கேரள உள்ளாட்சி வெற்றி: 2026 தமிழக தேர்தலுக்கு ‘இந்தியா’ கூட்டணிக்கு உற்சாக சைகை...! - செல்வப்பெருந்தகை
Kerala local body election victory encouraging sign INDIA alliance ahead 2026 Tamil Nadu elections Selva Perunthagai
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது,"கேரளாவில் சமீபத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (யுடிஎப்) அபார வெற்றியை பதிவு செய்துள்ளது. நான்கு மாநகராட்சிகள், 54 நகராட்சிகள், 7 மாவட்ட பஞ்சாயத்துகள், 77 ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் 498 கிராம பஞ்சாயத்துகள் என பெரும்பாலான உள்ளாட்சி அமைப்புகளை காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி கைப்பற்றியுள்ளது.

குறிப்பாக மாவட்ட பஞ்சாயத்துகளில் கிடைத்த இந்த வெற்றி, இன்னும் மூன்று மாதங்களில் நடைபெறவுள்ள கேரள சட்டமன்றத் தேர்தலுக்கான முன்னோட்டமாக அமைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த தேர்தல் முடிவுகள், மாநிலத்தில் ஆட்சி செய்து வரும் கூட்டணிக்கு கடும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளன என்றும் தெரிவித்துள்ளார்.கேரளாவில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி பெற்றுள்ள இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றி, 2026-ம் ஆண்டு தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலிலும் இந்தியா கூட்டணி மீண்டும் வெற்றி பெற்று நல்லாட்சி அமையப் போவதற்கான உறுதியான அறிகுறியாகும் என செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் 2021 சட்டமன்றத் தேர்தலில் மொத்தமாக பதிவான வாக்குகளில் 2.09 கோடி வாக்குகளையும், 45.3 சதவீத வாக்குப் பங்கையும் திமுக தலைமையிலான மதசார்பற்ற கூட்டணி பெற்றதன் மூலம் ஆட்சி அமைந்தது. தற்போதைய நிலையில் தமிழக அரசின் மக்கள் நலத்திட்டங்கள் மூலம் மாதந்தோறும் 1.86 கோடி பேர் பயனடைந்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதனை அடிப்படையாகக் கொண்டு, வருகிற சட்டமன்றத் தேர்தலில் 2.5 கோடி வாக்குகளைப் பெறுவதை இலக்காக வைத்து இந்தியா கூட்டணி செயல்பட்டு வருவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இலக்கு நிர்ணயித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி, நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 16 சதவீத பங்களிப்புடன் தமிழ்நாடு முதலிடத்தில் இருப்பதோடு, மாநிலத்தின் மொத்த உள்நாட்டு மதிப்பு ரூ.31.19 லட்சம் கோடியாகவும், தனிநபர் வருமானம் ரூ.3.61 லட்சமாகவும் உயர்ந்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
மறுபுறம், இந்தியா கூட்டணிக்கு எதிரான அதிமுக கூட்டணியில் பாஜகவைத் தவிர வேறு எந்தக் கட்சியும் இதுவரை இணைய முன்வரவில்லை. பாமக உள்கட்சி மோதலால் பிளவுபட்டிருக்கிறது; அதிமுகவும் உட்கட்சிப் பிரச்சினைகளால் சிக்கியுள்ளது. இந்நிலையில், 2021-ல் இந்தியா கூட்டணி பெற்ற வாக்குகளை மீண்டும் ஒருங்கிணைக்கும் வாய்ப்பு வலுவாக இருப்பதாகவும், 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழகத்தில் இந்தியா கூட்டணி உறுதியான வெற்றியை பெறும் என்ற நம்பிக்கை உருவாகியுள்ளதாகவும் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
இந்த நம்பிக்கைக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் கேரள உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி பெற்ற அபார வெற்றி ஒரு முக்கிய முன்னோட்டமாக அமைந்துள்ளதாக கூறிய அவர், இந்த வெற்றிக்காக கேரள மாநில காங்கிரஸ் தலைவர் உள்ளிட்ட அனைத்து தோழர்களையும் மனப்பூர்வமாக பாராட்டி வாழ்த்துவதாக தெரிவித்துள்ளார்.
English Summary
Kerala local body election victory encouraging sign INDIA alliance ahead 2026 Tamil Nadu elections Selva Perunthagai