திமுக கூட்டணி பேச்சுவார்த்தை இறுதிக்கட்டம்: விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக! - Seithipunal
Seithipunal


2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு திமுக தலைமையிலான கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. தோழமை கட்சிகளுடன் நடைபெற்று வரும் பேச்சுவார்த்தையை நாளைக்குள் முடிக்க வேண்டும் என்று திமுக தலைமையகம் பேச்சுவார்த்தை குழுவிற்கு அறிவுறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அந்த தகவல்களின் படி, விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 8 தொகுதிகளும், மதிமுகக்கு 4 தொகுதிகளும் ஒதுக்கீடு செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் திமுக நேரடியாக குறைந்தது 160 தொகுதிகளில் போட்டியிடும் திட்டத்தில் இருப்பதாகவும், உதயசூரியன் சின்னத்தில் கூட்டணி கட்சிகள் உட்பட மொத்தம் 175 தொகுதிகள் வரை களமிறங்கும் சூழல் உருவாகியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக நேரடியாக 173 தொகுதிகளிலும், உதயசூரியன் சின்னத்தில் 188 தொகுதிகளிலும் போட்டியிட்டது. ஆனால் இந்த முறை கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்திருப்பதால், தொகுதி பங்கீட்டில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகளும் ஒரு ராஜ்யசபா இடமும் வழங்கப்பட்டுள்ளன. அதேபோல் தேமுதிகவுக்கும் ஒரு ராஜ்யசபா இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் மனிதநேய மக்கள் கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகள் வழங்கப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து கடந்த பிப்ரவரி 22ஆம் தேதி முதல் திமுக கூட்டணி கட்சிகளுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. தகவல்களின் படி தேமுதிகவுக்கு 10 தொகுதிகள், மக்கள் நீதி மய்யம் மற்றும் கொமதேகவுக்கு தலா 2 தொகுதிகள், கருணாஸ், தமீமுன் அன்சாரி, ஆதித்தமிழர் பேரவை, தவாக, எஸ்டிபிஐ உள்ளிட்ட கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி வழங்கும் வகையில் பேச்சுவார்த்தை முன்னேறியுள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால் தேமுதிகவுக்கு அதிக தொகுதிகள் வழங்கப்படுவதை காரணம் காட்டி விசிக, சிபிஐ, சிபிஎம் உள்ளிட்ட கட்சிகள் தங்களுக்கும் இரட்டை இலக்கத்தில் தொகுதிகள் வழங்க வேண்டும் என வலியுறுத்தியதாக தகவல்கள் வெளியாகின. இதையடுத்து திமுக மூத்த தலைவர்கள் அந்த கட்சிகளுடன் தனித்தனியாக பேச்சுவார்த்தை நடத்தினர்.

அதன் விளைவாக விசிக 8 தொகுதிகளுக்கும், சிபிஐ 6 தொகுதிகளுக்கும் ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. இதேசமயம் மதிமுக தனது சொந்த சின்னத்தில் போட்டியிட வேண்டும் என வலியுறுத்தியதால், அந்தக் கட்சிக்கு 4 தொகுதிகள் வழங்கும் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையில் திருச்சியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணியின் பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளதால், அதற்கு முன்பாகவே கூட்டணி தொகுதி பங்கீட்டை முடித்து ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் அடுத்த இரண்டு நாட்களுக்கு அண்ணா அறிவாலயத்தில் கூட்டணி பேச்சுவார்த்தைகள் தீவிரமாக நடைபெறும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

DMK alliance talks in final stage VcK 8 MDMK 4 DMK to complete seat sharing by tomorrow


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!




Seithipunal
--> -->