகள் மற்றும் அரிய கடல்வாழ் உயிரினங்களின் முக்கிய வாழ்விடமாக விளங்குகிறது.
நன்னீர்த் தேக்கம் உருவானால், இந்த முழு உயிரியல் சூழலும் நிரந்தரமாக அழிந்துவிடும் என சீமான் சுட்டிக்காட்டினார்.இதற்கு மேலாக, இதே பகுதியில் தமிழக அரசின் நெம்மேலி கடல்நீரை குடிநீராக்கும் நிலையம் ஏற்கனவே செயல்பட்டு வரும் நிலையில், ஒருபுறம் கடல்நீரை சுத்திகரித்து குடிநீராக்கும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, மறுபுறம் இயற்கை உப்பங்கழிகளை அழிக்கும் திட்டத்தை முன்மொழிவது எந்த வகையில் நியாயமானது என்ற கேள்வியையும் அவர் எழுப்பினார்.
மேலும், பாதிக்கப்படவுள்ள மக்களுடன் ஆலோசனை நடத்தாமல், திட்டப் பணிகளுக்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படுவது மக்களாட்சித் தத்துவத்திற்கு முற்றிலும் எதிரானது என்றும் அவர் விமர்சித்தார்.சென்னையின் குடிநீர் தேவையையும் வெள்ளநீர் மேலாண்மையையும் சீரமைப்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்தில்லை. ஆனால், அதற்காக இயற்கை வளங்களை அழிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் சீமான் வலியுறுத்தினார்.
செம்பரம்பாக்கம், புழல், பூண்டி, சோழவரம் ஆகிய ஏரிகளை நவீன தொழில்நுட்பத்துடன் தூர்வாருதல், தற்போதுள்ள நன்னீர்த் தேக்கங்களில் கழிவு நீர் கலக்காமல் பாதுகாப்பது, கால்வாய்களை முறையாக பராமரிப்பது போன்ற நடவடிக்கைகளால் அதிக அளவில் நன்னீரை சேமிக்க முடியும் என்றார்.
மேலும், உப்பங்கழிகளை அழிக்காமல், அவற்றைச் சுற்றியுள்ள சிறு ஏரிகளை ஆழப்படுத்தி நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்துவதன் மூலம், உப்பு நீர் ஊடுருவலைத் தடுக்கலாம் என்றும் அவர் பரிந்துரைத்தார். வளர்ச்சி என்பது நிலத்தையும், இயற்கை வளங்களையும், அந்த நிலத்தைச் சார்ந்து வாழும் மக்களையும் ஒருங்கிணைக்கும் ஒன்றாக இருக்க வேண்டும்.
16 மீனவ கிராமங்களின் வாழ்வாதாரத்தை பலிகொடுத்து உருவாக்கப்படும் இந்த நன்னீர்த் தேக்கம், சூழலியல் மீட்டுருவாக்கமாக இல்லாமல், அழிவின் தொடக்கமாகவே மாறும் என சீமான் கடுமையாக சாடினார்.எனவே, தமிழக அரசு உடனடியாக இந்த கோவளம் நன்னீர்த் தேக்கத் திட்டத்தை கைவிட்டு, சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்று வழிகளின் மீது கவனம் செலுத்த வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் சார்பில் வலியுறுத்துவதாக அவர் தெரிவித்துள்ளார்.
English Summary
Kovalam Freshwater Reservoir Is this project that swallow livelihoods 16 fishing villages Seeman expresses strong opposition